பயான் செய்யும் முறைகள்

M.G.பாரூக்

பொருளடக்கம் -

முன்னுரை

¢ இந்த நூலில் என்ன உள்ளது?  ¢ பிரச்சாரமே ஆயுதம்  ¢ நன்மைகளை கொள்ளையடிக்க எளியவழி. ¢ பேச்சுக்கலை  ¢ சிறந்த உரை என்பது பேச்சின் அங்கங்கள் v தெளிவான கருத்து மற்றும் கோர்வை v குர்ஆன் வசனத்தை பயன்படுத்தும் முறைகள். v அரபில் ஓதி, பிறகு தமிழில் விளக்குங்கள். v உதாரணங்களை கொண்டு விளக்குதல் v கருத்துக்களை கொண்டு விளக்குதல் v முன்னுரையும், முடிவுரையும் பேச்சில் அலங்காரங்கள் v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (குர்ஆன், ஹதீஸில்) v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (மற்றவற்றிலும்) v கதை கேட்பதை விரும்பும் மனித இயல்பு. v பல்சுவையில் பேசவேண்டும். v பல்சுவை - தேவைப்படும் இடங்களில், லோக்கல் பாஷையில் பேசுங்கள். v பல்சுவை - ஏற்ற, இறக்கங்கள். v பீடிகை என்றால் என்ன?  பீடிகை எதற்கு? v துணைச்செய்தி சுருக்கமாக இருப்பது அவசியம் v 3 விஷயங்கள், 4 விஷயங்கள் போன்ற ஹதீஸ்களை பயன்படுத்துங்கள். v தத்துவங்களை, கையில் ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள். v அனைவரையும் குற்றம் சாட்டக்கூடாது. v சிந்தனையை தூண்டும் எதிர் கேள்விகள், வாதங்கள். v அரபி, ஆங்கில பழமொழிகள் v புதுமொழிகள் (பன்ச் டயலாக்) ஒன்றோ, இரண்டோ பயன்படுத்துங்கள் v பிறமத அறிஞர்களின் சொற்களை சொல்லிக்காட்டுங்கள். v நீதிமன்ற தீர்ப்புகள், நீதிபதிகளின் வார்தைகளை சுட்டிக்காட்டுங்கள். v ஒப்பிட்டு பேசுவது சிந்திக்கத்தூண்டும் v குர்ஆன், ஹதீஸ் கூறும் அறிவியல் செய்திகள் அவசியம். v ஆதாரங்களைக் காட்டி மக்களின் கவனத்தை ஈர்த்தல் v உதாரணங்களை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்துதல் v எடுத்துக்காட்டுகளும் மிக முக்கியமானவை v வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள் - பேசுங்கள் v அதிகம் கேள்விப்படாத ஹதீஸ்களை பயன்படுத்துங்கள் v துணிச்சலாக, உறுதியாக பேசுவது, நம்பிக்கையை அதிகப்படுத்தும். v தவறான எதிர்கருத்தை சாடிப்பேசுவது v உணர்வுப்பூர்வமான, உருக்கமான செய்திகளை பயன்படுத்துங்கள். v ஆச்சர்யமான செய்திகளை பயன்படுத்துங்கள். v நகைச்சுவையை பயன்படுத்துவதில் தவறில்லை. v நகைச்சுவை சரி. படிப்பினை என்ன? v நிகழ்கால பிரச்சனைகளை கலந்து பேசுங்கள். v நன்மை செய்யத் தூண்டிப் பேசுங்கள். v கப்ரு, சொர்க்கம், நரகம், விசாரனையை பற்றி சொல்லுங்கள் v புதுசெய்திகள் ஆர்வத்தை அதிகப்படுத்தும். v ஆர்வத்தை அதிகப்படுத்தும் சில செய்திகள்,  உதாரணத்திற்காக. v தவறான நம்பிக்கைகளை அகற்றுதல். v முதல் ஈர்ப்பே, சிறந்த ஈர்ப்பு. பேச்சில் தவிர்க்கவேண்டியவை. v சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். v தேவையானதை பேசுங்கள். தெரிந்ததையெல்லாம் பேசாதீர்கள். v சஸ்பென்ஸ் வேண்டாம். v பீடிகையின் போது கவனம் தேவை v வர்ணனையின் போது கவனம் தேவை v பொருத்தமற்ற காரணங்களை கொண்டு, நீரூபிக்க பார்க்காதீர்கள். v இதுவெல்லாம் தப்பு. என்று ஒருவரியில் சாதிக்கப்பார்க்காதீர்கள். v தீர்வை சொல்லுங்கள். v தெளிவின்றி, பொத்தாம் பொதுவாக பேசாதீர்கள் v ஒவ்வொரு வரியையும் முடியுங்கள். v அல்லாஹ்வை பற்றி பேசும் போது வார்த்தை கவனம் தேவை. v பிறமத சித்தாந்தங்களை, புலவர்களின் செய்யுளை பயன்படுத்தாதீர்கள். v தவறான கொள்கை உடையவர்களை உதாரணம் காட்டாதீர்கள். v சுயவிளம்பரம், தம்பட்டம், புலம்புதல் கூடவே கூடாது. v பிற ஜமாத்களை பற்றி, குறைசொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். v சினிமா காமெடிகளை பயன்படுத்தாதீர்கள். v நாகரீகமான நகைச்சுவை. v முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். v நீ, போ, வா என்று எப்போது பேசலாம்?? v சட்டப்பிரச்சனைகளை உருவாக்கிவிடாதீர்கள். v மென்மையாக அல்லது ஆக்ரோஷமாக பேசவேண்டிய இடங்கள். v பொருத்தமில்லாத ஹதீஸை பயன்படுத்தாதீர்கள் v மட்டுப்படுத்தாதீர்கள். உற்சாகப்படுத்துங்கள். v பிற பேச்சாளர்களின் கருத்துகளை சொல்லும் போது, v ஆடியன்ஸாக இருந்து சரிபாருங்கள். v சரியான செய்தியை தவறாக புரிந்துகொள்ளாத வகையில் பேசுங்கள். v உங்கள் குறைகளை நீங்களே பகிரங்கப் படுத்தாதீர்கள். v விதிவிலக்குகளை அவசியமான நேரத்தில் தெளிவுபடுத்திவிடுங்கள். v அதை பின்னால் சொல்லுகிறேன். என்று எஸ்கேப் ஆகாதீர்கள். v பழமொழியை பயன்படுத்துதல். v தன் பேச்சை தானே பொய்யாக்குதல் v பேப்பரை பார்த்து படித்துப் படித்துப் பேசுவதை தவிருங்கள். v அனுபவமுள்ள பிற பேச்சாளர்களின் வீடியோக்களை பாருங்கள். v அதிகமாக படியுங்கள். கேள்விக்கு பதிலளிப்பது v கேள்வியின் தொனிக்கு தகுந்தார்போல பதில் சொல்லாதீர்கள். v ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடாது. v பதிலை சுருக்கமாக சொல்விட்டு பிறகு விளக்குவது சிறந்தது. v மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள். v ஆர்வமூட்டுவதாக நினைத்துக்கொண்டு, ஃபரளாக்கிவிடாதீர்கள். v சலுகைகளை சொல்லுவதற்கு தயங்காதீர்கள். v சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள் v கேள்விக்கு சீட்டு பெறுவது பாதுகாப்பான முறை. பேச்சாளர் சந்திக்கும் பிரச்சனைகள் v ஏற்கனவே கேட்டவர் இருப்பதை பெரிதுபடுத்தாதீர்கள். v மக்கள் பேசிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? v அனைவரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமற்றது. புதியவர்களின் சந்தேகமும், ஆலோசனைகளும். v எனக்கு புது செய்திகள் நினைவிற்கு வருவதில்லையே! v எல்லா குறிப்புகள் இருந்தும், பேசமுடிவதில்லையே! v நான் கடகடவென வேகமாக பேசுவதாக மக்கள் சொல்கிறார்களே! v தனக்கென்று ஒரு பானி - ஸ்டைல் தேவையா? v பயானில்,  (கருத்துள்ள) பாட்டு பாடலாமா? v இலக்கிய நடையில் (எதுகை மோனையாக) பேசலாமா? v ரசிக்கத்தகுந்த பேச்சு நடைகள் v புதியவர்களுக்கு, பயத்தை போக்க சில அறிவுரைகள் v புதியவர்களுக்கான மேலும் சில அறிவுரைகள் v புதியவர்கள், இஸ்லாம் இனிய மார்க்கம் நடத்த முடியுமா? v உலகளாவிய பேச்சாளர்களின் பயிற்சி முறைகள். v விவாதத்திற்கு தேவையான திறன்கள் v குர்ஆன், ஹதீஸை அதன் எண்களுடன் மனப்பாடமாக சொல்லவேண்டுமா? v தனிநபர் தாஃவா பயானில் கவனிக்கவேண்டியவை பிற அம்சங்கள் v சுறுசுறுப்பு உற்சாகம். v தெளிவான குரல் v உடல்மொழி – பாடி லாங்குவேஜ் v மேடையின் அமைப்பும், தோற்றமும் முக்கிய பங்கு வகிப்பவை. v ஆடியோ சரியில்லாவிட்டால், பேசுவதில் பயனில்லை. v ஆடியன்ஸை தெரிந்துகொள்ளுங்கள். v ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன்.. v மக்களின் சூழ்நிலையை கவனித்து உரை நிகழ்த்துங்கள் v நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் v நேரம் தாண்டாதீர்கள். அழைப்பாளரின் பொறுப்புகளும், கடமைகள். v சகஜமாக பழகுங்கள். வலுக்கட்டாயமாக பேசுங்கள். v நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். v பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். v விரும்பியதை செயல்படுத்தலாம் v அல்ஹம்துலில்லாஹ்  v இன்னாலில்லாஹ். முன்னுரை பயான் என்ற அரபி வார்த்தைக்கு விளக்குதல் என்று பொருள். குர்ஆனையும், ஹதீஸையும் உதாரணங்களைக் கொண்டும், கருத்துக்களைக் கொண்டும் மக்களுக்கு புரியும்படி விளக்குவதே, பயான் எனப்படும். ¢ பிரச்சாரமே ஆயுதம் வீரியமிகு பிரச்சாரத்தின் மூலம் உறங்கிக்கிடக்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப முடியும். தீமைகளை வேறோடு களைய முடியும். தர்காவே கதி என்று கிடந்த லட்சக்கணக்கான மக்கள், இன்று, இணைவைப்பிலிருந்து விலகி தங்கள் செயலுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்கிறார்கள் என்றால், அல்லாஹ்வின் அருளால், வீரியமிகு பிரச்சாரங்கள் தான் இதற்கு காரணம். நமது ஆலிம்கள் பலஆண்டுகளாக செய்த தீவிர பிரச்சாரத்தின் காரணமாக, ஏராளமான நன்மைகளை கண்கூடாக பார்த்துவருகிறோம். உதாரணமாக,

என நாம் இதுவரை சாதித்த சாதனைகள் அனைத்திற்கும் சிறப்பான பிரச்சாரங்கள் தான் அடிப்படை. எனவே மக்களை சத்தியத்தின் பால் ஈர்ப்பதற்கு, வீரியமிகு பிரச்சாரமே மிகப்பெரிய ஆயுதம் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. (கவர்ச்சியான) பேச்சுக்கு, பிறரை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது என்பதை நபி(ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (மதீனாவின்) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (மக்களுக்கு) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது” என்று கூறினார்கள். (புகாரி: 5146) ¢ நன்மைகளை கொள்ளையடிக்க எளியவழி. ஒருவர் பிரச்சாரகராக இருப்பதன் மூலம் மறுமையில் ஏராளமான நன்மைகளை பெற்றவராக இருப்பார். நன்மை செய்ய பரிந்துரை செய்தால், பரிந்துரை செய்தவருக்கும் அதே அளவு நன்மை வழங்கப்படும் என்ற ஒரு அழகான விதி இஸ்லாத்தில் உள்ளது.

مَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ

”(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. பின்தொடர்ந்தவர்களின் நன்மையில் எதையும் அது குறைத்துவிடாது. மக்களை தவறான வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 4831) உதாரணமாக, உங்கள் அறிவுரையை கேட்டு பத்துபேர் ஹஜ் செய்தால், அவர்களுக்கு கிடைக்கும் அதே நன்மை, அதாவது 10 ஹஜ் செய்த நன்மை உங்களுக்கு தரப்படும். நீங்கள் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் சரி, தூங்கிக்கொண்டிருந்தாலும் சரி. பல லட்சம் செலவு செய்து ஹஜ்ஜுக்கு போனவர்களுக்கு தரப்படும் நன்மையில் எதுவும் உங்களுக்கு குறைக்கப்படாது. அவர்களது நன்மையும் குறைக்கப்படாது. அது போல உங்கள் பிரச்சாரத்தின் மூலம் ஒரு பள்ளிவாசல் கட்டப்படுகிறது எனில், அந்த பள்ளி 1000 வருடம் இருந்தால், ஒரு வேளைக்கு 20 நபர்கள் தொழுதால் கூட, கிட்டத்தட்ட 3 கோடி பேர் தொழுத தொழுகையில் உங்களுக்கும் ஒரு பங்கு நன்மை கிடைக்கும். ¢ தீமைகளை தடுக்க எளிய வழி. ”உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். இயலாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்). இது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 70). நாம் ஒவ்வொரு நாளும் ஷிர்க், பித்அத், ஜோதிடம் என ஏராளமான தீமைகளை கண்ணில் பார்க்கிறோம். அவற்றை தடுப்பதற்கு நமது கைபலத்தை உபயோகப்படுத்த முடிவதில்லை. குறைந்தபட்சம் நாவால் பிரச்சாரம் செய்தாவது தடுக்கவேண்டும். அதற்கும் பிரச்சாரத்தை தவிர சிறந்த வழி எதுவுமில்லை. ¢ பிரச்சாரத்தின் பயனை முதலில் தானே அடைந்துகொள்கிறார். ஒரு பிரச்சாரகர் பிறருக்கு சொல்வதற்காக சட்டங்களை படித்தாலும், அதன் முதல் பயனை அவர் தான் அடைந்துகொள்கிறார். இணைவைக்கக்கூடாது, வரதட்சனை வாங்கக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, புறம் பேசக்கூடாது என்று ஊருக்கெல்லாம் பிரச்சாரம் செய்தவர், தான் அந்த தவறுகளை ஒருபோதும் செய்யமுடியாது. அவர் தவறு செய்ய நினைத்தாலும், ”ஈமான் கொண்டவர்களே, நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது (61:2)” என்ற குர்ஆன் வசனம், அவரை தவறு செய்யவிடாமல் தடுக்கும். இதுதவிர, ஒரு பேச்சாளர் பிரச்சாரம் செய்வதற்காக நிர்பந்தம் ஏற்பட்டு, பல்லாயிரம் தடவைகள் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் திரும்பத்திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறார். பிரச்சாரம் செய்யாதவர்கள் இந்தஅளவுக்கு படிப்பதில்லை. இவ்வாறு ஒரு பிரச்சாரகர் வாழ்வில் 30 வருடம் செய்த பிரச்சாரங்களுக்குறிய நன்மையையும், அதன் மூலம் பல்கிப்பெருகிய நன்மைகளையும் கணக்கிட்டால், மறுமையில் அவருடைய மீஸான் நிரம்பிவழியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே மறுமையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் சத்திய பிரச்சாரத்தின் அடிப்படையாக உள்ள பேச்சுக்கலையை பற்றி இனி வரிசையாக காண்போம். ¢ பேச்சுக்கலை நம் கருத்தை பிறருக்கு தெரிவிப்பதற்கு பேச்சு என்ற ஊடகம் பயன்படுகிறது., நம் கருத்தை மக்களை ஏற்கச்செய்யும் வகையிலும், எதிர்கருத்தை உடைக்கும் வகையிலும், மக்களுக்கு புரியும் வகையில் தேவையான உதாரணங்கள், தத்துவங்கள், வாதங்கள், ஆதாரங்கள் போன்றவற்றைக் கொண்டு மக்கள் விரும்பும் வகையில் பேசுவதையே பேச்சுக்கலை என்கிறோம். பேச்சுக்கலை உட்பட எந்த கலையையும் அனுபவத்தால் கற்பதற்கு அதிக காலம் தேவைப்படும். 6 வருடத்தில் கற்பதை, பாடமாக படித்து பயிற்சி எடுத்தால் ஆறே மாதத்திலேயே கற்றுக்கொள்ள முடியும். இந்த அடிப்படையில், ஒரு பேச்சாளர் பத்துவருடம் கழித்து பெறும் அனுபவஅறிவை குறுகிய காலத்தில் இந்த நூல் கற்றுத்தருகிறது. ¢ இந்த நூலில் என்ன உள்ளது? புதிதாக பிரச்சாரம் செய்யவிரும்பும் மக்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? தவிர்க்கவேண்டியவை என்ன? பயத்தை வெல்லும் வழிமுறைகள் என்ன? பேச்சாளர் கவனிக்கவேண்டிய புறவிஷயங்கள் என்ன? என பல்வேறு செய்திகள் இந்த நூலில் உள்ளன. ”10 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்கிறேன். நான் பேசினால் யாரும் கேட்பதில்லை. என்னை யாரும் மதிப்பதில்லை” என்று புலம்பும் பேச்சாளர்கள், பிரச்சாரத்தில் செய்யும் தவறுகளையும். கடைபிடிக்கவேண்டிய யுக்திகளையும் இந்த நூல் பட்டியலிடுகிறது. குறிப்பாக மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்வது எப்படி என்று விளக்குவதே இந்த நூலின் முக்கிய நோக்கம். இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாக படித்து செயல்படுத்தினால் அல்லாஹ் நாடினால், நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் ஆவது உறுதி. ¢ தவறான நம்பிக்கைள் மக்களுக்கு பயான் செய்யவேண்டும், அதன் மூலம் நன்மைகளை பெறவேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருந்தாலும், ”பிரச்சாரம் செய்வது மிகவும் கடினமான பணி, அதற்கென்று தனித்திறமை வேண்டும்” என்று நினைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்ய தங்குகின்றனர். குறிப்பாக,

  1. மதரஸாவில் நான்கைந்து வருடம் ஆலிம் படிப்பு படித்தவர்கள் தான் பயான் செய்யமுடியும் என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு. இன்றைக்கு நம்மிடையே பிரச்சாரம் செய்யும் தாயிக்களில் ஏராளமானோர் மதரஸாவில் படிக்காதவர்கள் தான். தங்களது சுயமுயற்சியால் மார்க்க அறிவை வளர்த்துக்கொண்டவர்கள். குறிப்பாக, உலகளாவிய அளவில் பிரச்சாரம் செய்யும் நபர்களில் 80 சதவீதம் பேர், மதரஸா சென்று முறையாக கல்வி பயிலாதவர்கள், தங்களின் சுயமுயற்சியால் சட்டதிட்டங்களை அறிந்துகொண்டு சிறப்பாக பிரச்சாரம் செய்பவர்கள்.
  2. இன்னும் சிலர், ”பேச்சுக்கலை என்பது மனிதன் பிறக்கும் போதே அவருக்கு உள்ள திறமை, இவ்வாறு உள்ளவர்கள் தான் பெரிய பேச்சாளர் ஆகின்றனர்” என்று நினைக்கின்றனர். இந்த நம்பிக்கையும் தவறு. மனிதர்களின் பிறவி மரபணுக்களுக்கும், அறிவுத்திறனுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். எனினும், அதற்கும் சுயமுயற்சியின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய பேச்சுக்கலைக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், மரபணுக்களை விட, சூழ்நிலைக் கல்வியின் மூலமாகவே அறிவுத்திறன் அதிகமாகிறது அல்லது குறைகிறது என்று, பேராசிரியர் கிராஸ் (Dr.Kraus,Ph.D,Psychology dep, Illinois University,Urbana,US) அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பேச்சுக்கலை என்பது வளர்த்துக் கொள்வதுதானேயன்றி பிறவியிலேயே உள்ள திறமை அல்ல.
  3. இன்னும் சிலர், ”நான் மக்களிடம் பேசும்போது, கைகால் நடுக்கம், பயம் ஏற்படுகிறது,  இது எதிர்மறை அறிகுறி (Negative Feedback). எனவே எனக்கு மேடைப்பேச்சு வராது, இந்த பயம் இல்லாதவர்கள் தான் பேசமுடியும்” என்று நினைக்கின்றனர், இந்த கருத்தும் தவறு. விதிவிலக்கான ஒருசிலரைத் தவிர இன்றைக்கு இருக்கும் பேச்சாளர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் பயம், நடுக்கம் ஏற்பட்டவர்கள் தான். எனவே, பேசஆரம்பிக்கும் போது, பயம் வருவது, உங்களுக்கு பேச்சுத்திறன் இல்லை என்பதற்கான அறிகுறி இல்லை. இது அனைவருக்குமே ஏற்படக்கூடியது தான்.

இதுபோன்ற தவறான நம்பிக்கைகளை முதலில், உங்கள் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டு, உங்களாலும் பேசமுடியும், மார்க்கத்தை மக்களுக்கு போதிக்கமுடியும், என்று உறுதியான நம்பிக்கை வையுங்கள். ¢ சிறந்த உரை என்பது

  1. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இருக்கவேண்டும்.
  2. உன்னித்து கவனித்தால் தான் விளங்கும் என்றில்லாமல், குறைந்த மூளைத்திறனை கொண்டு விளங்கக்கூடியதாக தெளிவாகவும் கோர்வையாகவும் இருக்கவேண்டும்.
  3. மக்களை அந்த செய்தியின் பால் ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டும். அதாவது தொழுகையை பற்றி சொன்ன பிறகு தொழவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வேண்டும்.
  4. நம் கருத்தை நிறுவவும், எதிர்கருத்தை உடைக்கவும் தேவையான நேர்மையான, வலிமையான வாதங்கள் மற்றும் சான்றுகள் உடையதாக இருக்கவேண்டும்.
  5. மக்களை சலிப்பூட்டாத வகையிலும், நாகரீகமான வார்த்தைகளை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
  6. போதுமான தகவல்கள் உள்ளடக்கியதாகவும், சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய தீர்வை சொல்லக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

இந்த விதிகளின் அடிப்படையில் பயான் செய்யும் முறைகளையும், மக்களை கவரும் யுக்திகளையும் இனி வரிசையாக காண்போம். பேச்சின் அங்கங்கள் எளிய வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், ஒரு பயான் என்பது ஒரு முன்னுரையும், நடுப்பகுதியும், முடிவுரையும் கொண்டதாகும்.

முன்னுரை

நான்கைந்து பகுதிகள் கொண்ட நடுப்பகுதி

முடிவுரை

முன்னுரை பயானின் நோக்கத்தை தெரிவிக்கிறது. முடிவுரை, இதுவரை பேசிய செய்திகளை நினைவூட்டி மக்களை செயல்பட அழைப்பு விடுக்கிறது. நடுப்பகுதி பயானின் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியது. எளிதாக புரியவைப்பதற்காகவும், நினைவில் வைப்பதற்காகவும் நடுப்பகுதி ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியும் சில குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அதன் விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் கொண்டதாக இருக்கும். v முன்னுரை எந்த பயானுக்கும் முன்னுரை தருவது அவசியம். உதாரணமாக, பெற்றோர்களைப் பற்றி பேசுகிறீர்கள் எனில், ”நமக்கு உள்ள உறவுகளில், மிகமிக முக்கியமானது இந்த பெற்றோர் என்ற உறவு. இன்றைக்கு, மிகமிக அலட்சியம் செய்யப்படும் உறவாகவும், இந்த உறவுதான் உள்ளது. ஒருவன் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும், பெற்றோரை பேணாமல் இருந்தால், மறுமையில் வெற்றி பெறமுடியாது…..” என்று இரண்டு நிமிடத்திற்கு, எடுத்த தலைப்பை பற்றி பேசிவிட்டு, பிறகு குர்ஆன் வசனம், ஹதீஸ், அதற்கு தேவையான விளக்கங்கள், உதாரணங்கள் என பேச்சை தொடர வேண்டும். நாம் என்ன சொல்ல வருகிறோம், என்று மக்கள் புரிந்துகொள்வதற்கு இந்த முன்னுரை மிகவும் அவசியமானது. அரைமணி நேர உரைக்கு 5 நிமிட முன்னுரையே அதிகபட்சமானது. முன்னுரை எதிர்பார்ப்பு நிறைந்த பகுதியாக இருப்பதால் கருத்துச் செறிவானதாக இருக்கவேண்டும். Ì Attention Grabber (அட்டென்ஷன் கிராப்பர்) என்பது என்ன? ஒரு உரையின் ஆரம்பத்தில் முக்கியமான அறிவியல் உண்மை, புள்ளிவிபரம் அல்லது அறிஞர்களின் கூற்று என ஆரம்பத்திலேயே மக்களின் கவனத்தை தன்வசப்படுத்தும் செய்தியை சொல்வதற்கு, பேச்சுக்கலையில், கவனம்திருப்பி (Attention Grabber) என்று சொல்லப்படும். இதன் மூலம், அந்த உரையில் நல்ல தகவல்கள் இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நபி(ஸல்) அவர்களின் உரையில் இதனை அதிகமாக பார்க்கமுடியும். ”அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் முஃமினே அல்ல” என்று மூன்று முறை கூறி, சஹாபாக்கள் ஆச்சர்யம் தாங்காமல் அவன் யார் என்று கேட்க, ”அண்டை வீட்டுக்காரனுக்கு துன்பம் தருபவன், முஃமினே அல்ல” என்று பதிலப்பார்கள்.(புகாரி 6016). எனவே, முன்னுரையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதாவது ஒரு செய்தியை சொல்வது நல்லது. v முடிவுரை ஆரம்பம் எப்படி முக்கியமானதோ அதே அளவுக்கு பயானின் இறுதிப்பகுதியும் முக்கியமானது. இடையிலெல்லாம் அருமையான கருத்துக்களை சொல்லிவிட்டு இறுதியில் திக்கித்தடுமாறி, எதையெதையோ பேசி சுறுசுறுப்பில்லாமல் உரையை முடித்தால், உரை முழுமையடைந்ததாக இருக்காது. எனவே முடிவுரையில் கவனம் செலுத்துங்கள். முடிவுரை இரண்டு வகையில் உள்ளது.

  1. இதுவரை சொன்ன செய்திகளையே மீண்டும் நினைவூட்டும் முடிவுரை.
  2. இதுவரை சொன்ன செய்தியின் மையக்கருத்தை வழியுறுத்தும் முடிவுரை.

முதலாவது வகை முடிவுரை, ஒருசில தலைப்புகளுக்குத் தவிர, பெரும்பாலான நேரங்களில் அவசியமற்றது. இரண்டாவது வகை முடிவுரை மிகமிக அவசியமானது. இதுவரை பேசியதன் மையக்கருத்தை வழியுறுத்தும், எதாவது ஒரு அதிரடியான செய்தியையோ, ஹதீஸையோ சொல்லி, உற்சாகமாக உரையை முடிக்கவேண்டும். முன்னர் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லி வெறுப்பேற்றிவிடக்கூடாது. செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தல் (Call to action): முடிவுரையில் இருக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் சொல்லிய அறிவுரையின் அடிப்படையில் இனி மக்கள் என்னசெய்யவேண்டும் என்பது. அதாவது இதுவரை சொன்னதை நினைவுபடுத்துவதோடு, மக்களை செயல்பட அழைக்கும் வேலையையும் முடிவுரை செய்கிறது. v நடுப்பகுதி நடுப்பகுதி ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாகவோ அல்லது உபதலைப்புகளாகவோ பிரிக்கப்படும். பேசவேண்டிய நேரத்திற்கு தகுந்தார்போல், சிறுபகுதிகளின் எண்ணிக்கை இருக்கும். ஒவ்வொரு சிறுபகுதியிலும் சில குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் அதன் விளக்கங்கள் சொல்லப்படும்.

நடுப்பகுதியில் உள்ள ஒரு சிறுபகுதி

சிறுபகுதி 1

சிறுபகுதி 2

சிறுபகுதி 3

சிறுபகுதி n

குர்ஆன், ஹதீஸ்  (அல்லது) ஏதேனும் ஒரு கருத்து (அல்லது) இரண்டும் இணைந்தது, மற்றும் உதாரணம்,நகைச்சுவை,அறிவியல்,etc…

மேலதிகமாக, உதாரணங்கள், எதிர்கேள்விகள், அது சம்பந்தமான தவறான நம்பிக்கைகள், உலக செய்திகள், நகைச்சுவை என பல்வேறு அம்சங்களை நம் விருப்பத்திற்கு தகுந்தார்போல் இணைக்கலாம். v குர்ஆன் வசனத்தை பயன்படுத்தும் முறைகள். ஒரு குர்ஆன் வசனத்தையோ சொல்லிவிட்டு அதன் விளக்கத்தை சொல்லவேண்டும் என்று சொன்னோம் அல்லவா, இதனை பல்வேறு வழியில் செயல்படுத்தலாம். அதாவது, ஒரு கருத்தின் ஆரம்பத்திலும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாம். போகிற போக்கில், சம்பவங்களோடு பின்ணிப்பினைந்த வகையிலும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாம். அறிவுரைகளுக்கு, வியக்கக்கூடிய செய்திகளுக்கு பின்னால் முத்தாய்ப்பாகவும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாம். சில பயன்பாடுகள் கவனத்தை மிகவும் ஈர்க்கும். உதாரணமாக) 1) அறிவுரையின் இறுதியில் முத்தாய்ப்பாக பயன்படுத்துவது : இந்த வகையில் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தினால், மெய் சிலிர்க்க வைத்து, கண் கலங்க வைக்கும். அதாவது ஒரு கருத்தை முதலில் விளக்கிவிட்டு, அதனுடைய அறிவுரையை போதித்துவிட்டு அல்லது ஒரு அறிவியல் கருத்தை விலாவரியாக சொல்லிவிட்டு அதன் இறுதியில், ”இதைத்தான் அல்லாஹ் குர்ஆன்-ல சொல்றான்……” என்று முத்தாய்ப்பாக பயன்படுத்துவது சில அனுபவமுள்ள பேச்சாளர்களின் கைவந்த கலை. அற்புதமான இந்த முறை, மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் நம்பக்கம் ஈர்க்கும். 2) ஏதேனும் சம்பவம் சம்பந்தமாக, இறக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் : ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, இதை கண்டிக்கும் விதமாக, அல்லாஹ் உடனே வசனத்தை இறக்கிவைக்கிறான். என்பது போன்ற ரீதியில் குர்ஆன் வசனத்தை பயன்படுத்துவதும், அதிக சுவாரஸ்யமானது. உதாரணமாக, தனது மகள் ஆயிஷா மீது களங்கம் சுமத்தியவருக்கு இனி உதவி செய்யமாட்டேன்” என்று அபூபக்கர்(ரலி) கூறியபோது, அல்லாஹ் சில வசனங்களை உடனே இறக்கிவைத்தான். ”அவர்களை மன்னியுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை விரும்பமாட்டீர்களா?”. (குர்ஆன் 24:22) இதுபோல, ஏராளமான சம்பவங்களுக்காக, இறக்கப்பட்ட ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவது அதிக சுவாரஸ்யமானது. மக்கள் இது போன்ற செய்திகளை அதிகம் விரும்புவார்கள். Ì தேவையான இடங்களில் அரபி வசனத்தை பயன்படுத்துங்கள். குர்ஆனுடைய கிராத் ஈடில்லாத வகையில் மக்களை ஈர்க்கும் தன்மை உடையது. அதுபோல, ஹதீஸ் சம்பவங்களையும் அரபியில் வர்னணையாக கேட்பதற்கு சுவையாக இருக்கும். எனவே ஹதீஸையும், குர்ஆன் வசனத்தையும் முடிந்தஅளவு அரபி வரிகளோடு பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். பயான் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். மேலும், மார்க்கத்தை அறிந்தவரிடமிருந்து செய்திகளை கேட்கிறோம் என்ற உணர்வின் காரணமாக, பயானை ஆர்வத்தோடு கேட்கத்தூண்டும். இதில் கவனம் இல்லாமல் இருந்தால், உங்கள் உரை குறைவான தரத்தில் தான் மக்களால் மதிக்கப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தரமான பயான் என்றோ, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த உரை என்றோ மக்கள் கருத மாட்டார்கள். அவருக்கு தெரிந்ததை பேசுகிறார் என்றே கருதுவார்கள். எனவே அவ்வப்போது தேவைப்படும் குர்ஆன் வசனங்களை மனனம் செய்துகொள்ளுங்கள். மக்கள் தனக்கு அறிவுரை வழங்குபவர் தன்னைவிட சிறந்தவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதில் எந்த தவறும் இல்லை. எனவே குணத்திலும், அறிவிலும் மற்றவர்களை விட சிறந்தவராக இருப்பது ஒரு பிரச்சாரகரின் அவசியமான தேவை. v உதாரணங்களை கொண்டு விளக்குதல் குர்ஆன், ஹதீஸை விளக்குவதற்கு உதாரணங்களை பயன்படுத்துவது புத்திசாலித்தனமான முறை. திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் அல்லாஹ், தனது கருத்துக்களை விளக்குவதற்கு, பல்வேறு உதாரணங்களை பயன்படுத்துகிறான். உண்மையிலேயே, நூறு தடவை சொன்னாலும் புரியாத விஷயங்களை ஒரே ஒரு உதாரணத்தை கொண்டு விளக்கி புரியவைக்கமுடியும். அவ்வளவு பெரிய ஆற்றல் உதாரணங்களுக்கு உண்டு. உதாரணமாக)

Ì ஆயிரம் வரிகளால் சொல்ல முடியாத கருத்தைக் கூட இந்த உதாரணம் சொல்லிவிடுகிறது.. எனவே சரியான இடத்தில் சரியான உதாரணத்தை பயன்படுத்துவது மிகமிக அவசியமான ஒன்று. v கருத்துக்களை கொண்டு விளக்குதல் குர்ஆனையும், ஹதீஸையும் உதாரணங்களை கொண்டு விளக்குவது போல, கருத்துக்களை கொண்டும் விளக்கவேண்டும். மலக்குகளின் துஆ கிடைக்கும் என்பதை விளக்கும் போது, வெறுமனே ”மலக்குகளே நமக்கு துஆ செய்வார்கள். எவ்வளவு பெரிய அந்தஸ்து பாருங்கள்.” என்று சொல்லிவிட்டு போகாமல், ”மலக்குகள் சுயமாக செயல்படமாட்டார்கள். அல்லாஹ் கட்டளையிட்டால் தான் எதையும் செய்வார்கள். அவர்கள் துஆ செய்கிறார்கள் என்றால், அல்லாஹ்தான் செய்யச்சொல்லியிருக்கிறான். அல்லாஹ்வே சொல்லிவிட்டு, பிறகு அந்த துஆவை அங்கீகரிக்காமல் இருப்பானா?” என்று எந்த குர்ஆன், ஹதீஸையும் அதில் பொதிந்திருக்கும் கருத்தை கொண்டு விளக்கவேண்டும். விளக்குதல் என்பது உதாரணம் மற்றும் கருத்துக்களோடு முடிந்துவிடுவதல்ல. சுவையான பல்வேறு வகைகளில் குர்ஆன், ஹதீஸை விளக்க முடியும். அவற்றை, ”பேச்சில் அலங்காரங்கள்” என்ற அடுத்த பகுதியில் வரிசையாக காண்போம். பேச்சில் அலங்காரங்கள் இதுவரை பேச்சின் பகுதிகளை பார்த்தோம். இனி மக்களை கவர்ந்திழுக்கும் பேச்சு முறைகளையும், அனுபவமுள்ளவர்களின் யுக்திகளையும், குர்ஆன் ஹதீஸை சுவைபட விளக்கும் முறைகளையும் காண்போம். v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (குர்ஆன், ஹதீஸில்) சிறந்த பேச்சாளர்களின் பேச்சுக்கும், காலத்தை கடத்தும் பேச்சாளர்களின் பேச்சுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளில் மிக முக்கியமான ஒன்று, சிறந்தவர்கள், தகவல்கள் நிறம்பப் பேசுவார்கள், அவர்களின் பயானிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள முடியும் அளவிற்கு, தகவல்கள் இருக்கும். ஏனோதானோ என்று பயானையும், காலத்தையும் ஒட்டுபவர்கள், பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு, நேரத்தை ஓட்டுவார்கள். எனவே ஹதீஸை சொல்லும்போது, நபியிடத்தில் ஒரு சஹாபி வந்தார். அப்போது இன்னோரு சஹாபி அருகில் இருந்தார். முதல் சஹாபி இரண்டாவது சஹாபியை பார்த்தார்…… என்று அரைகுறை தகவலோடு எந்த ஹதீஸையும் சொல்லாதீர்கள். கேட்பதற்கு ஆர்வம் இருக்காது. மாற்றுமத புராணக்கதைகள் போல் ஆகிவிடும். எனவே, வரலாற்றை, சம்பவத்தை கூறும் போது சஹாபியின் பெயர், சில நேரங்களில், மிக சுருக்கமாக அவருடைய சிறப்பு, என சரியான தகவல்களோடு சொல்லுங்கள். அது தான் நீங்கள் சொல்லும் செய்தி சரி என்பதற்கு ஆதாரமாக அமையும். இந்த ஹதீஸை புகாரியில பார்க்கிறோம். நஸயீல 235வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்று சொல்வதும் ஆதாரமான செய்தியாக பார்க்கப்படும். v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (மற்றவற்றிலும்) பொதுவான உலக சம்பவங்களை பற்றி பேசும் போதும், மேற்குறிப்பிட்ட அதே அளவுகோல் தான். விளக்கப்படும் எந்த சம்பவத்தையும், மொட்டையாக சொல்லாதீர்கள். சரியான பெயர், இடம், நடந்த காலம் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லுங்கள். உதாரணமாக, இருவரது பேச்சை கவனியுங்கள்.

மேற்காணும் இரண்டு வகையான பேச்சில், இரண்டாவது பேச்சு அதிகமான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு. பொதுவாக பேசும் நேரங்களைத் தவிர, விளக்கப்படும் எந்த சம்பவத்தையும், இது போன்று தகவல்கள் நிறம்ப பேசுங்கள். தகவல்கள் அதிகமாக, அதிகமாக, பேச்சாளரின் தரமும் அதிகமாகிறது. இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளை மனனம் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக நினைவில் வைத்துக்கொள்ளமுடியும். v கதை கேட்பதை விரும்பும் மனித இயல்பு. எந்த வயது மக்களுக்கும் கதை கேட்பது பிடித்தமான செயல், என்பதை நினைவில் வையுங்கள். இது மனித இயல்பு. கதை என்றால் முயல் கதை, கொக்கு கதையெல்லாம் சொல்லலாம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்த கதைகளும் மக்களை கேட்கத்தூண்டும் என்றாலும், இது போன்ற கற்பனை கதைகளை ஒருபோதும், சத்தியத்தை சொல்லும் ஒரு அழைப்பாளர் பயன்படுத்திவிடக்கூடாது. மாற்று மதத்திற்கும், இஸ்லாமிய பிரச்சாரத்திற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடுகளில் இதுவும் ஒன்று. இஸ்லாமிய பிரச்சாரகர்கள், கற்பனைக் கதைகள் மூலமாக கொள்கையை சொல்வதில்லை. அப்படி சொல்வது சரியான முறையும் அல்ல. பிற மதத்தினர், இதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பொய் சொல்லக்கூடாது என்று யானை சொன்னது. பார்த்தீர்களா? யானைக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லை. என்று நடக்காததை, நடக்க இயலாததைச் சொல்லி பாடம் நடத்துவார்கள். இது போன்ற அடிமுட்டாள்தனமான அறிவுரைகளை ஒருபோதும் பயன்படுத்திவிடாதீர்கள். கதை கேட்பதை மனித மனம் விரும்பும் காரணத்தினால், நடந்த வரலாற்று சம்பவங்களை சொல்லுங்கள். அல்லாஹ்வே திருமறையின் பலஇடங்களில், நமது உள்ளத்தை பலப்படுத்துவதற்காக பல நபிமார்களின் வரலாறுகளை நமக்கு சொல்லித்தருகிறான். நபிமார்கள் வரலாறாக இருந்தாலும் சரி, சஹாபாக்கள், கலீஃபாக்கள், இஸ்லாமிய வரலாறாக இருந்தாலும் சரி, வரலாற்று கதைகளை சிறிதளவு பயன்படுத்துங்கள். வேறுவேறு அம்சங்களில் குறை இருந்தாலும், உங்கள் உரை குறைந்த பட்ச மதிப்பெண்ணாவது பெற்றுவிடும். மேலும், வரலாறுகள் ஒரு தகவலாக (டேட்டாவாக) இல்லாமல், கோர்வையான தொடர்நிகழ்வுகளாக இருப்பதால் எளிதில் மறக்காது. பலகாலம் நினைவில் நிற்கும். Ì கதைக்கே கதை கூடாது. எதாவது வரலாறை சொல்லிக்கொண்டிருக்கும் போது, அதில் வரும் நபர்களை விளக்க சிறுபீடிகை போடுவது தவறல்ல. அந்த பீடிகை ஒரு குட்டி கதையாக ஆகிவிடக்கூடாது. அதாவது ஒரு கதைக்குள் பலசிறுகதைகளாக ஆகிவிடக்கூடாது. பேசும் நமக்கு, எதைப்பேசுகிறோம் என்று நன்றாக புரியும். ஆனால் சாதாரண பொதுமக்களால் நாம் பேசுவதை பின்தொடர முடியாது. எனவே விதிவிலக்காகவே தவிர ஒரு கதைக்குள் மற்றொரு கதையை சொல்லாதீர்கள். வரலாறை சொல்லும் போது, முழுமையாக விளங்கி வர்ணித்தால் தான், கேட்பவர்களுக்கு நன்றாக புரியும். சரியாக படிக்காமல், ”இல்ல இல்ல. முதல்ல நபிதான் கேட்டாங்க. பிறகு தான் அவரு குடுத்தாரு. மாத்தி சொல்லிட்டேன்” என்ற கதையை யோசித்து யோசித்து சொன்னால், விளங்க கடினமாக இருக்கும். அரைகுறையாக தெரிந்துகொண்டு ஒப்பேற்றுகிறார் என்று மக்கள் நினைப்பார்கள். v பல்சுவையில் பேசவேண்டும். எந்த தலைப்பிலான உரையாக இருந்தாலும், அதில் மென்மையும், ஆக்ரோஷமும், நகைச்சுவையும், உணர்ச்சிபூர்வமான செய்திகளும், கலந்து இருக்கவேண்டும். அதாவது பல்சுவையில் இருக்கவேண்டும்.  குறிப்பிட்ட ஒரு சுவையில் மட்டும் பேசுவதை விட, அனைத்து சுவைகளையும் கலந்து பேசும் போது, அனைத்து தரப்பு மக்களையும் கவரமுடியும். v பல்சுவை - தேவைப்படும் இடங்களில், லோக்கல் பாஷையில் பேசுங்கள். சிலர் ஆரம்பம் முதல் கடைசிவரை சீரியஸாகவே முகத்தை வைத்துக்கொண்டு பேசுவார்கள். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நடுவில் ஒரிரு தடவை, சாதாரண செய்திகளை பேசி, தேவைப்படும் இடங்களில் லோக்கல் பாஷையை பயன்படுத்தி நகைச்சுவையோ அல்லது பொதுவிஷயமோ பேசுங்கள். லோக்கல் பாஷை என்பது, ஒரு மனிதன் இயல்பாக எந்த தொனியில், ஸ்டைலில் பேசுவானோ அந்த பேச்சு. உதாரணமாக) இலக்கண பாஷை)   ”எந்நேரத்திலும் என்னை ஏன் தொழச்சொல்கிறீர்கள்” என்று இன்றைக்கு பிள்ளைகள் கேட்கிறார்கள்.. லோக்கல் பாஷை)   ”எப்ப பாத்தாலும், தொழு தொழு-னு சொல்லி, இம்சையை குடுக்காதப்பா”- னு புள்ளைங்க சொல்ல ஆரம்புச்சுட்டாங்க…. மேற்கண்டதில் உள்ளதை போல, லோக்கல் பாஷை பேச்சுக்களை உங்கள் உரையில், கலந்து பேசுங்கள். சீரியஸாக போகும் பயானை, கேஷுவலாக மாற்றுவதற்கு லோக்கல் பாஷை மிகவும் அவசியம். Ì பெண்கள் பயானில் பேசும்போது, கணவன் மனைவி இடையேயான உரையாடல்களை லோக்கல் பாஷையில் பேசிப்பாருங்கள்.  இதன் முக்கியத்துவம் எளிதில் விளங்கும். பெண்கள் சீரியல் பார்ப்பது, கணவன் மனைவியை திட்டுவது, கணவன் ஆசையாய் கேட்ட உணவை சமைக்க மனைவி படும் சிரமங்கள், அதை மூக்கு பிடிக்க தின்றுவிட்டு, அதில் எதாவது கோளாறு கண்டுபிடிக்கும் கணவனின் வீரச்செயல் போன்ற சம்வங்களை நகைச்சுவை தளும்ப எடுத்துச்சொல்லும்போது, மக்கள் அதிக ஆர்வத்தோடு கேட்பார்கள். உங்களுக்கும் அடுத்தடுத்து பேசுவதற்கு உற்சாகமாக இருக்கும். v பல்சுவை - ஏற்ற, இறக்கங்கள். முதல்வர்கள், மந்திரிகள் எழுதப்பட்ட ஸ்கிரிப்டை படித்துப்பேசுவதைப் போல, பயானில் ஒரே வேகத்தில் பேசுவது, கேட்பதற்கு சலிப்பாக இருக்கும். எனவே, சில வரிகளை மென்மையாகவும், சில வரிகளை கடுமையாகவும், வேகமாகவும், ஏற்றி, இறக்கி பேசும்போது, கேட்பதற்கு அதிக ஆர்வமாக இருக்கும். அதாவது, (1) பேசும் வேகம் (Speed), (2) ஒலி அளவு (Volume),               - (3) குரல் மாற்றம் (டோன் Tone) போன்றவைகளில் மாற்றம் இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்டதில், பேசும் வேகம் என்றால், சிலவரிகளை விறுவிறுப்பாகவும், சிலவரிகளை நிறுத்தி நிதானமாகவும் பேசுவது. ஒலிஅளவு என்றால் சிலவரிகளை கத்தியும், சிலவரிகளை சப்தம் குறைவாகவும் பேசுவது. குரல் மாற்றம் என்றால் மிமிக்ரி செய்வதல்ல. பேச்சில் வரும் மனிதர்களின் குரல் எந்த தொனியில் இருக்குமோ அதில் பேசுவது. உதாரணமாக, நபியிடம் ஒருவர், ”நான் உங்களை நேசிக்கிறேன்” என்று சொல்வார். இதை வீரமாக, கடுமையாக விரலை ஆட்டிக்கொண்டு பேசக்கூடாது. மென்மையாக அவர் எப்படி சொல்லியிருப்பாரோ கிட்டத்தட்ட அதே தொனியில் பேசவேண்டும். அதுபோல, தனது அடிமையை அடித்துக் கொண்டிருந்த அபூமஸ்ஊதை எச்சரிக்கும் விதமாக நபி பேசிய, ”அபூமஸ்ஊதே…. அபூமஸ்ஊதே… நீ அடிப்பதைவிடவும் கடுமையாக அல்லாஹ் உன்னை தண்டிக்கமுடியும்!!!” என்ற வரியை உச்சரிக்கும்போது, கடுமையாக பேசிக்காட்டவேண்டும். நபி(ஸல்) நகைச்சுயைாகவும், மென்மையாகவும், உருக்கமாகவும் பேசியிருக்கிறார்கள். பலநேரங்களில் கடுமையாகவும் பேசியிருக்கிறார்கள். ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்;  கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்’ என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள்…  முஸ்லிம் (1573) எனவே செய்திகளுக்குத் தகுந்தார்போல மென்மை, உருக்கம், கடுமை என பல்சுவையில் ஏற்ற இறக்கங்களுடன் பேசவேண்டும். v இடைவெளி விடுதல் ஏற்றி இறக்கி பேசும்போது, தேவையான இடங்களில் இடைவெளி விடுவது மிகவும் அவசியமானது. உதாரணமாக, கர்ஜனை பேச்சுக்களை தொடர்ந்து ஒரிரு நிமிடம் பேசிவிட்டு, 3 அல்லது 4 வினாடிகள் இடைவெளி விடுவது, ஆக்ரோஷமான பேச்சாளர்களின் ஸ்டைல். கேட்பதற்கு நன்றாக இருக்கும். அந்த இடைவெளியில் மக்கள் சொன்ன கருத்தை கிரகிப்பார்கள். சிந்திப்பார்கள். சொன்ன செய்தி உள்ளத்தை ஆக்ரமிக்கும். உதாரணமாக) குர்ஆனுடைய சிறப்பை பேசிவிட்டு, (ஆக்ரோஷமாக) - ”இதுமாதிரி கொண்டு வா பார்க்கலாம்” (மூன்று வினாடி இடைவெளி விட்டு, பிறகு மெதுவாக) - ”முடியாது!” என்று ஏற்ற இறக்கமாக பேசுவது மக்களுக்கு உற்சாகத்தை தரும். அதாவது தொடர்ச்சியாக கர்ஜித்து முடித்துவிட்டு, மூன்று வினாடிகள் தாமதித்து அடுத்த பேச்சை பேசும் போது, அமைதியாக ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக, மேடையில் பேசுகிறவர்கள் இதை அதிகம் நினைவில் வைக்கவும். கர்ஜனை பேச்சுகளுக்கு மட்டுமல்ல, மென்மையாக பேசிவிட்டும் இதுபோன்று இடைவெளி விடலாம். உதாரணமாக, ”மனைவியின் வாயில் உணவை ஊட்டியிருக்கிறோமா?” என்று கேட்டுவிட்டு, புன்முறுவலோடு மக்களை நோக்கியவாறு, இரண்டு வினாடிகள் இடைவெளிவிடுவது. இந்த இடைவெளியில் மக்கள் தங்களின் நிலையை சிந்திப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் பிறருக்கு போதனை செய்யும் போது, நிதானமாக பேசுவார்கள். ”நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன்பின் ஒன்றாக வேகவேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை” என்று அன்னை ஆயிஷா அவர்கள் நபியின் பேச்சை பற்றி கூறுகிறார்கள். (புகாரி 3568). எனவே, செய்திகளுக்கு மத்தியில் இடைவெளி விட்டு பேசுங்கள். Ì சிந்தனையை தூண்டும் எதிர்கேள்விகள், ஆச்சர்யமான செய்திகளுக்குப் பின்னால் இடைவெளி விடுவதைப் பற்றி பேசாத பேச்சுக்கலை நூல்களே இல்லை. பேச்சுக்கலை பற்றிய பலபெரிய புத்தகங்களில் இதனை Power of Pause (இடைவெளியின் சக்தி) என்று அழைக்கிறார்கள். இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். v பீடிகை என்றால் என்ன?  பீடிகை எதற்கு? பொதுவாக எந்த செய்தியையும் நேரடியாக சொல்வதற்கு முன்னால், ஒரு அறிமுகம் செய்துவிட்டு, அந்த செய்தியின் சிறப்பை சொல்லிவிட்டு பிறகு செய்தியை சொல்வதற்கு பீடிகை போடுவது என்று பெயர். பீடிகையுடன் ஒரு செய்தியை சொல்லும் போது, சொல்லப்படும் செய்தியின் மதிப்பு நன்றாக விளங்கும்.  பீடிகை ஒரு கருத்தாகவோ, ஒரு ஹதீஸாகவோ அல்லது ஒரு உலக சம்பவமாகவோ கூட இருக்கலாம். உதாரணமாக, இஸ்லாமிய குடும்ப சட்டதிட்டங்களை சொல்லும் நேரத்தில், மேலை நாடுகளில் எந்த பெண்ணும் ஆணுக்கு கட்டுப்படுவதில்லை, யார் சொல்வதை யார் கேட்பது என்ற வரையறை இல்லை. இதனாலேயே அங்கு அதிகமான விவாகரத்துகள் நடக்கின்றன. என்று சிறிதுநேரம் பீடிகை போட்டுவிட்டு பிறகு இஸ்லாமிய சட்டத்தையும் அதன் நியாயத்தையும் எடுத்துச் சொல்லும்போது, இஸ்லாம் கூறும் சட்டத்தின் மதிப்பு நன்றாக விளங்கும். சொல்லும் செய்தியின் மதிப்பை கூட்டுவது இந்த பீடிகை தான். எனவே தேவையான இடங்களில் பீடிகையை மறந்துவிடாதீர்கள். எந்த பயானுக்கும் முன்னுரை அவசியம் என்று பார்த்தோம். முன்னுரையும் ஒருவகையான பீடிகை தான். v துணைச்செய்தி சுருக்கமாக இருப்பது அவசியம் பீடிகையாக இருந்தாலும் சரி, ஒரு செய்தியை சொல்லிக்கொண்டிருக்கும் போது, இடையிடையே சொல்லும் துணைச்செய்தியாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக, அதிக நீளமானதாக இருக்கக்கூடாது. சில பேச்சாளர்கள் இதில் தவறு செய்வதனாலேயே, பலமக்களுக்கு இதில் வெறுப்பு ஏற்படுகிறது. “ஒரு சம்பவத்தை சொல்லும் போது, இடையே வேறுவேறு செய்திகளை சொல்லாதீர்கள்” என்று கூறுவதை பார்க்கலாம். இடையிடையே வேறுவேறு செய்திகள் சொல்லாமல், பேசுவது சாத்தியப்படாது. எனவே இடைச்செய்திகளை சுருக்கமாக சொல்லிவிட்டு, சொல்லவந்த செய்தியை தொடரவேண்டும். v 3 விஷயங்கள், 4 விஷயங்கள் போன்ற ஹதீஸ்களை பயன்படுத்துங்கள். இது ஒருவகையான ஈர்ப்பு. அந்த விஷயங்களை நினைவில் வைக்க மக்கள் விரும்புவார்கள். நபியின் உபதேசங்களில் இதுபோன்றவை நிறைய காண முடியும். உதாரணமாக) நபியவர்கள் கூறினார்கள்: பிற நபிமார்களை விட ஆறு விஷயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன். 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பட்டுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில்) பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டது. 3. போர் பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 4. பூமிமுழுவதும் தூய்மையானதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதுக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். 6. என்னுடன் நபிமார்கள் முற்றுப் பெற்று விட்டார்கள்.  (முஸ்லிம் : 907) இது போன்ற ஹதீஸை சொல்லி, ஒவ்வொன்றையும் விளக்குங்கள். இதில் மற்றுமொரு நன்மையும் இருக்கிறது. இதை விளக்குவதற்கே பாதி பயான் நேரம் கழிந்துவிடும். புதிதாக பேசுபவர்கள், இந்த யுக்தியை பயன்படுத்தலாம். கொண்டு வந்த குறிப்புகள் முடியப்போகிறதே என்று பயப்படத்தேவையில்லை. இது போன்ற சில ஹதீஸ்களை கிடைக்கும் போதெல்லாம், மனனம் செய்துகொண்டு, தொடர்ந்து வரும் பயான்களில் உபயோகப்படுத்துங்கள். Ì உங்களுக்கு தெரியுமா? : பெரும்பாலான, உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்கள், உரை நிகழ்த்தும்போது, 4 விஷயங்கள், 5 விஷயங்கள் என்று ஒரு உரையை நான்காகவோ, ஜந்தாகவோ பிரித்து கொண்டு, பின்பு ஒவ்வொன்றையும் விளக்குகிறார்கள். நமது உரைகளிலும் இதுபோன்று பேசலாம். குறிப்பாக மாற்றுமத சகோதரர்கள் அமர்ந்திருக்கும் சபைகளில் உரை நிகழ்த்தும் போதும், கேள்விக்கு பதில் சொல்லும்போதும் முடிந்தஅளவு, கதைபோன்று பதில் சொல்லாமல் ”தீண்டாமையை அகற்ற இஸ்லாம் 4 வகையான செயல்திட்டங்களை கொண்டுள்ளது, அறியாமையை போக்க 3 விதமாக அறிவுரைகளை செய்கிறது” என்பது போன்று பாயிண்ட், பாயிண்ட்டாக பேசலாம். சிரமமின்றி விளங்கும் வகையில் நம் பேச்சு தெளிவான முறையில் இருக்கும். இதன் நன்மையை விளங்குவதற்கு, பேசி முடித்தபிறகு நீங்கள் என்ன பேசினீர்கள் என்று மக்களிடத்தில் கேட்டுப்பாருங்கள். 80 சதவீத மக்கள், நீங்கள் பேசிய 4 பாயிண்ட்களையும் சரியாக சொல்வார்கள். ஒவ்வொரு பாயிண்ட்டின் கீழும் என்ன பேசினீர்கள் என்பதையும் பலரால் சரியாக சொல்லமுடியும். நாம் கதைபோன்று உரை நிகழ்த்தும்போது, இவ்வாறு அவர்களால் சொல்லமுடியாது. எனவே தேவைப்படும் நேரங்களில், பாயிண்ட், பாயிண்ட்டாக பேசுங்கள். v தத்துவங்களை, கையில் ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள். எந்த தலைப்பிற்கும், இரண்டு குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், சம்பவங்கள் தேவைப்படுவது போல, இரண்டு மூன்று தத்துவங்களும் தேவைப்படும். தத்துவங்களுக்கு ஞானிகளை தேடிப்போகவேண்டியதில்லை. குர்ஆன் வசனங்களை பொறுமையாக சிந்தித்து படித்தாலே, நிறைய கருத்துக்களை இலகுவாக பெறமுடியும். வாழ்க்கையில் அவ்வப்போது பெறும் அனுபவத்திலிருந்தும் கருத்துக்களை சேகரிக்கமுடியும். உரையின் நடுநடுவே இவற்றை பயன்படுத்தும் போது சொல்லப்படும் செய்தி, வெறும் ஏட்டுச்செய்தியாக இல்லாமல் சிந்திக்க தூண்டும் செய்தியாக இருக்கும். சிறந்த பேச்சாளர்கள், பல தத்துவங்களை, தகுந்த உதாரணங்களோடு ஸ்டாக் வைத்துக் கொண்டு, அவ்வப்போது பயன்படுத்துவதை பார்க்கலாம். இவைகளை எத்தனை தடவை கேட்டாலும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். சில உதாரணங்களை பாருங்கள்.

என்பது போன்ற, ஏராளமான தத்துவங்களை நினைவில் நிறுத்தி பயன்படுத்தினால், உங்கள் உரை சிறந்த கருத்துச்செறிவான உரையாக இருக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகால பயான் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து மிகவும் சிறப்பான கருத்துக்களையும், தத்துவங்களையும், உளவியல் அறிவுரைகளையும் பெறமுடியும். புதியவர்கள் ஆரம்பத்தில் அவற்றை பயன்படுத்துங்கள். Ì அனைவரையும் குற்றம் சாட்டக்கூடாது. ”பெண்களை பொறுத்தவரை…. பகட்டு இல்லாம அவங்களால இருக்கவே முடியாது…” என்று அனைவரையும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது சரியான முறை அல்ல. மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ”பெரும்பாலானவர்கள், ஒருசில ஆண்கள், அதிகமான பெண்கள், பெரும்பாலும்” என்பன போன்ற விலக்கல் வார்த்தைகளை தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமது கொள்கைகளை அறியாத முஸ்லிம் அல்லாதோர் சபைகளில், விலக்கல் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பாதுகாப்பானது. v சிந்தனையை தூண்டும் எதிர் கேள்விகள், வாதங்கள். உள்ளத்தை தட்டிஎழுப்பும் எதிர்கேள்விகள் குறைந்தபட்சம் இரண்டாவது, உங்களுடைய ஒவ்வொரு உரையிலும் இருக்கவேண்டும். ஒரு பயானில் நூறு சட்டங்களை அடுக்கடுக்காக சொன்னாலும், அதனால் தூண்டப்படாத மனிதன், ஒரே ஒரு விஷயத்தை, எதிர் கேள்வியை கொண்டு விளக்கிப்பாருங்கள். ”சரியா கேட்டாருய்யா…” என்பது போல அவருடைய ரியாக்ஷன் இருக்கும். உதாரணமாக)

என்பது போன்ற அசத்தியத்திற்கு எதிரான எதிர்கேள்விகள், எதிர்வாதங்கள் நல்ல தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும். எதிர் கேள்விகள், வாதங்கள் மூலமாக, தவறான கொள்கையில் உள்ளவரை திருத்த முடியும். குறைந்த பட்சம் அவர்களது வாயையாவது அடைக்க முடியும். நபி(ஸல்) அவர்கள் உலகரீதியாக செய்தவைகள் கூட, நமக்கு சுன்னத் தான் என்று கூறுபவர்களுக்கு எதிர்வாதமாக, ”ஓட்டகத்துல போறது சுன்னத்தா? அப்படீன்னா, சுன்னத்திற்கு மாற்றமானது பித்அத் என்ற அடிப்படையில, கார்ல போறது பித்அத்-தானே! அப்ப ஏன் நீங்க கார்-ல போறீங்க?” என்று கேட்கும் போது, பதில் சொல்லத்தெரியாமல், மௌனமாக இருப்பார்கள். சிந்திக்கத்தூண்டும் உரைக்கு இது கண்டிப்பாக தேவை. Ì நினைவில் இருக்கட்டும் - இது போன்ற சிறப்பான எதிர்வாதங்கள் தான் ஒருவரை சிறந்த பிரச்சாரகராகவும் எடுத்துக்காட்டுகிறது. உங்களுடைய ஒட்டுமொத்த பயானுமே மறந்தாலும், இதுபோன்ற எதிர்கேள்விகள் மட்டும், அந்த பயானை கேட்டவரின் உள்ளத்தில் பலஆண்டுகளுக்கு இருக்கும். இதே வாதத்தை அவரும் தனது வாழ்க்கையிலும் பயன்படுத்துவார். v அரபி, ஆங்கில பழமொழிகள் அரபில ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. என்று அந்த பழமொழியை சொல்லிவிட்டு, அதை விளக்கிப் பேசுங்கள். கேட்பதற்கு, சுவாரஸ்யமாக இருக்கும். பழமொழியை சொல்லாமல், வெறும் அர்த்தத்தை மட்டும் சொல்லாதீர்கள். அப்படி சொல்வதைவிட, சொல்லாமலேயே இருக்கலாம். பழமொழிகள் மட்டுமல்ல, ”கையில் சுத்தியல் மட்டுமே வைத்திருப்பவனுக்கு எதைப்பார்த்தாலும் ஆணிபோல் தெரிகிறது(மேஸ்லோ), பன்றியோடு சண்டைக்கு நிற்காதே. நீங்கள் இருவரும் அசுத்தமாவீர்கள். பன்றி மட்டும் சந்தோஷப்படும்.  (காலேயார்போரஃப்)” என்பது போன்ற பிரபல்யமான Qutotes கள், ஆய்வாளர்கள், இணையதள கட்டுரைகள், அகராதிகளில் உள்ள மேற்கோள்கள், ஆங்கில, அரபி, உருது அல்லது பிறமொழி மேற்கோள்கள் போன்றவற்றை ஓரிரு வரிகள் பயன்படுத்தி, அதன் பொருளை தமிழில் விளக்கிச் சொல்லலாம். கவனம். இது போன்ற நுனுக்கங்கள் பேச்சாளரின் தரத்தை உயர்த்துகிறது. அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் போன்றோரின் வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆனால், பிறமதத் தலைவர்களின் தத்துவங்களை நல்லதாக இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது. இதுபற்றி ”தவிர்க்கவேண்டியவைகள்” என்ற பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.   v பிறமத அறிஞர்கள் இஸ்லாத்தை பாராட்டிதை சொல்லலாம். நூற்றுக்கணக்கான பிறமத அறிஞர்கள், விஞ்ஞானிகள் இஸ்லாத்தை பற்றி பலநேரங்களில், மெய்சிலிர்த்து பாராட்டியிருக்கிறார்கள். அதைச் சொல்வது தவறில்லை. அதை மக்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள். உதாரணமாக)

என நாம் கூட சிந்திக்காத வகையில் இஸ்லாத்தை பற்றி, மற்றவர்கள் சொன்னதை எடுத்துச்சொல்லுங்கள். இவற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்கும். வெறுமனே படித்துச் சொல்லாமல் விளக்கியும் சொல்லுங்கள். உதாரணமாக, ஹிட்டி சொன்னதை எடுத்துச் சொல்லும்போது, பிறமன்னர்கள் தோல்வியடைந்த நாட்டில் செய்யும் அட்டூழியங்களை விளக்கி விட்டு, பிறகு மாநபி நடந்துகொண்ட விதத்தைப் பற்றி சொல்லுங்கள். Ì பீடிகையை மறந்துவிடாதீர்கள். இதுபோன்ற கருத்தாழம் மிக்க பேச்சுக்களை, எடுத்துச்சொல்லும் போது, அந்த கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, கருத்தை சொல்வதற்கு முன்னால் அவர் யார் தெரியுமா? என்று அவரின் சிறப்பை சுருக்கமாக சொல்லிவிட்டு, பிறகு அவர் இஸ்லாத்தை பற்றி சொன்னதை சொல்லுங்கள். உதாரணமாக) அம்பேத்கர், முஹம்மது நபியை பற்றி ”பிறப்பில் உயர்வு தாழ்வுகளை நீக்கி, மனிதனை மனிதனாக வாழவைத்த முஹம்மதுவை புகழ என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை” என்று புகழ்கிறார். அதை எடுத்துச்சொல்லும் போது, அம்பேத்கர் யார் தெரியுமா? இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவர், இன்றைய நீதிபதிகளுக்கெல்லாம் மேதை. என்று ஒரு நிமிடம் அவரின் மதிப்பை விளங்கச்செய்து, பிறகு அவர் நபியை பற்றி என்ன சொன்னார் என்பதை விளக்குங்கள். வெறுமனே அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார், என்று வரிசையாக பட்டியல் போடுவதில் எந்த ஈர்ப்பும் இருக்காது. Ì கவனமாக இருங்கள் - பீடிகை போடும் போது காஃபிர்களை, காஃபிர் நிலையிலேயே வைத்து பாராட்டுங்கள். அவரை போல இதுவரை பிறந்ததும் கிடையாது, இனி பிறக்கப்போவதும் கிடையாது. என்பது போல பேசி, அவரை பின்பற்றத்தக்கவராக காட்டிவிடாதீர்கள். வாயில் வருவதையெல்லாம் பேசக்கூடாது. எந்நிலையிலும் சிந்தித்து பேசுங்கள். v நீதிமன்ற தீர்ப்புகள், நீதிபதிகளின் வார்தைகளை சுட்டிக்காட்டுங்கள். பிறமத தலைவர்களின் சொற்களுக்கு மக்கள் முக்கியத்துவம் தருவது போல, முன்னாள், இந்நாள் நீதிபதிகள், நீதிமன்ற தீர்ப்புகள், அனைவரும் ஏற்றுக்கொண்ட  பெரும் தலைவர்களின் சொற்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் அதிகாரப்பூர்வமானவையாக இருப்பதால், அறிவாளிகள் சபையில், மற்ற அனைத்தையும் விட இவை முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக) முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயன் கட்சு, மூடத்தனத்தத்திற்கு எதிராக, இஸ்லாத்திற்கு ஆதரவாக பலநேரங்களில் பேசியிருக்கிறார். இவர்களது வார்த்தைகளை எடுத்துச்சொல்லுங்கள். முன்னர் சொன்ன விதி நினைவிருக்கட்டும். கட்சுவை பற்றி அறிமுகம் செய்துவிட்டு தான், அவர் சொன்னதை சொல்ல வேண்டும். அவர் பிரஸ்கவுன்சில் தலைவர். என்று அதன் மதிப்பை புரியவைத்துவிட்டு பிறகு, அவர் சொன்னதைச் சொல்லுங்கள். Ì மறந்துவிடாதீர்கள் - முஸ்லிம்களுக்கான சொற்பொழிவில் இவர்களது மேற்கோள்களை பயன்படுத்த மறந்தாலும், பிறமத மக்களுக்கு மத்தியில் பேசும்போது கண்டிப்பாக இதுபோன்ற மேற்கோள்களை பயன்படுத்தவேண்டும். v ஒப்பிட்டு பேசுவது சிந்திக்கத்தூண்டும் ஒப்பிட்டு பேசுவது எப்போதுமே வரவேற்கப்படவேண்டியது. ஆழமான சிந்தனை அறிவு உள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்று பேசுவதை பார்க்கலாம். இரண்டு மதங்கள் ஒரே விஷயத்தை பற்றி என்னென்ன கூறுகிறது என்பதை வேறுபடுத்தி சொல்வது, சிந்தனையை தூண்டும் பேச்சு. இரண்டு கொள்கைகள் ஒரே விஷயத்தை எப்படி அணுகுகிறது. அதில் எது சரி. எது தவறு. தவறு என்றால் ஏன் தவறு? என்று நறுக்குதெறித்தார்போல, எடுத்துரைப்பது மிகவும் பயனுள்ள பேச்சு. சிந்தனையை தூண்டும் பேச்சு. உதாரணமாக) பாவம் செய்தால், கண்டிப்பாக அதற்குறிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று, இந்து மதம் கூறுகிறது. நாம் இன்று செய்யும் பாவங்களுக்காக என்றைக்கோ ஒருவர், ஏற்கனவே மரணித்து, பரிகாரம் தேடிவிட்டார் என்று கிருஸ்தவ மதம் கூறுகிறது. இஸ்லாம் இதை எப்படி அழகாக கையாளுகிறது, என்பதை ஒப்பிட்டு பேசி, விளக்குவது, சுவாரஸ்யமாக இருக்கும். வெவ்வேறு மதங்கள் மட்டுமல்லாமல், மத்ஹப், தரீக்கா, சூஃபியிஸ கொள்கைகளில் ஒரு கருத்து எப்படி உள்ளது? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அது எப்படி உள்ளது? என்றோ, அல்லது வேறு எந்த வகையிலுமோ, ஒப்பிட்டு பேசுவது எப்போதுமே சிந்தனையை தூண்டக்கூடியது. Ì  ஏராளமான உலக முஸ்லிம் அறிஞர்கள், இஸ்லாமும் கிருஸ்தவமும், இஸ்லாமும் இந்துமதமும் என்பது போன்ற தலைப்புகளில் ஏராளமாக பேசியிருக்கிறார்கள். அதில் உள்ள ஒவ்வொரு வரியும் சிந்திக்கதக்கது. அதிலிருந்து குறிப்புகளை எடுத்து பயன்படுத்துங்கள். v குர்ஆன், ஹதீஸ் கூறும் அறிவியல் செய்திகள் அவசியம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் இன்றைய விஞ்ஞானம், குர்ஆன் கூறும் அறிவியல் செய்திகள் போன்றவற்றை சற்று விளக்கிக் கூறுவதை மக்கள் அதிகம் விரும்புவார்கள். அதிலும், ஆல்ஃபா, பீட்டா, காமா என்று அறிவியல் பெயர்களை, பயன்படுத்துவதையும் கூர்ந்து கவனிப்பார்கள். உதாரணமாக) எறும்பு பேசுவதை நவீன விஞ்ஞானம் மைக்ரோமைக்குகளை கொண்டு பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுள்ளது. சுலைமான் நபி வரலாற்றில், எறும்பு பேசுவதை அல்லாஹ் குர்ஆனில் எடுத்துக்காட்டுவதை, விளக்கிப்பேசுங்கள். இந்த வீடியோவை எந்த இணையதளத்தில் காணமுடியும் என்பதையும் சொல்லுங்கள். கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

என ஏராளமான அறிவியல் செய்திகள் உள்ளன. இணையத்தில் அவ்வப்போது, புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். www.QuranAndScience.com என்ற இணையதளம் குர்ஆனில் உள்ள அறிவியல் வசனங்களையும், அதற்குறிய ஆதாரங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவற்றை படித்துப் பயன்படுத்துங்கள். Ì இதுதவிர, பொதுவான அறிவியல் உண்மைகள், தற்போது இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் வரஇருக்கும் வியக்கத்தகு பொருட்கள் பற்றி பேசுவதையும் மக்கள் விரும்பிகேட்பார்கள். உதாரணமாக, நாசாவின் உதவியோடு, வெளிவரவிருக்கும் பீஸா 3D பிரிண்டர். அதாவது, கனினியிலிருந்து கட்டுரைகளை (எழுத்துக்களை) பேப்பரில் பிரிண்ட் செய்வதைப்போல, இனிமேல் நாம் சாப்பிடக்கூடிய கேக்(Cake), பீஸா(Pizza) போன்ற உணவுப்பொருட்களை கனினியிலிருந்து பிரிண்ட் செய்து வெளியே எடுத்துக்கொள்ளலாம். (எதிர்காலத்தில் இட்லி, தோசை போன்றவையும் சாத்தியப்படலாம்) (Cbsnews,05/2013). இதுபோன்ற நூற்றுக்கணக்கான அறிவியல் செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் வெளிவந்துகொண்டே இருக்கும். அவற்றை அவ்வப்போது பயன்படுத்துங்கள். இவையும் மக்களை ஈர்க்கும். v புள்ளிவிபரங்களை பயன்படுத்துதல் பெரும்பாலான பேச்சாளர்கள் தங்களது எந்த உரையிலும் புள்ளிவிபரங்களையோ (Statistics), விஞ்ஞானிகளின் கூற்றுக்களையோ(Claims,Findings), ஆராய்ச்சி ஆதாரங்களையோ (Research) தருவதில்லை. புலால் உணவு மனிதஉடலுக்கு அவசியமானது என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதற்குரிய அறிவியல் சான்றுகளையும் தந்தால் தான் நாம் சொல்லும் செய்தி அறிவியல் பூர்வமானது என்று திருப்தியடைய விளங்கமுடியும். பிரிட்டனில் அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் என்ற பொதுவான வரியைவிட, எத்தனை பேர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரத்தோடு பேசும்போது, பேச்சாளரின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. மருத்துவர்கள். பட்டதாரிகள், வழக்குரைஞர்களள் இருக்கும் அறிவாளிகள் சபையில் இதுபோன்ற ஆதாரங்கள் இன்றி பேசினால், உங்கள் பேச்சு ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாது. எனவே ஆதாரங்கள் தரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எனினும், அதிகமான முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இருக்கும் சபைகளில் இதுபோன்ற புள்ளிவிபரங்கள் தேவைப்படாது என்பதையும் கவனத்தை வைக்கவும். Ì ஆதாரங்களை மக்களிடம் காட்டுதல் (Showing Proofs): நாம் கூறும் அறிவியல் செய்திகளுக்கோ, வேறு ஏதாவது முக்கியமான தகவல்களுக்கோ, ஆதாரங்கள் காட்ட விரும்பினால் தாராளமாக காட்டலாம். கையில் வைத்து காண்பிக்கப்படும் பேப்பரையோ, புத்தகத்தையோ தூரத்தில் அமர்ந்திருக்கும் மக்களால் படிக்க முடியாதென்றாலும், நீங்கள் காட்டிய பேப்பரைக்கொண்டு என்ன சொல்லவருகிறீர்கள் என்று அதிக ஈடுபாட்டுடன் கேட்பார்கள். பல பெரிய பேச்சாளர்கள் மாற்றுமத மக்களிடத்தில் பேசும்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிதாபுகளை மேசையின் மீது முன்னரே எடுத்து வைத்துக்கொள்கின்றனர். உரையின் நடுவே, ”இது தான் குர்ஆன்.. இறைவனிடத்திலிருந்து முஹம்மது நபி பெற்ற வேதம்”, ”இது புகாரி ஹதீஸ், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளும், வரலாறும் அடங்கிய புத்தகம்” என்று சொல்லி, அந்த புத்கத்தை கையில் எடுத்து மக்களுக்கு காண்பித்து ஒருவகை கவனஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். Ì Appeal through authority என்றால் என்ன? ஒரு செய்தியை நிரூபிப்பதற்கு அதில் நிபுனத்துவம் பெற்றவரிடமிருந்து ஆதாரத்தை தராமல், மதிப்போ, அதிகாரமோ உள்ள (அல்லது அற்ற) மனிதரிடமிருந்து வந்த சொற்களை ஆதாரமாக தருவதற்கு பேச்சுக்கலையில் Appeal through authority என்று பெயர். உதாரணமாக, ”மதுவினால் கேன்சர் வரும் என்று எனது நண்பர் கூறுகிறார்” என்று பேசுவது, இது ஏற்கப்படாத பேச்சு முறை. இஸ்லாத்தை பொறுத்த வரையில், குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டாமல், சஹாபாக்கள், மத்ஹபுகள், இமாம்களிடமிருந்து ஆதாரம் காட்டுவதை Appeal through authority என்று அழைக்கலாம். இது ஏற்கப்படாது. v உதாரணங்களை பயன்படுத்துவதன் விதிகள் கருத்துக்களை விளக்குவதற்கு உதாரணங்களை பயன்படுத்துவதை பற்றி ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம். ஒரே செய்தியை விளக்குவதற்கு இரண்டு உதாரணங்களை பயன்படுத்தலாமா? என்றால் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். ஒரு உதாரணம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதைவிட சிறந்த உதாரணம் வேறொன்று நினைவிற்கு வரும். அதையும் சொல்லலாம். இரண்டிற்கு மேல் பயன்படுத்துவது சலிப்பை ஏற்படுத்தும். சிலகருத்துக்களுக்கு உதாரணங்களே தேவைப்படாது, கருத்து விளக்கமே போதுமானதாக இருக்கும். ”மவுத் வருவதற்கு முன் செலவு செய்யுங்கள்” என்ற செய்தியை அதன் கருத்தைக் கொண்டு விளக்கினாலே போதுமானது. உதாரணத்தை பயன்படுத்தவேண்டுமே என்பதற்காக பயன்படுத்தினால், தெளிவிற்கு பதிலாக குழப்பம் தான் அதிகமாகும். எனவே, உதாரணங்களை சொல்வது சிறந்தது தான். எனினும் தேவையில்லாத இடத்திலெல்லாம் உதாரணங்களை சொல்லி, ஒரு உதாரண மன்னனாக ஆகிவிடாதீர்கள். அது போல, மேடையில் நின்று கொண்டு, உதாரணத்தை யோசித்து யோசித்து பயன்படுத்தாதீர்கள். பலநேரங்களில், அது பொருத்தமற்ற உதாரணமாக ஆகிவிடும். ஏற்கனவே தலைப்பு கொடுக்கப்பட்ட பயானுக்கு, பொறுமையாக அமர்ந்து, பொருத்தமான உதாரணத்தை யோசித்து மனதில் நிறுத்தி, பிறகு பயன்படுத்துங்கள். கேள்விக்கு பதில் சொல்லும்போது, ஏற்கனவே சொல்லிய உதாரணங்களை பயன்படுத்துவது, புதியவர்களுக்கு பாதுகாப்பானது. உதாரணங்கள் என்பது, புரிவதற்கு குழப்பமான செய்தியை எளிதாக புரியவைப்பதற்குத்தான். எளிதாக புரியக்கூடிய செய்தியை குழப்புவதற்கு அல்ல. v எடுத்துக்காட்டுகளும் மிக முக்கியமானவை எடுத்துக்காட்டுகளை சொல்வதில். பெரும்பாலான இளம் பிரச்சாரகர்கள் கவனம் செலுத்துவதில்லை. (உவமானம் என்ற பொருளில் பயன்படுத்துகிற) உதாரணங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு எடுத்துக்காட்டுகளும் முக்கியமானவை. ஒரு செயல் எப்படியெல்லாம் இருக்கமுடியும் என்று விளக்குவதே எடுத்துக்காட்டு எனப்படும். அதாவது, கோபப்படாதீர்கள் என்று சொல்லும்போது,

என்று எந்த அறிவுரைக்கும், எடுத்துக்காட்டுகளைத் தர மறக்காதீர்கள். “சிறிய நற்செயலாக இருந்தாலும் அதற்கும் நன்மை உண்டு“ என்று செல்லும்போது, செய்யத்தகுந்த ஜந்தாறு சிறிய நற்செயல்களை எடுத்துக்கூறுங்கள்.எடுத்துக்காட்டுகளை சொல்லும் போது தான், மக்களுக்கு, தான் செய்யும் தவறுகள் புரியும், செய்ய வேண்டிய நன்மைகளும் புரியும். சரியான எடுத்துக்காட்டுகள் தராத காரணத்தினால் தான், சாதாரண சட்டங்கள் கூட பலமக்களுக்கு சரியாக விளங்குவதில்லை. Ì  ”அல்லாஹ்வுக்காக வெறுக்கனும். அல்லாஹ்வுக்காக வெறுக்கனும்” என்று பத்து தடவை திரும்பத்திரும்பச் சொல்லும் பல பிரச்சாரகர்கள், அல்லாஹ்வுக்காக வெறுப்பது என்றால் என்ன, என்று எடுத்துக்காட்டுகளை சொல்வதில்லை. அப்படி சொல்லியிருந்தால், பலபேர், தீமை செய்யும் தனது உயிர் நண்பர்களின் நட்பை துண்டித்திருப்பார்கள். பர்தாவை பேணாத தன் மனைவியிடத்தில் பேசாமல் இருந்திருப்பார்கள். இப்படி எத்தனையோ தவறுகளை, தவறென்றே தெரியாமல் அங்கீகரிக்கும் அனைவருக்குமே, அல்லாஹ்வுக்காக வெறுக்கனும் என்பது நன்றாகவே தெரியும்.  எனவே எந்த அறிவுரையை சொன்னாலும், முடிந்தஅளவு அதை செயல்படுத்தத் தேவையான எடுத்துக்காட்டுகளை கூறுங்கள். v வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள் - பேசுங்கள் சொல்லும் செய்திகளில் பலவற்றில். ஒரிரு செய்திகளை வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்துங்கள். எந்த ஒரு ஹதீஸிலும் ஒரே ஒரு கருத்து மட்டும் இருக்காது. ஒன்றிற்கும் மேற்பட்ட கருத்துக்கள், சட்டங்கள் அடங்கியிருக்கும். அதை எடுத்துச்சொல்லுங்கள். ஆதம் நபியிடத்தில் அல்லாஹ் அந்த மரத்தை நெருங்காதே என்று சொன்ன செய்தி, என்றைக்கு பேசினாலும் ஒரே செய்தி தான். இறைவனின் பேச்சை கேட்காமல், ஷைத்தானின் பேச்சை கேட்டால் நமக்கு துன்பம் தான் வரும். என்பது தான் இதன் அடிப்படை அறிவுரை. இருப்பினும், இதே செய்தியை வேறுவேறு கோணத்தில் சிந்தித்து, புதுப்புது அறிவுரைகளையும், கருத்துக்களையும் பெறமுடியும். உதாரணமாக)

  1. ஆதம் நபிக்கு இறைவன் தந்தது, நமக்கு தந்தது போல பல நூறு கட்டளையா? ஒரே ஒரு கட்டளை. அதை அவரால் செயல்படுத்தமுடியவில்லை.
  2. கட்டளையை மீறுவார் என்று இறைவனுக்கு தெரியாதா? தெரியும். தெரிந்தே இறைவன் சோதித்திருக்கிறான். நம்மையும் இதுபோன்று சோதிப்பான்.
  3. இறைவனது கரத்தால் படைக்கப்பட்ட, இறைவனின் வல்லமையை நேரில் கண்ட ஆதம் நபியே தவறு செய்துவிட்டார். எனவே பாவம் என்ற இயற்கை குணத்திற்கு எந்த மனிதனும் அற்பாற்பட்டவனல்ல.
  4. கனி உண்ணப்படக்கூடாது என்று இறைவன் விரும்பியிருந்தால், அந்த மரத்தை படைக்காமலேயே இருந்திருக்கலாம். அந்த தோட்டத்தில் ஆதம் நபியை அனுப்பாமல் இருந்திருக்கலாம். குறைந்த பட்சம், அந்த மரத்தை பற்றி எதுவும் சொல்லாமலாவது இருந்திருக்கலாம். சொன்னால் தான், ”என்ன”-வென்று பார்க்கத் தோன்றும்.
  5. மரத்தை நெருங்குவது. கனியை உண்பது என்பது, கொலையை போல, விபச்சாரத்தை போல பெரிய பாரதூரமான விஷயமா என்று நாம் நினைப்போம். அல்லாஹ்வை பொறுத்த வரையில், இது அவனுடைய கட்டளை.

என்று தெரிந்த ஒரு செய்தியையே, பல கோணத்தில் சிந்தித்து விளக்கமுடியும். இப்படி செய்யும்போது, தெரிந்த செய்தியை கேட்பதனால் ஏற்படும் சலிப்பு குறையும். எனவே, எந்த சம்பவத்தையும் மக்அப் செய்த மாணவன், வாத்தியாரிடம் ஒப்பிப்பது போன்று சொல்லாதீர்கள். ஒவ்வொரு முறை பேசும் போதும், ஒவ்வொரு கோணத்தில் பேசுவது என்பது சிரமமான காரியமாக இருந்தாலும், குறைந்த பட்சம், உற்சாசமாக இருக்கும் போதாவது, அதிகமான மக்கள் கேட்கும் போதாவது, ஓரிரு செய்திகளை வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்தி பேசுங்கள். பிஜேயின் பேச்சை நுணுக்கமாக கவனிப்பவர்கள் இந்த முறையை விளங்க முடியும். ஒரே குர்ஆன் வசனத்தை 10 வருடத்திற்கு முன்னர் பேசிய பேச்சையும், இன்று பேசும் பேச்சையும் ஒப்பிட்டால் இரண்டிலும், ஒரே வசனத்தை விளக்கும் முறைகள் வேறுபட்டிருக்கும். உதாரணமாக,

என்று ஒரே தலைப்பை நேற்று ஒருகோணத்திலும், இன்று ஒருகோணத்திலும் பேசும்போது. புதுசெய்தியாக தோற்றமளிப்பதால் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கும். இதுபோன்று பல்வேறு அறிஞர்களின் ஏராளமான செய்திகள் உள்ளன. புதியவர்கள், ஆரம்பத்தில் அவற்றை எடுத்து பயன்படுத்துங்கள். அனுபவம் ஆகஆக நீங்களாக சிந்தித்து பேசுங்கள். வித்தியாசமான கோணத்தில் பேசத்தெரியாதவர்கள், புதியபுதிய உதாரணங்களை கொண்டு விளக்கிப்பேசுவது, இந்த இழப்பை ஈடுகட்டும். v அதிகம் கேள்விப்படாத ஹதீஸ்களை பயன்படுத்துங்கள் கேட்டதையே திரும்பத்திரும்ப கேட்பதற்கு, யாருக்கும் லேசாக சலிப்புத் தட்டும், என்ற காரணத்தினால் சொன்னதையே திரும்பச்சொன்னாலும், வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை முன்னர் பார்த்தோம். அதே போல, புதுப்புது ஹதீஸ்களை அவ்வப்போது பயன்படுத்துங்கள். அரபி கிதாபுகளை பார்த்து, ஹதீஸ் தரம் பார்த்து, புதுப்புது ஹதீஸ்களை கூற இயலாதவர்கள், மக்கள் அதிகம் கேள்விப்படாத ஹதீஸ்களை, பழைய நூல்களிலிருந்தும், இணையத்தில் உள்ள கட்டுரைகளிலிருந்தும் படித்து, அவற்றை பயன்படுத்தலாம். சரியானது தானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். கேள்விப்படாத ஹதீஸ்களை கேட்பதற்கு மக்கள் அதிகம் விரும்புவார்கள். Ì முக்கியமான உரைகளில், முடிந்தஅளவு ஒரேஒரு புது ஹதீஸையாவது பயன்படுத்துங்கள். புகாரி, முஸ்லிம் தழிழாக்கங்கள் இருக்கின்றன. அதில் உள்ள ஹதீஸ்களில் பாதிக்கும் மேற்பட்டவைகளை மக்கள் அறிந்திருந்தாலும், அதிகம் அறியப்படாத ஹதீஸ்களும் இருக்கின்றன. எனவே அதிலிருந்து கூட கேள்விப்படாத ஹதீஸ்களை எடுத்துப் பயன்படுத்த முடியும். v துணிச்சலாக, உறுதியாக பேசுவது, நம்பிக்கையை அதிகப்படுத்தும். எந்த கருத்தையும், துணிச்சலாக பேசுவதை மக்கள் விரும்புவார்கள். நாம் சொல்வது சரி என்று உறுதியாக நம்பி, அதனால் ஈர்க்கப்படுவார்கள். உதாரணமாக)

என்பது போன்ற துணிச்சலான பேச்சுக்கள், பிரச்சாரத்தில் வீரியத்தை ஏற்படுத்தும். துணிச்சலான பேச்சுக்களை பேசும் போது, பேச்சு அதிரடியாக, கம்பீரமாக இருக்கவேண்டும். பொதுவாக, அதிரடியாக பேசுபவருக்கு எங்குமே தனிமதிப்பு உண்டு. அந்த மதிப்பை பயன்படுத்தி இஸ்லாத்தை போதிக்கவேண்டியது நம் கடமை. Ì உறுதியான பேச்சு என்றதும் என் நினைவிற்கு வருவது, ஈரான் அதிபர் அஹமதுநிஜாத் அவர்கள், கடந்த 2012-ல் ஜ.நா சபையில் பேசிய பேச்சுக்கள் தான். உலகின் அனைத்து நாட்டு தலைவர்களும் கூடியிருக்கும் சபையில், இறைவனை புகழ்ந்து, நபியை நினைவுகூர்ந்து, இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தி பேசியவர். அமெரிக்காவை தோலுரித்துக்காட்டியவர். உலகநாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வரிசையாக சொல்லும் போது, ”முதலில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று துணிச்சலாக பேசியதை காணும் எவரும், அவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. (Policymic (Michael Luciano) 26 Sept, 2012) v தவறான எதிர்கருத்தை சாடிப்பேசுவது நாம் யாரை விரோதியாக நினைக்கிறோமோ அவரை பற்றி யாராவது நாலு வார்த்தை நறுக்குனு கேட்டால், நமக்கு உற்சாகமாக இருக்கும். இது எல்லோருக்குமே உள்ள இயல்பு. இந்த இயல்பை நல்ல செய்திகளை சொல்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்ஹப்களில், தரீக்கா - சூஃபியிஸ கொள்கைளில், உள்ள கருத்துக்களினால் ஏற்படும் தீமைகளை சாடிப்பேசுங்கள். சஹாபாக்களை பின்பற்றுவதால் ஏற்படும் விபரீதங்களை சாடிப்பேசுங்கள். இது மிகமிக அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக)

இதுபோன்ற சாடல் பேச்சுக்கள், மக்களை நன்றாக கவரும். உற்சாகத்தை தரும். உங்கள் பயானில் வெறும் சட்டங்களை மட்டும் வரிசையாக சொல்லிக் கொண்டிருக்காமல், இதுபோன்ற தவறான கொள்கைகளை சாடிப்பேசும் சாடல் பேச்சுக்களை மறந்துவிடாதீர்கள். அதே சமயம், மத்ஹபை சாடிப்பேசும்போது, மத்ஹப்பை எதிர்க்கும் மக்களுக்குத்தான் உற்சாகமாக இருக்கும். மத்ஹபை பின்பற்றும் மக்கள், அதை நேசிக்கும் மக்களுக்கு உங்களது பேச்சு வெறுப்பூட்டும். அதை சரிசெய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பொதுவாக யாரையாவது திட்டினால், தவறு அவரிடத்தில் இருந்தால் கூட, அவருக்கு கோபம் வரும். திட்டிவிட்டு, நான் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? சிந்தித்துப்பாருங்கள், என்பது போன்ற வரிகளை பயன்படுத்திவிட்டால், மத்ஹப்வாதிக்கு கோபம் வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விகள் அவரை சிந்திக்கத்தூண்டும். Ì இப்படியும், விமர்சிக்கலாம் – யாரிடத்தில் பாராட்டுவதற்கு சில நல்லவிஷயங்கள் இருக்கிறதோ முதலில் அதனை பாராட்டிவிட்டு பிறகு, ”இது சரியாக இருந்தாலும், நீங்கள் செய்யும் பித்அத் சரியா?” என்ற வகையில் விமர்சனம் செய்வது, நியாயமான விமர்சனமாக காட்சியளிக்கும். உதாரணமாக) பிஜே, தப்லீக் ஜமாஅத்தை பற்றி விமர்சிக்கும் போது. அதனை பாராட்டி ஆரம்பிப்பார். பிறகு அதன் குறைகளை சுட்டிக்காட்டுவார். இது, அவர்கள் திருந்த வழியாக அமையும். அதுபோல, மத்ஹப்வாதிகளை திட்டுவதற்கு முன்னால், ”இந்த பகுதி ஜமாத்தினர், ஏழைகளுக்கு உதவி செய்கின்றர். இவர்கள் நல்ல மக்கள்” என்று அவர்களிடத்தில் உள்ள நல்ல விஷயங்களை கூறிவிட்டு, பிறகு குறைகளை சுட்டிக்காட்டலாம்.  இது நடுநிலையான விமர்சனமாக இருக்கும். எல்லா நேரங்களிலும் இது சாத்தியப்படாது என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போது, செயல்படுத்துங்கள். v உணர்வுப்பூர்வமான, உருக்கமான செய்திகளை பயன்படுத்துங்கள். ஒரு உரை பிறரை கவருவதற்கும், பிறரால் அங்கீகரிக்கப்படுவதற்கும் உள்ள மிகஎளிய வழி, உணர்ப்பூர்வமான செய்திகளை பயன்படுத்துவது தான். உணர்வுபூர்வமான மற்றும் உருக்கமான செய்திகளை பயன்படுத்தும் போது, வயது வித்தியாசம் இல்லாமல் மக்களை ஈர்க்கமுடியும். நாற்காலியில் தொய்வாக சாய்ந்து உட்கார்ந்திருக்கும் மனிதன், அதன் விளம்பில் வந்து அமர்ந்து காதுகொடுத்து கேட்பான். நீங்கள் சொல்லும் செய்தியில் ஒரு வார்த்தை கூட விட்டுவிடாமல், கவனமாக கேட்பார்கள். உதாரணமாக)

என்பது போன்ற கண்கலங்க வைக்கும் உணர்வுபூர்வமான இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள். உங்கள் பயான் விருவிருப்பானதாக ஆகிவிடும். இதில் உள்ள மற்றொரு நன்மை, இதன் மூலமாக சொல்லப்படும் அறிவுரையை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். மறக்கவும் மாட்டார்கள். நபியவர்களின் உரையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ”(எங்களுக்கு) நபி(ஸல்) அவர்கள், ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. அதில் நான் கேட்டதை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாக சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்றார்கள். (புகாரி 4621) மக்களை கண்கலங்க வைக்கும் செய்திகளுக்கு என்றைக்குமே மதிப்புண்டு. எனினும், ஒருமணிநேர உரையில் இதுபோன்ற செய்திகள், அதிகபட்சம் ஒன்றோ, இரண்டோ சொல்லுங்கள். குறைவாக இருந்தால் தான் அதற்கு மதிப்பிருக்கும். அதை நினைவில் வைப்பார்கள். இதுபோல பத்து செய்திகளை பயன்படுத்தினால், எதுவும் நினைவில் இருக்காது. எதற்கும் மதிப்பிருக்காது. v நகைச்சுவையை பயன்படுத்துவதில் தவறில்லை. பேச்சின் நடுவே நகைச்சுவையை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. தூங்கிவழியத் தயாராகும் மக்களை விழிப்படையச் செய்யவும், மந்தமான மக்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், நகைச்சுவை பயன்படுகிறது, நகைச்சுயை பயன்படுத்துபவர் மக்களின் விருப்பத்திற்கு உரியவராகிவிடுகிறார். நகைச்சுவை நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துகிறது, சிரமமானதை இலகுவாக காண்பிக்க உதவுகிறது. சிலநேரங்களில் சிந்திக்கவும் தூண்டுகிறது. செய்தியோடு கலந்த நகைச்சுவை: நகைச்சுவை, செய்தியோடு இணைந்ததாக இருந்தால், அது பாரட்டப்படவேண்டியது. ஏனெனில் நகைச்சுவைக்கென தனியாக நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. மேலும், நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட செய்தியும், மனதில் நன்றாக பதியும். உதாரணமாக,  ”கெட்ட கனவு வந்து விழித்தால், பாங்கு சொல்ல வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பள்ளிக்கு சென்று மைக்கை பிடித்து, நைட் 2 மணிக்கு பாங்கு சொல்லிவிடக்கூடாது” என்று, சொல்லும் சட்டத்தோடு கலந்து நகைச்சுவையை சொல்வது. இது செய்தியோடு கலந்த நகைச்சுவை முறை. செய்தியோடு கலக்காத தனி நகைச்சுவை: செய்திகளோடு கலக்காமல், ஏதோ இரண்டு நகைச்சுவையை படித்துக்கொண்டு வந்து செய்திகளுக்கு நடுவில் பயன்படுத்தினால், ஒட்டவைத்தது போல இருக்கும். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த போக்கையும் அங்கீகரித்துக் கொள்கிறார்கள். நகைச்சுவையை சொல்லும்போது கீழ்காணும் அறிவுரைகளை நினைவில் வையுங்கள். நகைச்சுவையை பயன்படுத்தும் வழிமுறைகள்:

முதல் ஆக்கம் பெண்கள் பல்லை காட்டிக்கிட்டு, பால்காரன்ட பேசிட்டு இருப்பாங்க.
மறு ஆக்கம்-1) பெண்கள் பல்லை காட்டிக்கிட்டு, பால்காரன்ட, ”என்னன்னே! பால்ல தண்ணீ ஊத்துனிங்களா? இல்ல தண்ணியில பாலை ஊத்துனிங்களா?” னு பேசிட்டு இருப்பாங்க.
மறு ஆக்கம்-2) பெண்கள் காலைல ஈன்னு பல்லை காட்டிக்கிட்டு, பால்காரன்ட, ”என்ன பால்காரரே! சவுக்கியமா? வரவர பாலு மினரல் வாட்டர் மாதிரி இருக்கு. பால்ல தண்ணீ ஊத்துனிங்களா? இல்ல தண்ணியில பாலை ஊத்துனிங்களா?” னு கதைபேசிட்டு இருப்பாங்க.

  இவ்வாறு ரீடிஃபைன் செய்வது நகைச்சுவையை மெருகூட்டும். இதுபோன்ற விதிகளை கவனத்தில் கொண்டு நகைச்சுவை செய்தால், ரசிக்கும்படி இருக்கும். நகைச்சுவைக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. நகைச்சுவையில் நாட்டமுள்ளவர்கள், அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். நேரமிருந்தால் அதற்கென்றே தனி நோட்டு போட்டு கொள்ளவும். அவ்வப்போது, கிடைக்கும் நல்ல நகைச்சுவையை அதில் எழுதிவைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். பயானுக்கு கிளம்பும்போது பார்த்துக்கொள்ளுங்கள். Ì சிரிப்பு, மனிதனின் டி-செல்ஸ் மற்றும் ஹார்மோன்களை தூண்டி, அதன் மூலம் மனிதனை சுறுசுறுப்படையச் செய்கிறது, சிரிக்கும்போது, உடல் அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்வாங்குகிறது. இதனால் தசைகள் தளர்கின்றன. மன அழுத்தம் குறைகிறது. உடல் சோர்வு குறைகிறது. இரத்த ஒட்டம் சீராகிறது. எனவே  சிரிப்பிற்கு பின்பு வரும் தகவல்களை, மூளை உடனடியாக கிரகித்துக்கொள்கிறது (மேற்கண்டவை, கலிபோர்னியாவின் லின்டா பல்கலைகழகத்தின் டாக்டர் லீ பெர்க் தலைமையிலான குழுவின் ஆய்வின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்கள்) v நகைச்சுவை சரி. படிப்பினை என்ன? எப்போதுமே சீரியஸாகவே இருக்கும் ஒருசிலரும், முதியவர்களும் பெரும்பாலும் ஜோக் அடிப்பதை விரும்புவதில்லை. பயான்ல எதுக்கு ஜோக்கு என்று கேட்பார்கள். வாழ்க்கைக்கு பயன்படும் அறிவுரையோ, ஹதீஸோ சொல்லப்படும் என்ற எண்ணத்தில் பயானுக்கு வருவார்கள். பசிக்குத்தான் உணவு என்றாலும், ருசியும் தேவையாகத்தானே இருக்கிறது! எனவே, இவர்கள் விரும்பவில்லை என்பதற்காக, நகைச்சுவையை தவிர்க்க முடியாது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, நகைச்சுவையை சொன்ன பிறகு, அது தொடர்பான அறிவுரையை உடனே சொல்லிவிடவேண்டும். நகைச்சுவை மற்றும் உலகச்செய்திகளின் இறுதியில் எந்த படிப்பினையும் இல்லாவிட்டால், ”சிரிக்க வைத்து நேரத்தை போக்குறாரு” என்று சிந்திப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். உண்மையும் அதுதான். கவனம் தேவை. எனவே, நகைச்சுவைக்கு பிறகு அப்படியே அடுத்த செய்திக்கு போய்விடாமல், அந்த நகைச்சுவை போல் நம் நிலை ஆகிவிடக்கூடாது. கவனமாக இருங்கள். அல்லாஹ் இப்படி சொல்கிறான். ஹதீஸில் இப்படி இருக்கிறது, என்று அறிவுரை சொன்னால்,  ”ஜோக் அடிச்சாலும், மேட்டரை சரியா சொல்லிப்புட்டாரு” என்று ஒத்துக்கொள்வார்கள். ஜோக் அடித்ததை தவறென்று சொல்ல மனம் வராது. அதுபோல வெறும் நகைச்சுவையாக இல்லாமல், அறிவுரை கலந்த நகைச்சுவை சொல்வதையும் யாரும் தவறென்று கூறமாட்டார்கள். அதுபோல, மக்கள் நகைச்சுவையை வெறுக்கும் இன்னொரு சந்தர்ப்பம், சீரியஸான சம்பவம் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஜோக்அடிப்பது. நரகத்தை பற்றிய நகைச்சுவை தெரிகிறது என்ற காரணத்திற்காக, நரகத்தில் கிடைக்கும் தண்டனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, ஜோக் அடிக்கக்கூடாது. சீரியஸான செய்தியை உள்வாங்கும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டு, பயானோடு ஒன்றி கவனிப்பவர்களுக்கு இந்த நகைச்சுவை வெறுப்பைத்தரும். கோர்வையில்லாத பேச்சுக்கு இது ஒரு உதாரணம். எனவே எதையும் இடமறிந்து பயன்படுத்துங்கள். v நகைச்சுவை பற்றிய மார்க்க சட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் பிறரது நகைச்சுவையை கேட்டு சிரித்திருக்கிறார்கள். பிறரை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்,  எனவே சிரிப்பதற்கும் பிறரை சிரிக்க வைப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. எனினும், அதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதிகமான நகைச்சுவை கூடாது - நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.  (இப்னுமாஜா 4183) எனவே, அதிகமாக சிரிப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்கதல்ல. மேலும் பயான் என்பது அறிவுரைக்காகத் தானேயன்றி சிரித்து நேரத்தை போக்குவதற்காக அல்ல. எனவே செய்திகளோடு கலந்த நகைச்சுவையாக இருந்தால் ஒருமணிநேர உரையில் மூன்று, நான்கு பயன்படுத்தலாம். செய்திகளோடு கலக்காத நகைச்சுவையை, ஒரு பயானில் அதிகபட்சம் ஓன்றோ, இரண்டோ பயன்படுத்துங்கள். அதற்குமேல் கண்டிப்பாக வேண்டாம். பாயனை இனிப்பூட்டுவதற்காக மட்டும் நகைச்சுவையை பயன்படுத்துங்கள். மக்களை சிரிக்க வைத்து கைதட்டல் பெறுவதற்காக பயன்படுத்தக்கூடாது. Ì பொய்யான சம்பங்கள் கூடாது – நடக்காத செயலை நடந்ததாக சொல்லி மக்களை சிரிக்கவைப்பவனை நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். ”எவன் (ஒரு) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியை கூறுகிறானோ அவனுக்கு கேடுதான். அவனுக்கு கேடுதான்.  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2237) நாம் சொல்லும் நகைச்சுவை சம்பவங்கள் பெரும்பாலும் நடந்தவையில்லையே! அவை பொய்யான செய்தியாக ஆகுமா? என்றால் ஆகாது. ”ஒரு ஊர்ல ஒரு சர்தார்ஜி இருந்தாராம். கடைக்கு போனாராம்” என்று நாம் சொல்லும் சம்பவங்களை, நடந்த உண்மை சம்பவம் என்று நாம் அவற்றை சொல்வதில்லை. மக்களும் அவ்வாறு நினைப்பதில்லை. ஒரு கற்பனை கதையாகவே நினைக்கிறார்கள். எனவே, நடக்காததை நடந்ததாக பொய் சொன்னதாக இது ஆகாது. மாறாக, ”நேற்று நான் பஸ்ல போகும் போது. ஓருத்தர் வந்தாரு…” என்று உண்மையாக நேற்று நடந்தது போலவே சொன்னால் அதுதான் பொய்யான செய்தி. அது கூடாது. v நன்மை செய்யத் தூண்டிப் பேசுங்கள். (Persuasion) பொதுவான சம்பவங்கள், வரலாறுகள், நாட்டுநடப்புகள் எல்லாம் சொல்லவேண்டும் தான். அதேநேரத்தில், அவற்றை சொல்லிவிட்டு, அதை பயன்படுத்தி நன்மை செய்யும்படி தூண்டிப்பேசவேண்டும். மக்களின் மீது அக்கறை கொண்ட பலஅழைப்பாளர்கள், ”இனிமேல் இந்த பாவத்தை செய்யமாட்டேன்னு சங்கல்பம் எடுங்கள்” என்பது போல மக்களை தூண்டிப்பேசுவதைப் பார்க்கலாம். இதை பலபேர் விரும்புவார்கள். உதாரணமாக,

என்பது போன்ற காரிய பேச்சுக்கள், மக்களை செயல்பட தூண்டும். எந்த பேச்சு அவர்களை செயல்பட வைக்கிறதோ, அதை விட நன்மை தரக்கூடிய பேச்சு வேறென்ன இருக்கிறது! Ì உளவியல் ரீதியாக மற்றொரு நன்மையும் உண்டு. உங்கள் பேச்சினால் செயல்பட்ட மக்கள், இனிமேல் உங்கள் பேச்சை அதிகம் கவனம் செலுத்தி கேட்பார்கள். உதாரணமாக, நீங்கள் வழியுறுத்திய பிறகு, புகை பழக்கத்தை விட்டவர், சினிமா பார்ப்பதை விட்டவர், இனி நீங்கள் பேசும் பேச்சை அதிகம் விரும்பிக் கேட்பார். v தவறான நம்பிக்கைகளை அகற்றுதல். ஒவ்வொரு ஜும்மா உரையிலும் சரி, பெண்கள் பயான், மேடைப்பேச்சு போன்ற இடங்களிலும் சரி, அந்த உரையில் ஒரே ஒரு தவறான நம்பிக்கையாவது அகற்றப்படவேண்டும் என்பதை குறிக்கோளாக ஆக்குங்கள். உதாரணமாக) பிரார்த்தனையை பற்றி பேசுகிறீர்கள் என்றால், துஆவின் ஆரம்பத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து, ஸலவாத் சொல்லி தான் துஆ கேட்கவேண்டும் என்று பொதுவான ஒரு நம்பிக்கை உள்ளது. இது தவறு என்பதையும், எப்படி தவறு என்பதையும் விளக்குங்கள். இத்தனை வருடமாக தாங்கள் செய்துவந்த தவறு, திருத்தப்பட்டதனால், பயனுள்ள பயானை கேட்ட திருப்தி மக்களுக்கு கிடைக்கும். ஏராளமான மக்களிடத்தில் உள்ள ஒரு அறியாமையை அகற்றிய நன்மையும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் சில உதாரணங்கள்)

என்பது போன்ற ஏராளமான விஷயங்களின் உண்மை நிலையை விளக்கி, மக்களின் அறியாமையை போக்குங்கள். உண்மையில் பிரச்சாரத்தின் நோக்கத்தில், அறியாமையை அகற்றுவதும் மிகமுக்கியமான ஒன்று. Ì பலஹீனமான ஹதீஸ்களை தெளிவுபடுத்துங்கள். நாம் இதுவரை சரியென்று நினைத்துவந்த ஹதீஸ்கள் மற்றும் மக்கள் பொதுவாக சரியென்று நினைக்கும் ஹதீஸ்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதும், அறியாமையை அகற்றுவதில் அடங்கும். உதாரணமாக)

இவையெல்லாம் பலஹீனமான ஹதீஸ்கள். இந்த நூலின் இறுதியில் மேலும் சில பலவீனமான ஹதீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நினைவில் வைத்து, அவ்வப்போது, இவற்றின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணாக உள்ள, அறிவுக்கு பொருந்தாத பலஹீனமான செய்திகளை சொல்லும்போது, சிலபேச்சாளர்கள் அந்த செய்திகளை மட்டும், வித்தியாசமான தொனியில் பேசுவார்கள். உதாரணமாக, ”அல்லாஹ் ஆதமை படைக்கும்போது ஜிப்ரீலை அனுப்பினானாம். பூமி மண் தர மறுத்ததாம். பிறகு மலக்குல்மவ்தை அனுப்பினானாம். அவர் எடுத்தாராம்” என்று போனாராம், வந்தாராம் என தொனியை வித்தியாசமாக்கி பேசுவது. அதாவது சொல்லும் செய்தி பொய்யான செய்தி என பேச்சு ஸ்டைலிலேயே தெரியப்படுத்துவது, பல அனுபவமுள்ளவர்களின் நடைமுறை. இது போன்ற யுக்திகள், பேச்சையும் மெருகூட்டும். பயானை புரிந்துகொள்ளத் தேவையான மூளைப்பளுவையும் குறைக்கும். v நிகழ்கால பிரச்சனைகளை கலந்து பேசுங்கள். மக்களோடு, மக்களின் தற்போதைய பிரச்சனைகளோடு ஒன்றிப்பேசுங்கள். தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை, விலைவாசி, தீவிரவாதம் போன்றவற்றின் தற்போதைய மற்றும் கடந்தகால நிலை, அவர்கள் படும் அவஸ்தை, நாம் என்ன செய்யவேண்டும், போன்றவற்றை மக்களோடு மக்களாக ஒன்றிப்பேசுங்கள். எப்போதுமே, நிகழ்கால பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு, அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதும், அதற்கான இஸ்லாமிய தீர்வையும் சொல்வதும், நவீன பயானாகவும், பயனுள்ள பயானாகவும் இருக்கும். மேலும், அவர்களின் இன்ப, துன்பங்களை பற்றி பேசுவதால், உங்களுக்கும், மக்களுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியும் குறையும். பொதுவாக எப்போதுமே, பயானுக்கு போகும்போது அன்றைய செய்தித்தாள்களை படித்துவிட்டு போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்லாம் இனிய, எளிய மார்க்கத்திற்கு இது மிகவும் முக்கியமானது. மறந்துவிடாதீர்கள். v புதுசெய்திகள் ஆர்வத்தை அதிகப்படுத்தும். புது ஹதீஸ்களை பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். உலக விஷயங்களிலும், இது தான் விதி. பயானுக்கு குறிப்புகளை சேகரித்து ஒரு பேப்பரில் எழுதியபிறகு இறுதியாக, மறக்காமல் இணையதளத்திலிருந்தோ, சமீபத்திய செய்தித்தாள்களிலிருந்தோ ஒரிரு புது சம்பவங்களை குறித்துக்கொள்ளுங்கள். புதுபுது சம்பவங்களை சொல்லும் போது, மக்கள் ஆர்வமாக கேட்பார்கள். புது செய்திகளுக்கு எக்காலத்திலும் பஞ்சமேயில்லை. இன்று நேற்றைய செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களை புரட்டுங்கள். இணையத்தில் ஜந்து நிமிடம் உலாவுங்கள், ஏதாவது இரண்டு புதுசெய்திகள் கிடைக்கும். அவற்றை பயன்படுத்துங்கள். உதாரணமாக,

இந்த போன்ற, ஏதேனும் ஒரு தலைப்பிற்கு தொடர்புடைய உலகச்செய்தியை, பயானுக்கு நடுவே எந்த இடத்தில் நுழைக்கலாம் என்று பார்த்து, இடையில் நுழைத்துப் பேசுங்கள். பயான் வெறும் டேட்டாவாக இல்லாமல், நிகழ்கால சம்பவங்கள் இணைந்த பயானாக இருக்கும். பயான் மிகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். இது மிகவும் முக்கியமான அறிவுரை. இதை மறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்துகொள்ளுங்கள். v நிறைவேறிய, எதிர்கால முன்னறிவிப்புகள் மக்களை ஈர்க்கும் நடந்தேறிய முன்னிவிப்புகளை சொல்லி, இஸ்லாம் இறைவனின் மார்க்கம் தான் என்பதை விளக்குவதன் அலாதியே தனிதான். உதாரணமாக ஒரு செய்தியை பாருங்கள்,  நபியவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளி கட்டப்பட்டது. அதற்காக அம்மார்(ரலி) கற்களை சுமந்துவந்தார்கள். மற்றவர்களெல்லாம் ஒவ்வொரு கல்லாக சுமந்து வந்தபோது, அம்மார் இரண்டிரண்டு கற்களாக சுமந்துவந்தார்கள். இதை கண்ட நபி(ஸல்) அவர்கள், அம்மாரின் முகத்தில் உள்ள புழுதியை துடைத்தவர்களாக, ”பாவம் அம்மார். வரம்பு மீறிய ஒரு கூட்டம் அம்மாரை கொலை செய்யும்” என்றார்கள். நபியின் மரணத்திற்கு பிறகு, அபூபக்கர், உமருக்கு பிறகு, அலீயின் ஆட்சிகாலத்தில், அலியின் ஆட்சியிலிருந்து வரம்புமீறி சிரியாவை தனிநாடாக அறிவித்து ஆட்சியை பிரித்த முஆவியா அவர்களின் படையால், அம்மார் கொலை செய்யப்பட்டார்கள். மாநபியின் முன்னறிவிப்பு நிறைவேறியது. நபி இறந்த பிறகும், அவர் இறைனின் தூதர் தான் என்று அல்லாஹ் நிரூபித்தான். இதுபோன்ற செய்திகளை சொல்லுகிற விதத்தில் சொன்னால், கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும். மக்களை உங்களை நோக்கி ஈர்க்கும். Ì இவை மட்டுமல்லாமல், பேய் பிசாசு, அது சம்பந்தமான அருகில் நடந்த சம்பவம் பற்றி பேசினால் மக்கள் ஆச்சர்யமாக கேட்பார்கள். கியாமநாளின் அடையாளங்கள் மக்களை வெகுவாக கவரும். இதுதவிர, முஸ்லிம் விரோதிகளின் சதிகள், இஸ்லாத்தின் தனித்தன்மையை உணர்த்தும் அறிவுரைகள், இஸ்லாம் கூறும் மனநல ஆலோசனைகள், இணையதளத்தில் வைக்கப்படும் வினோதமான வாதங்கள், அவற்றின் பதில்கள், மலேசியா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் உள்ள வினோதமான பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள், நமது சமுதாயம், ஜமாத் சமீபத்தில் பெற்ற அநீதிக்கு எதிரான வெற்றி போன்ற செய்திகளெல்லாம் மக்களின் கவனத்தை பன்மடங்கு ஈர்ப்பவை. எனவே, ”எனது பேச்சை மக்கள் கவனிப்பதில்லை” என்று வருத்தப்படும் பிரச்சாரகர்கள், இதுபோன்ற பேச்சுக்களின் மூலம் மக்களை ஈர்க்கமுடியும். பிரச்சாரப்பணியைப் போன்ற நன்மைகளை கொள்ளையடிக்கும் பணி வேறெதுவும் இல்லை. இந்தப்பணியில் தொடர்ந்து இருப்பதற்கு தெளிவான, கவரக்கூடிய பேச்சு அவசியம் என்ற காரணத்தினாலேயே, கவனத்தை ஈர்க்கும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளக்கப்பட்டுள்ளது. v முதல் ஈர்ப்பே, சிறந்த ஈர்ப்பு. First Impression is the Best impression என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முதல் ஈர்ப்பே சிறந்த ஈர்ப்பு என்பது அதன் பொருள். பயானில் மட்டுமல்ல. எந்த இடத்திலும், முதலில் சிறப்பாக செய்தால், அது உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிடும். பிறகு நீங்கள், சுமாராக செய்தாலும், அதை பொருட்படுத்த மாட்டார்கள். எனவே எந்த உரையிலும், முன்னுரையில் ஒரு நல்ல கருத்தையும், அதற்குத்தகுந்த குர்ஆன் ஹதீஸையும் அழகாக விளக்கிக்கூறுங்கள். புதியவர்களுக்கு உள்ள எளிய வழி, அனுபவம் உள்ள அறிஞர்கள் ஏற்கனவே பேசிய பேச்சில் உள்ள முன்னுரையை எடுத்துச்சொல்வது தான். இதுதவிர, புது இடத்திற்கு பேசப்போகும் போது, அதிக நேரம் ஒதுக்கி, சிரத்தை எடுத்து, குறிப்புகளை சேகரித்து பேசுங்கள். கவனமில்லாமல் ஏனோ, தானோ, என்று பேசிவிட்டு வந்தால், இவர் சரியாக பேசமாட்டார் என்று முடிவுகட்டிவிடுவார்கள். நல்ல இடங்களில், தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஜம்பது பேருக்கு பிரச்சாரம் செய்வதை விட, ஜநூறு பேருக்கு பிரச்சாரம் செய்வது, அதிக நன்மை தரக்கூடியது தானே! Ì இஸ்லாமிய பயான் அல்லாத மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும், முதல் ஈர்ப்பை மிகப்பெரிய யுக்தியாகவே வைத்திருக்கிறார்கள். பிரபலமான பேச்சாளர்களின் பேச்சை கவனித்துப்பாருங்கள், பேச ஆரம்பிக்கும் போது, சமீபத்தில் அவர் சந்தித்த ஒரு சுவையான சம்பவத்தை சொல்லி, அதன் பிறகே,  தான் சொல்லவந்த தலைப்பை பற்றிப் பேசுவார். இவ்வாறு செய்வதன் மூலம், ஆரம்பத்திலேயே மக்களின் கவனத்தை முழுமையாக நம் பக்கம் திருப்பிவிட்டு, பின்னர் நம்முடைய கருத்தை பதியவைக்க முடியும். இது மிகவும் பயனளிக்கக்கூடிய வழிமுறை. இதுவரை மக்களை கவரும் பேச்சு முறைகளை பார்த்தோம், இனி பேச்சாளர்கள் செய்யும் தவறுகளையும், தவிர்க்கவேண்டியவைகளையும் காண்போம்.

பேச்சில் தவிர்க்கவேண்டியவை.

v சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று நொடிப்பொழுதில் முடிவெடிக்கவேண்டியிருக்கும். குழப்பமே வேண்டாம். சந்தேகம் வந்துவிட்டால், அந்த செய்தியை, ஹதீஸை கண்டிப்பாக சொல்லாதீர்கள். உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே. (குர்ஆன் 17:36) என்று அல்லாஹ் நமக்கு கற்றுத்தரும் விதியை, பேச்சில் மட்டுமல்ல எல்லா நேரத்திலும் நினைவில் வைத்து பயன்படுத்துங்கள். மேலும், ”சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு” என்று நபியவர்களும் கூறியுள்ளார்கள். (திர்மிதி 2442) எனவே, ஒருபோதும் சந்தேகத்திற்குறியதை பேசிவிடாதீர்கள். பயானை முடித்த பிறகு, அந்த செய்தி சரியானது தானா என்று ஆய்வு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். v தேவையானதை பேசுங்கள். தெரிந்ததையெல்லாம் பேசாதீர்கள். சிலர் பேசும் போது கவனித்திருப்பீர்கள், ஏராளமான செய்திகளை வரிசையாக மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். பேசுவது தலைப்பிற்கு உட்பட்ட செய்தியா? இல்லையா? என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஒருமணி நேர உரையில் நாற்பது, ஜம்பது செய்திகளை மனம்போன போக்கில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த பேச்சு விறுவிறுப்பாக இருந்தாலும், இது தரமான பேச்சு அல்ல. நீங்கள் அரசியல்வாதியாக ஆகவிரும்பினாலே தவிர, இவ்வாறு பேசிப்பழகாதீர்கள். ஏதனால் இப்படி பேசுகிறார்கள்? : பேச்சை முன்னரே வரையறுக்காதது தான் இதற்கு காரணம். இவர்கள் நேரத்தை ஒதுக்கி சரியாக குறிப்புகளையும் எடுப்பதில்லை. அதை கோர்வையாக்குவதும் இல்லை. தலைப்பை நினைவுபடுத்தும் வெறும் நான்கே செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு, தனக்கு தெரிந்த (மக்கள் ரசிக்கும்) செய்திகளைக் கொண்டு மீதி நேரத்தை நிரப்புவார்கள். இவ்வாறு செய்யாதீர்கள். குறிப்புகளை சேகரிக்கும் போது, தலைப்பிற்கு உட்பட்ட செய்திகளை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள். ஏதோ பத்து செய்திகள் இருந்தால் போதும், தொடர்புபடுத்தி பேசிவிடாலாம், என்று இருந்துவிடாதீர்கள். நீங்கள் தரமான பேச்சாளாராக ஆக விரும்பினால், இதை மனதில் நிறுத்துவது அவசியம். Ì விதிவிலக்கு: மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சிலநேரம் தலைப்பிற்கு தொடர்பில்லாத சுவைமிகுந்த ஒரு சம்பவத்தை சொல்லவேண்டியிருக்கும். அப்போதும் கூட, எப்படியாவது ஒருதொடர்பை ஏற்படுத்திவிட்டு தான் அந்த சம்பவத்தை சொல்லவேண்டும். உதாரணமாக) தொழுகையை பற்றி பேசும்போது, பக்கத்து தெருவில் நடந்த திருட்டை பற்றி சொல்லியே ஆகவேண்டுமெனில், திருட்டை பற்றி சொல்லிவிட்டு, ”இதுபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் தொழுகையாளி பதட்டப்பட மாட்டார்”  என்று எப்படியாவது ஒரு தொடர்பை உருவாக்கிவிடவேண்டும். ”இதை எதுக்கு இந்த தலைப்புல சொல்லுறாரு!” என்று மக்கள் கருதுகிற வகையில், சம்பந்தம் இல்லாமல் எதையுமே சொல்லக்கூடாது. v சஸ்பென்ஸ் வேண்டாம். 3 விஷயங்கள் உள்ளன. 4 விஷயங்கள் உள்ளன. என்பது போன்ற ஹதீஸ்களை கூறும் போது, அந்த மூன்றையும் சொல்லி விடுங்கள். இல்லையெனில் சொல்லப்படாத இரண்டு என்னவாக இருக்கும் என்று சிந்திப்பதிலேயே பலருக்கு கவனம் இருக்கும். உதாரணமாக) மூன்று தீமைகள் இல்லாத நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார். அதில் ஒன்று இந்த கடன்… என்று பேசிவிட்டு போய் விட்டால், மீதி இரண்டு தீமைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். சிலருக்கு, அதை சொல்லாத உங்கள் மீது வெறுப்பு ஏற்படும். பயான் உங்களுக்கு அல்ல. கேட்கும் மக்களுக்கு என்பதை நினைவில் வையுங்கள். எனவே ஹதீஸை முழுமையாக சொல்லுங்கள். அதுவும் பயானை நீட்ட வேண்டுமெனில் மூன்றையும் விரிவாக சொல்லலாம். இல்லையெனில் சுருக்கமாக-வாவது மூன்றையும் சொல்லிவிடுங்கள். ஒற்றை வரியிலாவது மூன்றையும் சொல்லிவிடவேண்டும். (அந்த மூன்று தீமைகள் மோசடி, தற்பெருமை, கடன் – திர்மிதி 1497) v வழியுறுத்தும் போது கவனம் தேவை நாம் விரும்பும் கருத்தை வழியுறுத்தும் போது, அதை சற்று மிகைப்படுத்தி செல்லவேண்டியிருக்கும். அதற்கு எதிரான கருத்தை தாக்கி பேசவேண்டியிருக்கும். இது போன்ற நேரங்களில் மிகுந்த கவனம் தேவை. கட்டுப்பாடற்ற மிகைப்படுத்துதல்   பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். உதாரணமாக) தர்மம் செய்வதை வழியுறுத்தும் போது, தர்மம் செய்யாவிட்டால் தண்டனை கிடைக்கும் என்பதையும் வழியுறுத்தவேண்டியிருக்கும். கட்டுப்பாடு இல்லாமல், ”தர்மம் செய்யாவிட்டால், நிரந்தர நரகத்தில் தள்ளப்பட்டுவிடுவோம்” என்று பேசிவிடக்கூடாது. கவனத்தோடு பேசவும். நிரந்தர நரகத்திற்கு உரிய பாவமாக இது சொல்லப்படவில்லை. அதுபோல, ”வாலிபன் விபச்சாரம் செய்வதில் கூட நியாயம் இருக்குது. அல்லாஹ் விட்டுடுவான். முதியவர் விபச்சாரம் செய்வது தான் மோசமானது.. மறுமையில அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று ஒருவர் பேசுகிறார். முதியவர் விபச்சாரம் செய்வது அதிக குற்றத்திற்குறிய பாவம் தான். ஆனால் ”வாலிபர் செய்தால் அல்லாஹ் விட்டுவிடுவான்” என்று எந்த ஹதீஸில் உள்ளது? சட்டங்களை சரியாக விளங்கி நிதானமாக பேசுவது, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கும். பொதுவான ஒரு அறிவுரை என்னவென்றால், வாயில் வருதையெல்லாம் பேசிவிடாதீர்கள். சிந்தித்து பேசுங்கள். v வலுவற்ற ஆதாரங்களை அதிகப்படியாக கூட பயன்படுத்தாதீர்கள். ஒரு கருத்தை வழியுறுத்துகிறீர்கள் என்றால், அதற்குறிய சரியான காரணங்களை மட்டும் சொல்லி நிருவுங்கள். வலுவற்ற காரணங்களை, இதுவும் இருக்கட்டுமே என்று அதிகப்படியாக கூட பயன்படுத்தாதீர்கள். இதனால் ஏற்படும் மிகப்பெரும் விபரீதம் என்னவென்றால், நல்ல ஆதாரங்களை பொருட்படுத்தாமல், அந்த வலுவற்ற காரணத்திற்கு மட்டும் பதிலளித்து உங்கள் கருத்தை எளிதில் நிராகரித்து விடுவார்கள். Ì காரணமும், விளைவுளும் ஒன்றல்ல – ஒருவர் மேடையில் பேசுகிறார். ”ஓரே நேரத்தில் மூன்று தலாக்-களை சொல்லி, ஒரு நிமிடத்தில் விவாகரத்து செய்வதனால், இணைந்து வாழும் வாய்ப்பை பலர் இழந்துவிடுகின்றனர் இந்த காரணத்தினால் தான் முத்தலாக் கூடாது என்கிறோம்” என்று. இவர் பேசியது சரியா? அவர் சொன்னது முத்தலாக் சொல்வதனால் ஏற்படும் தீய விளைவுதானே தவிர, முத்தலாக் கூடாது என்பதற்கான ஆதாரம் அல்ல. ”நபியின் காலத்தில் முத்தலாக், ஒரு தலாக்காகவே கருதப்பட்டது” என்ற இப்னு அப்பாஸின் ஹதீஸ் தான் ஆதாரம். (முஸ்லிம் 3746). எனவே, சிந்திக்காமல், இது போன்று, தவறான வாதங்களை வைத்து, நிரூபிக்க முயன்றால், நம் வாதத்தை எளிதாக முறியடித்துவிடுவார்கள். எனவே, சரியான காரணத்தை வைத்து முதலில், நிரூபித்துவிட்டு, பிறகு, ”இதனால் ஏற்படும் பாதிப்புகள்” என்று சொல்லி, அந்த தீய விளைவுகளை தாராளமாக எடுத்துச்சொல்லுங்கள். Ì ஒருசில சட்டங்களுக்கு ஆதாரம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் நல்ல, தீய விளைவுகளும் முக்கியமானவை. விளக்கப்படவேண்டியவை. உதாரணமாக, புகை பிடிக்க மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதற்கு வைக்கப்படும் ஆதாரம், மக்களின் நினைவில் இருக்கிறதோ இல்லையோ,  புகை பிடிப்பதனால் ஏற்படும் தீயவிளைவுகள் கண்டிப்பாக நினைவில் இருக்கும். அந்த விளைவுக்கு பயந்தே அந்த தீமையை விடுபவர்களும் உண்டு. எனவே, எந்த சட்டத்தையும் முதலில் தகுந்த ஆதாரத்தைக்கொண்டு விளக்குங்கள். பிறகு அதன் நல்ல, தீய விளைவுகளை எடுத்துக்கூறுங்கள். இரண்டுமே அவசியமானவை தான். ஆனால் விளைவு ஒருபோதும் ஆதாரமாக காட்டப்படக்கூடாது. v இதுவெல்லாம் தப்பு. என்று ஒருவரியில் சாதிக்கப்பார்க்காதீர்கள். ஒருவர் பேசுகிறார். ”இன்னைக்கு பலரை பாக்குறோம் பாத்தியா ஓதுறாங்க. கத்தம் ஓதுறாங்க. இதுவெல்லாம் தப்பு. நாம ரஸுலுல்லாஹ் சொல்றத கேட்கணும்.” என்று. ”ரஸுலுல்லாஹ் சொல்றத கேட்கணும், அல்லாஹ்வை தான் வணங்கணும் என்பதெல்லாம் சரி. பாத்தியா ஓதுறாங்க இதுவெல்லாம் தப்பு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போனால், பாத்தியா சரி என்று நினைத்து காலகாலமாக செய்து வரும் ஒருவர், இதுவெல்லாம் தப்பு என்று சொல்லிவிட்டதால், விட்டுவிடுவாரா? தவறு என்றால் எதனால் தவறு? என்பதை தகுந்த ஆதாரத்தோடு விளக்குங்கள். ஒரே ஒரு ஹதீஸையாவது மேற்கோள்காட்டி ”இப்படி ஹதீஸ் இருந்தும், ஹதீஸுக்கு மாற்றமாக நடக்கிறார்கள்” என்றாவது சொல்லுங்கள். பீடிகைக்காகவும், கிண்டலுக்காவும் பத்து இருபது வரிகளை பயன்படுத்தும் சில பிரச்சாரகர்கள், ஆதாரங்களுக்காக ஒரிரு வரியைக்கூட பயன்படுத்துவதில்லை. சுன்னத் ஜமாத் ஆலிம்கள் நம்மை பற்றி சொல்லும் ஆதாரங்களற்ற அவதூறுகளைப் போல பேசக்கூடாது. ”நஜ்ஜாத் பயளுக. நபியை மதிக்கமாட்டேன்றானுங்க. தொப்பி போடாம ஷைத்தான் மாதிரி நிற்குறானுங்க” என்று ஒற்றைவரியில் திட்டிக்கொண்டு போவார்களே தவிர, ஆதாரத்தை சொல்லி அந்த அடிப்படையில் குற்றம் சாட்டமாட்டார்கள். எனவே அவர்களைப்போன்று, ஒற்றை வரியில் தவறு என்று சொல்லிவிட்டுப் போகாமல், எதனால் தவறு என்று விளக்கிச் சொல்லுங்கள். ஒற்றை வரியில் உங்கள் நிலைப்பாட்டைத் தான் சொல்ல முடியும். எதையும் சாதிக்கவும் முடியாது. மக்களை திருத்தவும் முடியாது. v தீர்வை சொல்லுங்கள். இறந்தவங்களுக்கு பாத்தியா கூடாது. கத்தம் கூடாது. இது கூடாது. அது கூடாது, என்று பட்டியல் போடும் பலர் எது கூடும். எதை செய்யவேண்டும் என்று விளக்குவது இல்லை. அல்லது ஒற்றை வரியில் மேம்போக்காக சொல்லிவிட்டு போய்விடுவார்கள். பாத்தியா ஓதக் கூடாது என்றால், வேறு என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதை ஹதீஸ் ஆதாரங்களோடு விளக்குங்கள். ”பலர் தொழுகிறார்கள். தொழுகையில் கவனமே இருப்பதில்லை.” என்று பேசிவிட்டு போவதைவிட, தொழுகையில் கவனமாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லிப்பாருங்கள். உங்கள் குற்றச்சாட்டு பயனுள்ளதாக இருக்கும். கோர்ட்டில், நீதிபதி வந்தாலும் எழுந்துநிற்கக்கூடாது. என்று சொல்லும் அதே நேரத்தில்,  இதை தவிர்ப்பதற்கு, முன்னதாகவே நின்றுகொண்டிருங்கள். என்று யோசனை சொல்லுங்கள். சட்டத்தை சொல்லும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதுபோல, அதை எப்படி செயல்படுத்தவேண்டும் என்பதை விளக்கவேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. மாநபியின் நடைமுறையை கவனியுங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அபூதரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக'' - முஸ்லிம் (5120).  அண்டைவீட்டாருக்கு உணவு தரவேண்டும் என்று ஒற்றை வரியில் நபி கூறிவிட்டுச் செல்லாமல், அதை செயல்படுத்துவதற்கு மிக எளிய, ஒரு வழியையும் காட்டித் தருகிறார்கள். எனவே தனியாக நேரத்தை ஒதுக்கி, வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை யோசித்து, அதை மக்களுக்கு சொல்லுங்கள். உதாரணமாக)

என்பது போன்ற தீர்வுகளை யோசித்து ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து மக்களுக்கு சொல்லுங்கள். உண்மையில் நல்ல பேச்சாளரிடமிருந்து வாழ்வில் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளுக்குரிய இஸ்லாமிய தீர்வு கிடைக்கிறது. Ì உளவியல் ஆலோசனைகள் : மனோதத்துவ மருத்துவர்களாக இருக்கும் இஸ்லாமிய பேச்சாளர்களின் உரைகளில் ஒரு ஈர்ப்பு இருப்பதற்கு காரணம், அவர்களின் உரைகளில் பல்வேறு உளவியல் ஆலோசனைகள் இருக்கும். அவர்களிடமிருந்தும், ”மனஅழுத்தத்திற்கு இஸ்லாம் தரும் தீர்வு” என்ற ரமளான் தொடர் உரையிலிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி உங்கள் உரைகளில் பயன்படுத்துங்கள். பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கும், நடுத்தர வயதுள்ளவர்களுக்கும், பெரியவர்களுக்கும் உங்கள் உரை பிடித்துப்போவது உறுதி. கவனம். இதுபோன்ற செய்திகளை பயன்படுத்துபவர்கள், தரமான பேச்சாளர் என்ற தகுதியையும் பெறுகின்றனர்.   v ஒவ்வொரு வரியையும் முடியுங்கள். தனது பேச்சுத் திறமையை காட்டுவதற்காக, சிலர் பேசும் போது வரியை முடிக்கமால் இழுத்துக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக) ”பொய் சொல்வதை மக்கள் வெறுக்கவேண்டியதன் அவசியத்தை உணராமல், இருந்த காரணத்தினால், தற்போது அதன் விளைவை கண்கூடாக பார்க்கும் ஒரு இக்கட்டான, துர்பாக்கியமான, துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் நமது கண்ணால் காணக்கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது…” என்பது போன்று, தேவையில்லாமல் இலக்கியத்திற்காக இழுத்து இழுத்து பேசுவார்கள். அரசியல்வாதிகளுக்கு, பட்டிமன்றத்தில் பேசுபவர்களுக்கு, இது தேவையான பேச்சு. இஸ்லாத்தை சொல்லி, புரியவைக்கவேண்டிய நமக்கு இது மாதிரியான பேச்சு எதற்கு? இதுபோல பேசினால், மிகப்பெரிய பேச்சாளர், மொழியை புரட்டி எடுக்கக்கூடியவர் என்று பெயர் கிடைக்கலாம். நம் கருத்தை தெளிவான முறையில் வெளிப்படுத்த இந்த ஜவ்வுப்பேச்சு பயன்படாது. இந்த நோய் உள்ளவர்கள், கண்டிப்பாக தங்களை திருத்திக் கொள்ளவேண்டும். அதுபோல சாமானிய மக்களுக்கு விளங்காத இலக்கிய வார்த்தைகளையும் குறைத்துக்கொள்ளவேண்டும். ”நபி(ஸல்) அவர்களின் பேச்சு, அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தெளிவான வார்த்தைகளாக இருந்தது” என்று அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்) தேவையில்லாமல் இழுப்பதையும், ஒரே பொருள் தரும் பலவார்த்தைகளை கொண்டு இழுப்பதையுமே தவறு என்கிறோம். இவ்வாறல்லாமல், சில நேரங்களில் சில பேச்சுக்கள், அவசியமான ஜந்தாறு வரிகளை கொண்டதாக இருக்கும். அதற்கு மேலும் கூட இருக்கலாம். உதாரணமாக, ”நம் உயிரிலும் மேலான தூதர், மதீனாவின் ஆட்சித்தலைவராக இருந்தபோதும், பலநாட்கள் உண்ண உணவில்லாமல், சலித்த கோதுமையை கண்ணில் கூட பார்க்காதவர்களாக, ஒரே ஒரு ஆடையை உடுத்தியவர்களாக, சொகுசான படுக்கை இல்லாமல், ஓலைப்பாயில் தூங்கியவர்களாக, இறுதிவரை வறுமையிலேயே வாழ்ந்து, தன்னுடைய தூதுப்பணியை செய்திருக்கிறார்கள்” என்பது போன்ற நீளமான பேச்சுக்களில், (ஒரேபோருள் தரும்) தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. இதுவெல்லாம் தவறாகாது. எனினும் முதியவர்கள் சபையாக இருந்தால், விரும்புகிறவர்கள் இதைக்கூட இரண்டாக பிரித்து பேசலாம். v அல்லாஹ்வை பற்றி, மேலும் நபிமார்கள், சஹாபிகளை பற்றி பேசும் போது வார்த்தை கவனம் தேவை. அல்லாஹ்வுக்கு தெரியாதா? அல்லாஹ் என்ன கிறுக்கனா? என்பது போன்றோ, நபிக்கு அறிவில்லையா? அவர் என்ன முட்டாளா? என்பது போன்றோ பேசி வாதத்தை எழுப்பாதீர்கள். உண்மையில் நீங்கள் அல்லாஹ்வையோ, நபியையோ தரக்குறைாக பேசவில்லை. ஆனாலும் பேச்சு ஒழுக்கமாக இல்லை. கேட்பவருக்கு நெருடலைத் தரும். சிந்தித்துப்பாருங்கள். கருணாநிதி மேடையில உட்கார்ந்திருக்கிறார். நம்மில் யாராவது கருணாநிதி என்ன கிறுக்கனா? அரசியல் தெரியாத மடையனா? என்று பேசுவோமா? கருணாநிதி கிறுக்கன் இல்லை என்பதே நமது கருத்தாக இருந்தாலும், பேச்சுமுறை சரியில்லை. வேண்டுமென்றே அவ்வாறு பேசுவதை வஞ்சகப்புகழ்ச்சி அணி என்று இலக்கணத்தில் அழைப்பார்கள். அரசர்களை நாசூக்காக திட்டுவதற்கு புலவர்கள் இவ்வாறு பயன்படுத்துவார்கள். நம்மவர்கள் ஒருபோதும் அப்படி பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தவும் மாட்டார்கள். இருந்தாலும்கூட கூடாது. நாம் அல்லாஹ்வை மதிப்புகுறைவாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு, நமது கொள்கைக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் நமது கருத்தை புறக்கணிப்பதற்கும் இது காரணமாக அமைந்துவிடும். எனவே இதுபோன்ற பயன்பாடுகள் ஒருபோதும் கூடாது. v புலவர்களின் செய்யுளை பயன்படுத்தாதீர்கள். பிறமத மேடைப்பேச்சாளர்கள் தங்களது உரைகளில் கண்டிப்பாக ஒரேஒரு திருக்குறளையாவது பயன்படுத்தவேண்டும். கம்பராமாயணத்திலிருந்து ஒரேஒரு வரியையாவது பயன்படுத்தவேண்டுமென்று விரும்புவார்கள். இது அவர்களின் நடைமுறை. நம்மவர்கள் சிலநேரம் திருக்குறளை பயன்படுத்துகின்றனர். இந்த கலாச்சாரம் தலையெடுப்பதை அனுமதிக்கக்கூடாது. நமது பயான்களில் ஒருபோதும் (பிறமத சாயம் கொண்ட) திருக்குறளையோ, வேறு செய்யுளையோ பயன்படுத்தாதீர்கள். எந்த கருத்தை வழியுறுத்துவதற்கும் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பயன்படுத்துங்கள். முஸ்லிமல்லாத சபையாக இருந்தால், ”திருக்குர்ஆனின் இந்த கருத்தைத்தான் பலர் சித்தர்களும் கொண்டிருந்தார்கள். திருவள்ளுவர் கூட இந்த கருத்தில் தான் இருந்தார். குர்ஆனின் இந்த கருத்துதான் அறிவுப்பூர்வமாகவும் சரியானது” என்று குர்ஆனை வழிகாட்டியாக அறிமுகப்படுத்தி, புலவர்களையும், சித்தர்களையும் பயனாளிகளாக அறிமுகம் செய்யுங்கள். அதாவது, இஸ்லாத்தின் கருத்தைத்தான் திருவள்ளுவரும் கொண்டிருந்தார் என்பதற்காக, திருக்குறளை பயன்படுத்தலாம். அல்லது அதிலுள்ள தவறை எடுத்துக்காட்டுவதற்காக பயன்படுத்தலாம். v தவறான கொள்கை உடையவர்களை உதாரணம் காட்டாதீர்கள். வெளிப்படையாக ஒருவர் ஷிர்க் வைக்கிறார், பித்அத் செய்கிறார் என்று தெரிகிறது. அவரிடத்தில் வேறு நல்ல குணங்கள் இருக்கிறது. அல்லது என்றால், அந்த வேறு நல்லகுணத்திற்காக, பயானில் இதுபோன்றவரை உதாரணம் காட்டுவதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நிர்பந்தம் ஏற்பட்டால் அவரை உதாரணம் காட்டிவிட்டு, இவர் தரீக்காவை சரிகாணக்கூடியவர், மத்ஹப்வாதி என்பதை தெளிவு படுத்திவிடுங்கள். அதுபோல பிறமத வேதங்களிலிருந்தும் எந்த விஷயத்தையும் ஆதாரங்களாக பயன்படுத்தாதீர்கள். வேதக்காரர்கள் தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம், (பொய் என) மறுக்கவும் வேண்டாம்” என்று கூறினார்கள். (புகாரி 4485). வேதம் இறக்கப்பட்டவர்களின் செய்திகளையே (கறைபட்ட காரணத்திற்காக) பயன்படுத்தக்கூடாது எனும் போது, இந்துக்களுடைய இதிகாசங்களையும், புராணங்களையும் சொல்லி, நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம், வியாசமுனிவரின் முன்னறிவிப்புகள் என்பது போன்ற செய்தியை ஏற்கமுடியுமா? பிரபலமான இந்து பன்டிட்களே சொல்லிவிட்டார்கள் என்று சொல்லும் மேதைகளுக்கு, நபிகள் நாயகமே தடுத்துவிட்டார்கள் என்பது தான் பதிலாக இருக்கமுடியும். அதிகபட்சமாக, உங்கள் நம்பிக்கைப்படி இது என்ன? என்று வேண்டுமானால் அந்த மதத்தினரிடம் கேட்கலாம், அவர்களது புத்தகத்திலிருந்து எதனையும் ஆதாரமாகவோ, ஏற்கத்தகுந்த செய்தியாகவோ எடுக்கக் கூடாது. அதை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவும் கூடாது. v பிற ஜமாத்களை பற்றி, குறைசொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நம் ஜமாத்தின் நற்பணிகளை மக்களுக்கு எடுத்துச்சொல்வதும், பிறஜமாத்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் பிரச்சாரத்தின் ஒருபகுதிதான். அதே சமயம், பிற ஜமாத்கள் பற்றி, எதற்கெடுத்தாலும் குறைசொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. எத்தனையோ ஜமாஅத்கள் எவ்வளவோ நலப்பணிகளை செய்கின்றன. அதை விமர்சிக்கவேண்டிய அவசியம் இல்லை. மறுமையில் அவதூறு வழக்கில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எனவே நடுநிலையோடு பேசுங்கள். ஆனால், கொள்கை ரீதியாக அவர்கள் செய்யும், தவறுகளை கண்டிப்பாக, தேவையான இடத்தில் சுட்டிக்காட்டுங்கள். யாரையாவது பற்றி சர்ச்சைக்குறிய வகையில் பேசினால் பெரிய ஆளாகிவிடலாம். என்ற எண்ணத்தில் பேசுவது, மிகப்பெரிய வழிகேடு. பிற ஜமாத்களை திட்டுவதால், உங்களுக்கு யாரும் எந்த பதவியையும் தரப்போவதில்லை. மாறாக, குறைசொல்லி புறம்பேசித்திரிந்த தீமைதான் கிடைக்கும். அந்த ஜமாஅத்தை சேர்ந்த மக்கள் உங்கள் பேச்சையும், உங்களையும் வெறுப்பார்கள். திருந்த நினைக்கும் மக்களையும், திருந்த விடாமல் செய்துவிடும். அல்லாஹ் கூறுகிறான். ”நம்பிக்கை கொண்டோரே!  நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்! ஒரு கூட்டத்தினர் மீது நீங்கள் கொண்டுள்ள பகை, நீதியாக நடக்காமலிருக்க, உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்” (அல்குர்ஆன் 5:8) எனவே குறையை அவசியமானால் மட்டும் சொல்லுங்கள். பரபரப்பிற்காக சொல்லாதீர்கள். உணர்வுபூர்வமான சமுதாய செய்திகள், இஸ்லாமிய விரோதிகளின் சதித்திட்டங்கள் என மற்ற எதைவேண்டுமானாலும் தேவைப்பட்டால், பரபரப்பிற்காக சொல்லிக்கொள்ளுங்கள், தவறில்லை. பிற ஜமாத்களை பற்றி விளம்பரத்திற்காகவோ, உங்களை ஜமாத்தின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொள்வதற்காகவோ சொல்லாதீர்கள். v சினிமா காமெடிகளை பயன்படுத்தாதீர்கள். நகைச்சவைகள் ஏராளமானவை இருக்கிறது. சினிமாவில் வரும் நகைச்சுவையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. எனவே முடிந்தஅளவு அவற்றை தவிர்த்துவிடுங்கள். அவற்றை பயன்படுத்தினால், (இன்றைய கேடுகெட்ட) சினிமாவை நாம் அங்கீகரிப்பது போல் ஆகிவிடும். போதனை செய்யும் இவரே அதை பார்க்கிறார். நாம் பார்த்தால் என்ன தவறு? என்று மக்கள் வழிகெடவும் வாய்ப்பு உள்ளது. சினிமா காமெடிகள் வேண்டாம் என்பதற்குறிய முதன்மை காரணம் இதுவே. எனவே, நகைச்சுவை வேண்டுமெனில், நகைச்சுவை புத்தகங்களிலும், இணையதளத்திலும், பட்டிமன்றங்களிலும் நிறைய உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள். v நாகரீகமான நகைச்சுவை. நகைச்சுவையை பயன்படுத்தும் போது, கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், நகைச்சுவை நாகரீகமானதாக இருக்கவேண்டும். முகம் சுளிக்கும் வகையில் பேசிவிடாதீா்கள்.  முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் உங்களது பேச்சை கவனிக்கிறார்கள். அநாகரீகமாக பேசிவிடாதீர்கள். மற்ற நேரங்களை விட, நகைச்சுவையில் நம்மையும் அறியாமல் இது வந்து விடும். கவனம் தேவை. அதுபோல, இரட்டை பொருள் தரும் நகைச்சுவைகளையும் பயன்படுத்தாதீர்கள். இளைஞர்கள் சிரிக்கலாம். மற்றவர்கள், உங்களை கேவலமாக எடைபோடுவார்கள். உங்கள் பேச்சு தான் உங்களுக்கு கண்ணியத்தை பெற்றுத்தரும். எனவே சிந்திக்காமல் செயல்படாதீர்கள். v முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். சாதாரணமாக ஒருவருக்கொருவர் தனியாக பேசிக்கொள்ளும் போது, பயன்படுத்தும் வார்த்தைகளை விட, அதிக கண்ணியமான வார்த்தைகளைத் தான், பொதுமக்கள் முன்னிலையில் பயன்படுத்தவேண்டும். இதற்கு சபை நாகரீகம் என்று பெயர். சபை நாகரீகத்தை தாண்டிய பேச்சை, ஒருபோதும் பழக்கப்படுத்திக்கொள்ளாதீர்கள். அதுபோல, நடிகைகளின் பெயர்களை, கேணப்பயலே, நாயே போன்ற தரம்குறைந்த வார்த்தைகளை பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக, ஜும்மா மேடையில் இதுபோன்ற வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள். அதுபோல. பெண்கள் பயானில், பேசும் போது, அவர்கள் முகம் சுளிக்காத வகையில் பேசுவது அவசியம், உதாரணமாக,  ”டூ பீஸ் போட்டு ஆடுவாங்க… … சேலை விலகும். இடுப்பு தெரியும், ஜிங்குஜிங்குனு ஆடுவாங்க” என்பது போன்ற பேச்சுக்கள், நெருடலை ஏற்படுத்தும். இது போன்ற பேச்சுக்களை, குறிப்பாக பெண்கள் பயானில் பேசிவிடாதீர்கள். Ì விதிவிலக்குகள் - சில அனுபவ பேச்சாளர்கள், ஒருசில கேள்விபதில் நிகழ்ச்சிகளில் இதுபோன்று பேசுவது, விபச்சாரம், சினிமா போன்வற்றின் விபரீதத்தை புரிய வைப்பதற்கும், பர்தாவின் முக்கியத்துவத்தை விளக்கவதற்கும் தான். மிகவும் அரிதாக பயன்படுத்தவேண்டிய இதுபோன்ற பேச்சுக்களை தேவையில்லாமல் வழமையான பேச்சாக பழக்கப்படுத்திக் கொள்ளாதீர்கள். ”தன் வாந்தியை தானே தின்னும் நாய்” என்பது போன்ற பேச்சுக்களை நபிகள் நாயகம் ஒருபோதும் பேசியதில்லை. எனினும் அன்பளிப்பை திரும்பப் பெறுவதன் கடுமையை உணர்த்தும் போது மட்டும், இப்படி கூறியிருக்கிறார்கள். (புகாரி 2622) இது ஒரு விதிவிலக்கு. எனவே, டூபீஸ், ஜட்டி போன்ற வார்த்தைகளை அரிதிலும் அரிதாக ஆக்கிக் கொள்ளுங்கள். விதிவிலக்குகள் விதியாகாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள். v நீ, போ, வா என்று எப்போது பேசலாம்?? சிலருக்கு மேடையும், மைக்கும் கிடைத்துவிட்டால் போதும். போடி.. வாடி.. அவளே.. இவளே… என்று நாறடித்துவிடுவார்கள். யோசித்துப்பாருங்கள். நீங்கள் பேசுவது, பிறரை திட்டி, உங்களது கோபத்தை தணித்துகொள்வதற்காகவா? அல்லது அறிவுரைகளை சொல்லி மக்களை திருத்துவதற்காகவா? சிந்தித்து பாரடா நாயே! என்றால் சிந்தித்துப் பார்ப்பாரா? கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு, திருந்து என்று சொன்னால் எவரும் திருந்தமாட்டார். கனிவான வார்த்தைகளும். சிந்திக்கத்தூண்டும் வாதங்களும் தான் ஒருவரை திருத்தும். மாநபியின் குணத்தை பற்றி, நபியோடு பத்தாண்டு காலம் இருந்தவர் சொல்வதை பாருங்கள். அல்லாஹ்வின் தூதர், கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, திட்டுபவராகவோ இருக்கவில்லை. (ஒருவரை அதிகபட்சமாக) கண்டிக்கும் போது கூட, ”அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரி (6046) எனவே அறியாமையில் கிடக்கும் ஜமாத்தார்களை சாடும் போது, வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள். வாதங்களால், சாடப்படவேண்டிய ஜமாத்தார்களை ஒருபோதும், போடா, போடி என்று வார்த்தைகளால் சாடிவிடாதீர்கள். ”போடா” என்று சொல்லும்போது, நம் ஆதரவாளர்கள் சந்தோஷப்பட்டு கைதட்டலாம். ஆனால், யார் திருந்தவேண்டும் என்பதற்காக பேசினீர்களோ, அவர்கள் நீங்கள் சொன்ன கருத்தை சிந்திப்பதற்கு பதிலாக, ”சின்னப் பையன் நம்மலயெல்லாம் போடான்னு சொல்லிட்டான்” என்று ஆதங்கப்படுவார்கள். இது அவர்களை திருந்த விடாமல் தடுக்கும். மக்களை விரட்டியடிப்பது நம் நோக்கமல்ல. திருந்தவைத்து அரவணைப்பதே நம் நோக்கம். Ì அதே சமயம், சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தவர்களை, நமது மார்க்கத்தை வேண்டுமென்றே கேவலப்படுத்தியவர்களை சாடும் போது அதுபோன்று பேசிக்கொள்ளுங்கள். அநீதம் இழைக்கப்பட்டவரைத்தவிர (வெறெவரும்) தீய சொல்லை பகிரங்கமாகப் பேசுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (குர்ஆன் 4-148) F எனவே, நரந்திரமோடி, அத்வானி, ஜார்ஜ்புஷ், போன்ற ஷைத்தான்களை சாடும்போது, விரும்பிய படி பேசிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் பேசுவதை அவர்கள் கேட்பதில்லை. மக்களுக்காக பேசுகிறீர்கள். F அதுபோல முகம் இல்லாத, கருத்து எதிரியை சாடும் போதும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். உதாரணமாக, பேய் இருக்கிறது என்று சொல்லும் மடையர்களை பார்த்து கேட்கிறேன்…. ஏன்டா உனக்கு அறிவிருக்கா? என்பது போன்ற பேச்சுக்கள், எந்த ஜமாஅத்தையோ, முன்னால் உள்ள மக்களையோ பார்த்து பேசுவது அல்ல. இதை தவறென்று சொல்லமுடியாது. v சட்டப்பிரச்சனைகளை உருவாக்கிவிடாதீர்கள். பொதுமேடையில், தெருமுனை பிரச்சாரங்களில், எந்த கருத்தை சொல்வதாக இருந்தாலும், நாம் வாழும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு பேசுங்கள். தற்கால முதல்வரையோ, பிரதமரையோ, நீதிபதிகளையோ தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டு வரம்புமீறி பேசிவிடாதீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்சனை, ஜமாத்திற்கும் பிரச்சனை. வருங்காலங்களில், அனுமதி மறுக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். எனவே சட்டரீதியாக கவனமாக பேசுங்கள். கட்டுப்பாட்டை மீறி வார்த்தைகள் தவறாக வந்துவிட்டால், வேறு வார்த்தைகளை கொண்டு சமாளித்துவிடுங்கள். உதாரணமாக) போலீஸார் எங்களை அடக்குமுறை செய்தால், மதக்கலவரங்கள் தான் ஏற்படும். என்று ஆவேசத்தில், பேசிவிடுகிறீர்கள், என்றால், உடனே சுதாரித்துக்கொண்டு, ”கலவரங்கள் நல்லதா? சட்டத்திற்கு உட்பட்டதா? அமைதிக்கு உகந்ததா? இதனால் தான் நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகிறோம். அதை மட்டுமே ஆதரிக்கிறோம்” என்று உல்டா செய்துவிடுங்கள். Ì கவனம் - ஜந்துநிமிட ஆவேசப்பேச்சுக்காக, ஆறுமாதம் உள்ளே இருக்கமுடியாது. அதனால் நம் தாஃவா பணிகள் பாதிக்கப்படும். கவனமாக இருங்கள். மேலும், வாடகைக்கு வாங்கிய மைக்கையும், ஸ்பீக்கரையும் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற அச்சத்தில் நிர்வாகிகள் இருப்பார்கள். அவர்களது நிலையையும் கருத்தில் கொண்டு பேசுங்கள். v மென்மையாக அல்லது ஆக்ரோஷமாக பேசவேண்டிய இடங்கள். அமைதியாக பேசுவது ஒரு அழகான பயான் முறை. ஆனால் தேவைப்படும் இடத்தில் ஆக்ரோஷமாக பேசியாகவேண்டும். கடுமையான குர்ஆன் வசனங்களை பயன்படுத்தும் போது, அதன் வீரியத்தோடு சொல்லவேண்டும். ”அவனை பிடியுங்கள். எழுபது முழ சங்கிலியால் கட்டுங்கள்” என்ற வசனத்தை சொல்லும் போது, கடுமையான உச்சரிப்போடு சொல்லவேண்டும். இதன் முக்கியத்துவத்தை விளங்க, மேற்கண்ட வரியை மென்மையாக சொல்லிப்பாருங்கள். பொருத்தமில்லாமல் இருக்கும். எனவே, தேவையான வரிகளை கடுமைாக பேசுங்கள். மேடைப்பேச்சாக இருந்தால், இரு பேச்சாளர்கள் இருந்தால் முதலில் பேசுபவர் அமைதியான மென்மையான பேச்சை தந்துவிட்டு, இரண்டாமவர் ஆக்ரோஷமான பேச்சை வெளிப்படுத்தலாம். Ì வெட்ககுணத்தை வழியுறுத்தும் பயானுக்கு ஆக்ரோஷம் தேவையில்லை. நபியை இழிவுபடுத்திய செயலை கண்டிக்கும் கண்டனப் பேச்சிற்கு மென்மை தேவையில்லை. ஆனால் இன்று பிரச்சாரகர் எப்படி பெயர் வாங்கியிருக்கிறாரோ, தொடர்ச்சியாக அப்படியே அனைத்து உரைகளையும் செய்வதை பார்க்கிறோம். இது தவறு. நபியின் நற்குணம் என்ற தலைப்பில் பேசும் போது கூட வெறிப்பிடித்தது போல கத்துகிறார். இது அவரது அபிமானிகளுக்கு உற்சாகமாக இருக்கலாம். அனைத்து தரப்பு மக்களையும் கவராது. ஒரு நகைச்சுவை நினைவிற்கு வருகிறது. ஒரு ஆசிரியர், மாணவனை அடிஅடி என்று அடித்து நய்யப்புடைத்து விட்டு, அந்த மாணவனை பார்த்து ”இனி மேல் எல்லார்டையும் அன்பா பழகனும்!” என்று சொன்னாராம். அதுபோல, காட்டுகத்து கத்தி மென்மையை பற்றி உரை நிகழ்த்தக்கூடாது. v பொருத்தமில்லாத ஹதீஸை பயன்படுத்தாதீர்கள் ஒரு அறிவுரையை சொல்லிவிட்டு, அதை விளக்கப் பயன்படுத்தப்படும் ஹதீஸ்கள் கண்டிப்பாக அந்த அறிவுரைவுக்கு பொருந்தமானதாக இருக்கவேண்டும். சம்பந்தம் இல்லாத ஹதீஸாக இருக்கக்கூடாது. உதாரணமாக) பலநூறு மக்கள் அமர்ந்திருக்கும் சபையில் ஒருவர் பேசுகிறார்: ”சைத்தான் நம்மை பொய் பேசவைத்து அதன் மூலம் சந்தோஷப்படுகிறான்” என்று பேசிவிட்டு அதற்கு உதாரணம் சொல்லும் போது, ”நபிகள் நாயகம் சொன்னார்கள். ஷைத்தான் ஒவ்வொன்றாக வந்து தான் செய்த தீயசெயலை பற்றி சொல்லும். அப்போதெல்லாம் மகிழ்சியடையாத ஷைத்தான், கணவன்-மனைவியை பிரித்தேன் என்று சொல்லும் போது, மகிழ்சியடைகிறான். பார்த்தீர்களா?” என்று ஒருவர் பேசுகிறார். மேற்காணும் பேச்சில், அவர் மேற்கோள் காட்டிய ஹதீஸ், அவர் சொல்லும் அறிவுரையை போதிக்கும் ஹதீஸ் அல்ல. இதுபோன்று சொல்லும் அறிவுரைக்கு பொருத்தமில்லாத ஹதீஸை பயன்படுத்தப் பார்க்காதீர்கள். கவனமாக கேட்பவர்களுக்கு நீங்கள் பேசுவது உளரலாகத் தெரியும். பலஆயிரங்கள் செலவு செய்து ஏற்பாடு செய்யப்படும் பயானில், இது போன்று பேசினால், உங்கள் பேச்சு உள்ளத்தில் ஒட்டாது. நீங்கள் தான் இதற்கு பொறுப்பாளி. எனவே நிதானமாக பொருத்தமான ஹதீஸை தேடிஎடுத்து தயாராகி பேசுங்கள். Ì சிலநேரம் அறிவுரைக்கு தொடர்புடைய ஹதீஸைத்தான் சொல்லியிருப்பார். ஆனால் அந்த ஹதீஸிலிருந்து அந்த அறிவுரை எப்படி பெறப்படுகிறது என்று மக்களுக்கு சரியாக விளங்காது அல்லது பேச்சாளர் சரியாக விளக்கியிருக்க மாட்டார். இதுவும் தவறு. சொல்லும் அறிவுரைக்கும், பயன்படுத்திய ஹதீஸிற்கும் உள்ள தொடர்பு எளிதாக புரியாவிட்டால், அதை விளக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. v மட்டுப்படுத்தாதீர்கள். உற்சாகப்படுத்துங்கள். மக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசவேண்டியது ஒரு பேச்சாளரின் கடமை. எனவே, ”அநியாயக்காரர்கள் வாழும் நாட்டில், நாம என்ன பண்ணமுடியும். அடிச்சா வாங்கிக்கொள்ளவேண்டியது தான், பிறமத மக்கள் பெரும்பான்மையாக வாழும் போது சகிச்சிட்டுதான் போகனும்” என்பது போன்ற அவநம்பிக்கையான பேச்சுக்களை ஒருபோதும் பேசாதீர்கள். பத்து பேர் மட்டுமே இருந்து ரோட்ல ஒரு போராட்டம் நடத்தும் போது கூட, அரசாங்கத்தைப் பார்த்து ”எங்கள யாருனு நெனச்ச. நாங்க நினைச்சா இந்தியாவோட தலையெழுத்தையே மாற்றிக்காட்டுவோம்” என்று வீரமாக பேசுவார்கள். அப்படி பேசினால் தான் இருக்கும் பத்துபேருக்கு உற்சாகமாக இருக்கும். எனவே போராட்டக்களமாக இருந்தாலும் சரி, அரங்கமாக இருந்தாலும் சரி ஒருபோதும் மட்டுப்படுத்தி பேசாதீர்கள். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று பேசுங்கள். உதாரணமாக) ”மத்ஹப் பள்ளிகள் எல்லாம் மிகவிரைவில் தவ்ஹீத் பள்ளிகளாக மாறும். பாபர் பள்ளியை இடித்த இந்துதுவா சக்திகளை அல்லாஹ் அழிப்பான். அமெரிக்காவை ஒரு ஏகத்துவவாதி ஆளும் நாள் மிகவிரைவில் வரும்” என்பது போன்ற நம்பிக்கையூட்டும் பேச்சுக்களை பேசுங்கள். சகுனம் பார்ப்பதை தடைசெய்த இஸ்லாம், நல்லவார்த்தைகள் கேட்பதை, நற்குறி என்று பெயரிட்டு அதனை மட்டும் அனுமதிக்கிறது. ''பறவை சகுனம் என்பது கிடையாது. (எனினும்) சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''நற்குறி என்பதென்ன?'' என்று மக்கள் கேட்டதும், ''(நற்குறி என்பது) நீங்கள் செவியுறும் நல்ல சொற்கள் தான்” என்று பதிலளித்தார்கள். (புகாரி 754). நல்ல நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மனிதனை உற்சாகப்படுத்தும் என்ற காரணத்தினாலேயே இஸ்லாம் இதனை அனுமதிக்கிறது. Ì நபி(ஸல்) அவர்கள் நோயாளியை சந்திக்கப்போனால், அவர் எந்த நிலையில் இருந்தாலும், அல்லாஹ் குணம் அளிப்பான் என்று உற்சாகப்படுத்தினார்களே தவிர, ”நீ பிழைக்கிறது டவுட் தான்!” என்று சொல்லவில்லை. எனவே, மக்களை உற்சாகப்படுத்தி பேசுவது, பேச்சாளர் கவனிக்கவேண்டிய மிகமுக்கியமான விஷயம். v ஆடியன்ஸாக இருந்து சரிபாருங்கள். எந்த செய்தியையும், உங்கள் நிலையிலிருந்து பேசாதீர்கள். கேட்கும் மக்களுக்கு புரியவேண்டும் என்ற கோணத்தில் அதாவது மக்களின் மொழியின் பேசுங்கள். உதாரணமாக) ¢ மாற்றுமத மக்கள் இருக்கும் ஒரு சபையில், ”நாம் ஈமானோடு மவுத்தாவதற்கு முஸ்தீப் எடுக்கவேண்டும்” என்று பேசினால் அவர்களுக்கு ஒரு வார்த்தை கூட புரியாது. புரியவில்லை என்று சொல்ல வெட்கப்பட்டு தலையை ஆட்டிவிட்டு போய்விடுவார்கள். ¢ அதுபோல பாமர மக்கள், பெண்கள் இருக்கும் சபைகளில், அவர்கள் நிலைக்கு இறங்கி, எளிமையாக பேசுங்கள்.  பலவருட தவ்ஹீத்வாதிகளிடத்தில் பேசுவது போன்று பேசாதீர்கள். ”அல்பானியின் ஆய்வுக்கு மாற்றமாக இருந்தாலும், இந்த ஹதீஸ் ளயீஃபானது. நபியின் ஹஜ்ஜத்துல் விதா ஹதீஸ்படி ஹக்குகளை பேணி இக்லாஸோடு நடக்கவேண்டும்” என்று ஹதீஸ்கலை அறிஞர் ரேன்ஜுக்கு பேசாதீர்கள். ¢ வயதான பெண்கள் இருக்கும் சபையில் ஒருவர் பேசுகிறார். ”ஏ என்ற மனிதனிடமிருந்து பி என்ற மனிதன் கடன் வாங்கினால், அதை சி அடைக்கலாம். சி என்பவர், பி-யின் மகனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று பேசுகிறார். மூளை குழம்பி விடுவார்கள். யாரிடத்தில் பேசுகிறோம், அவர்களுக்கு எந்த அளவுக்கு புரியும் திறன் இருக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. அப்துல்லாஹ்விடம் பாத்திமா கடன் வாங்கினால், அந்த கடனை பாத்திமாவின் மகன் அடைக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் அடைக்கலாம். என்று சொல்லுங்களேன். மக்களுக்கு புரிவதும், அவர்கள் அதை எடுத்து நடப்பதும் தான் நம் லட்சியமே தவிர, நம்முடைய அறிவை வெளிப்படுத்துவது நம் இலட்சியம் இல்லையே. ¢ சுவர்க்கத்தில் தேன் ஆறு ஓடும். பால்ஆறு ஓடும். எவ்வளவு வேன்டுமானலும் பால் அருந்தலாம். என்று பேசும்போது, பாலை கண்டாலே ஓடுறவனும் இருப்பான் என்பதை மனதில் வைத்து, பேசுங்கள். சுவனத்து பால் என்பது இங்கு உள்ளது போன்றதல்ல. என்பதையும் சேர்த்து விளக்குங்கள். இந்த உதாரணம் இதற்கு மட்டுமல்ல. எதைப்பேசினாலும் அதை ஆடியன்ஸ் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்து செயல்படுங்கள். Ì ஒரு வரி போதும் – முன்பு ஒருமுறை, ”குர்ஆனை மெய்ப்பிக்கும் ஒரு செய்தி, ஆஸ்திரேலியாவின் ABC என்ற கிருஸ்தவ தொலைகாட்சியில் ஒளிபரப்பானது” என்று சொல்லிவிட்டு, ஜும்மா மேடையிலிருந்து இறங்கும் போது, ஒரு சகோதரர் கேட்கிறார், ”நீங்க, BBC என்பதை தானே தவறுதலாக ABC என்று சொன்னீங்க” என்று. எனவே பேசும்போது, ”(அனைவருக்கும் தெரிந்த) BBC இல்ல. ABC” என்று ஒரு வரியை அதிகப் படுத்தியிருந்தால், மக்கள் தவறாக புரிந்திருக்கமாட்டார்கள். இது போன்றதையும் நினைவில் வைய்யுங்கள். v சரியான செய்தியை தவறாக புரிந்துகொள்ளாத வகையில் பேசுங்கள். ”மறுமையை நினைவுபடுத்த, கப்ருஸ்தானுக்கு போங்க. உங்க குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு போங்க”. என்று பேசும் போது தர்காவுக்கு போகலாம் என்று விளங்கும் மனிதனும் இருப்பான். எனவே எதைப்பேசினாலும் அதை ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று யோசித்து பேசுங்கள். குறிப்பாக, சட்டங்களை, இஸ்லாமிய கொள்கைகளை, தவறாக புரிந்து கொள்ளாத வகையில் பேசுங்கள். உதாரணமாக) வரதட்சனை என்ற தலைப்பில் ஒருவர் பேசுகிறார். ”வரதட்சனை கொடுமையின் காரணமாக இன்றைக்கு பலர் வெட்கத்தை விட்டு, பள்ளிவாசலில் பிச்சை எடுக்கின்றனர். மான ரோஷம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே வரதட்சனை வாங்காதீர்கள்….” இந்த உரையை கேட்கும் ஒருவர், பிச்சை எடுப்பதைவிட, தற்கொலை செய்துகொள்வது தான் மானம் உள்ளவர்களின் சரியான செயல். என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. Ì கவனம் தேவை – இஸ்லாத்தில், தவறுதலாக, கவனமின்றி ஒருவரை கொலை செய்தால், நம் மீது கொலைக்குற்றம் ஏற்படாது. எனினும் அதற்காக நஷ்டஈடு தரவேண்டும். அதுபோல, வேண்டுமென்றே நாம் அவ்வாறு பேசாதவரை இறைவனிடத்தில் குற்றவாளி ஆகமாட்டோம். எனினும், கவனமில்லாமல் பேசிய குற்றத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. v உங்கள் குறைகளை நீங்களே பகிரங்கப் படுத்தாதீர்கள். ரொம்ப சரியா பேசுறோம்-னு நெனச்சுட்டு சிலபேர், ”நானே பலநேரம் தூங்கிடுறேன். பஜ்ர் தொழுகிறதில்லை... என்ன பன்றது?” என்பது போன்று பேசிவிடுவதுண்டு. இது போன்ற பேச்சை ஒருபோதும் பேசாதீர்கள். பிறருக்கு உபதேசம் செய்யும் இவரே தொழுகையை விடுகிறாரா! அப்ப எல்லாருமே இப்படித்தான். என்று நினைத்து, மக்கள் தொழுகையை விடுவதற்கு, பலதீமைகள் செய்வதற்கு வாய்ப்புள்ளது. உங்களுக்கும் மதிப்பிருக்காது, உங்களின் பேச்சுக்கும் மதிப்பிருக்காது. எனவே, F அந்த சினிமா காமெடி-ல பார்த்தேன். F கோபம் இயல்பு தான். நானே, என் மனைவியை கண்டமாதிரி திட்டிடேன். F ஆபாசமான உடையை பார்த்தா, எனக்கே ஒருமாதிரி தான் இருக்குது. F நானே சில நேரம் பொய் பேசிடுறேன். புறம் பேசிடுறேன்.… என்பது போன்று பேசிவிடாதீர்கள். தவறுகள் இல்லாத மனிதன் யாருமில்லை. பிரச்சாரகரும் கூட ஒருசில நேரம் ஏதாவது தவறு செய்யலாம். அதை அல்லாஹ்விடத்தில் பகிரங்கப்படுத்துங்கள். மன்னிப்புதேடுங்கள். மக்களிடத்தில் நீங்களாகவே வெளிப்படுத்தாதீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, ”இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்'' என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான். புகாரி (6069) அதுபோல, உங்களை நீங்களே மட்டம் தட்டும் பேச்சையும் பேசாதீர்கள். F மற்றமற்ற ஆலிம்களுக்கு முன்னால் நான் ரொம்ப சின்ன ஆள். F எனக்கு அரபி தெரியாது, முழுக்குர்ஆனையும் நான் படிச்சதில்லை. F நான் ரொம்ப கடகடனு பேசுறேன்னு நினைக்கிறேன். F எனக்கு தெரிஞ்சது இந்த இரண்டு வசனம் தான்… என்பது போன்று உங்களை நீங்களே மட்டம் தட்டாதீர்கள். உங்களுக்கு நீங்களே மதிப்பு தராவிட்டால் மற்றவர்கள் எப்படி தருவார்கள்? Ì அதேநேரம், ”அறியாத காலத்தில், பாத்தியா ஓதுனோம், வரதட்சனை வாங்குனோம். இப்ப திருந்திவிட்டோம்” என்று மார்க்க ரீதியான சட்டபுரிதலில் ஏற்பட்ட தவறுகளை சொல்வது இதில் அடங்காது. ஆனால், ”முன்னாடியெல்லாம் திருடுவோம், கலர் பார்ப்போம், தண்ணி அடிப்போம்” என்று தனிமனித தவறுகளை, அறியாத காலத்தில் செய்திருந்தாலும் விதிவிலக்காகவே தவிர சொல்லக்கூடாது.  ரிஷி மூலம் பார்க்கத்தேவையில்லை. v சுயவிளம்பரம், தம்பட்டம், புலம்புதல் கூடவே கூடாது. பேச்சில் உங்களை பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்யாதீர்கள். அதில் உண்மையே இருந்தாலும் இதை யாரும் விரும்புவதில்லை. ஒருவர் பேசுகிறார்.

என்றெல்லாம் பேசக்கூடாது. இது போன்ற பேச்சுக்கள் மக்களால் விரும்பப் படுவதில்லை. உங்களை பற்றி கேட்பதற்கு யாரும் வரவில்லை. நீங்கள் வேண்டுமென்று அப்படி பேசாவிட்டாலும் இது போன்ற தம்பட்டம் பலருக்கு வெறுப்பைத் தரும். அதுபோல மேடையில் நின்றுகொண்டு புலம்பாதீர்கள். ”மக்கள் நம்மையெல்லாம் எங்க மதிக்கிறாங்க. அவர் வந்தால், இவர் வந்தால், எல்லாரும் வருவாங்க. பயானை கேட்பாங்க. நாம சொன்னால் கேட்க ஆளில்லை. பயானுக்கு மார்க் போடுறாங்கப்பா. இதெல்லாம் சரியா?” என்பது போன்ற புலம்பல் பேச்சுக்களை முற்றிலும் தவிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் பேசும் போது மட்டும், மக்கள் கவனிக்காமல் இருந்தால் அது உங்களுடைய தவறு. மக்களின் தவறல்ல. Ì உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லலாம். பயானில் உங்களை பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்றால், உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் சொல்லக்கூடாது என்று அர்த்தம் இல்லை. அதை சொல்லலாம். உலகலாவிய பேச்சாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த இதுபோன்ற சம்பவங்களை சொல்வதை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளார்கள். அஹமது தீதாத் ஆக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும், ”நான் இஸ்ரேல் மியூசியத்தின் தலைவரை சந்தித்தேன். என்னோடு இப்படி இப்படி உரையாடினார். நான் இப்படி எதிர்கேள்வி கேட்டேன். பதிலளிக்கவில்லை” என்பது போன்ற உரையாடல்களை தங்கள் பயானில் பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தக்க வகையில் உள்ளது. எனவே உங்களை பற்றி விளம்பரம் செய்யும் வகையில் இல்லாமல் நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லலாம். சொல்லவேண்டும். உதாரணமாக, ”நமது ஜமாத் அலுவலகத்திற்கு ஒரு சகோதரர் வந்தார். அநாதை இல்லத்திற்கு இடம் தேவை என்று எங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தோம். அதை அவர் காதில் வாங்கிக்கொண்டு ஜமாஅத்திற்கு அந்த இடத்திலேயே 20 லட்சம் செக் கொடுத்துவிட்டு, நம்மிடமிருந்து நன்றி என்ற வார்த்தையைக் கூட எதிர்பார்க்காமல் போனார்...” என்பது போன்ற நாம் சந்தித்த சம்பவங்கள் மக்களை நன்றாக ஈர்க்கும். இதையெல்லாம் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். v விதிவிலக்குகளை அவசியமான நேரத்தில் தெளிவுபடுத்திவிடுங்கள். எந்த சட்டத்தை சொன்னாலும் அதை முழுமையாக விளக்கிய பின்பு, அதில் ஏதேனும் விதிவிலக்குகள் இருந்தால், அதையும் தெளிவுபடுத்துங்கள். விதிவிலக்குகள் சரியாக தெளிவாக்கப்படாத காரணத்தினால் தான், பலநேரங்களில் சட்டங்களை மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக)

Ì இரண்டாக பிரிக்கலாமே –  ஜும்மா பயானாக இருந்தால், சில அறிஞர்கள் விதியை முதல் உரையிலும், விதிவிலக்குகளை இரண்டாம் உரையிலும் பிரித்து பேசுகின்றனர். இது பின்பற்றத்தக்க நடைமுறையாக உள்ளது. உதாரணமாக, பெற்றோருக்கு கட்டுப்படுவதன் அவசியத்தை முதல் உரையிலும், கட்டுப்படக்கூடாத விஷயங்களை இரண்டாம் உரையிலும் சொல்லுங்கள். பயான் குழப்பமின்றி, தெளிவான முறையில் அமையும். v அதை பின்னால் சொல்லுகிறேன், என்று எஸ்கேப் ஆகாதீர்கள். சிலர், ஒரு ஹதீஸை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருவார்கள். இடையில் வேறு விஷயத்தை பற்றி கூறவேண்டியதிருக்கும். அதை பிறகு சொல்றேன். என்று அந்தரத்தில் விட்டவர், கடைசி வரை அதை சொல்லாமலேயே உரையை முடித்துவிடுவார். இது போன்ற ஒத்திவைப்புகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். சிலநேரங்களில் அதை சொல்ல மறந்துவிடுவோம். சிலநேரங்களில் சொல்வதற்கு நேரம் இல்லாமல் போய்விடும். சிலநேரங்களில் இறுதியில் அந்த செய்தி நினைவிற்கு வந்தாலும், கோர்வையாக அமையாது என்ற காரணத்தினால், சொல்ல இயலாது. பொதுவாகவே, ஒரு பொருளை தராமல் இருந்துவிட்டால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ”தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தராமல் இருந்தால், பெரிய இழப்பாகத் தோன்றும். நீங்கள் பிறகு சொல்கிறேன் என்று சொன்ன விஷயம், பிறகு சொல்லப்படும் என்ற எண்ணத்திலேயே உரையை கேட்டவருக்கு கடைசிவரை சொல்லப்படாவிட்டால், பெருத்த ஏமாற்றமாக இருக்கும். நிறைய விஷயங்களை நீங்கள் சொல்லியிருந்தாலும், ஏதோ குறையுள்ளது போல உங்கள் உரை ஆகிவிடும். ஒருசில பயான்களில், ஒருசில செய்திகளை, கடைசியில் சொல்லவேண்டிய அவசியம் இருக்கும். அது போன்ற விதிவிலக்குகளைத் தவிர, மற்ற எதையும் ஒத்திவைக்காதீர்கள். v பழமொழியை பயன்படுத்துவதில் கவனம் தேவை. பிறமத வேதங்களின், அறிஞர்களின் கருத்துக்களைத்தான் பயன்படுத்தக்கூடாது. பொதுவான பழமொழிகளை பயன்படுத்தலாம். ”ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?” என்பது போன்ற அர்த்தமுள்ள பழமொழிகளை பயன்படுத்தும் போது பேச்சின் சுவை கூடும். பலமொழிகளை ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போகாமல், விளக்கிப் பேசுவது நன்றாக இருக்கும். உதாரணமாக, ”தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்” என்று சொல்லிவிட்டு, ”நீங்கள் இந்த நாட்டின் அதிபதியாக இருந்தாலும், உங்கள் தாயைவிட பெரிய ஆளா? தாய்க்கு பிள்ளை தானே!” என்று விளக்கும் போது, கேட்பதற்கு சுவையாக இருக்கும். பழமொழிகள் மக்களுக்கு பழக்கப்பட்டவையாக இருப்பதால், அவற்றை எளிதில் அங்கீகரித்துக்கொள்கிறார்கள். ஏற்கனவே அங்கீகரித்த பழமொழிகளுடன் சேர்த்து, ஒரு செய்தியை சொல்லும் போது, சொல்லப்படும் செய்தியும், எவ்வித மறுப்பும் இன்றி, அங்கீகரிக்கப்படுகிறது. Ì தவறான பழமொழிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. ”கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்யைாருக்கு உடைத்த கதையாக, யார் பணத்தையோ கொண்டு வந்து, பள்ளிவாசலுக்கு கொடுத்துவிட்டு போய்விடாதீர்கள்” என்று பேசினால், பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதை நீங்கள் ஆதரித்தது போல் ஆகிவிடும். பின்பற்றத்தகாத தவறான எந்த பழமொழியையும், உதாரணத்தையும் நபியவர்கள் பயன்படுத்தியதில்லை. எனவே சரியான பழமொழிகளை மட்டும் பயன்படுத்துங்கள். அதையும், ஓன்றோ, இரண்டோ மட்டும் பயன்டுத்துங்கள். அதற்கு மேல் பயன்படுத்தினால், இஸ்லாமிய கருத்துக்கள் மிகைப்பதற்கு பதிலாக, முன்னோர்களின் கருத்துக்கள் மிகைப்பது போன்ற தோற்றம் ஏற்படும். v குறிப்பிட்ட வாக்கியத்தை திரும்பத்திரும்ப சொல்லாதீர்கள். டிவி நிகழ்ச்சிகளில் பேசும் சிலர், பேசும் போது அடிக்கடி, ”பாத்திங்கனா, பாத்திங்கனா” என்பது போன்ற குறிப்பிட்ட வார்த்தையை திரும்பத்திரும்ப பேசுவார்கள், அதுபோன்று பயானில் பயன்படுத்தக்கூடாது. தப்லீக் உரைகளில், சகோதரர்களே! கனவான்களே! என்ற வார்த்தைகள் வரிக்குவரி இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். இது போன்ற பேச்சுவழக்குகளை தவிருங்கள். சிலர் உரை நிகழ்த்தும் போது அரசியல்வாதிகளைப் போல அடிக்கடி, ”இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை மக்களிடம் ஆழமாக பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு ஒரு தடவை சொல்லலாம், இரண்டு தடவை சொல்லலாம். அரைமணிநேர உரையில் பத்து தடவை சொன்னால், கேட்பதற்கு யாருக்குமே வெறுப்பாகத்தான் இருக்கும். அதை சொல்லும் நேரத்தில் உருப்படியாக வேறு எதையாவது சொல்லலாமே! இன்னும் சிலர் உரை நிகழ்த்தும் போது, வரியை முடிக்கும் நேரத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசுவதுபோல, ”ம்ம்.. என்ன.. ம்ம்.. என்ன..” என்று அசைபோடுவார்கள். மக்கள் வெறுக்கும் பேச்சு இது. இதிலிருந்து விடுபடுவதற்கு சிறிது காலம், கட்டுரை நடையில் பேசுங்கள். இதுமட்டுமல்ல, இது போன்ற எந்த வார்த்தையையும் திரும்பத்திரும்ப சொல்லக்கூடாது. பெரும்பாலும் இப்படி பேசுபவர்களுக்கு, ”தாம் இப்படி பேசுகிறோம்” என்று தெரிவதில்லை. எனவே பிறர் சுட்டிக்காட்டும் போது, அலட்சியப்படுத்தி விடாமல் திருத்திக்கொள்ளுங்கள். Ì வார்த்தைகளை திரும்பத்திரும்ப பயன்படுத்தக் கூடாததைப்போல, எந்த சம்பவத்தையும், தகவலையும் ஒரு உரையில் ஒன்றிற்கும் மேற்பட்ட தடவைகள் சொல்லக்கூடாது. சலிப்பு ஏற்படுவதற்கு தகுந்த காரணங்களில் இவ்வாறு ஒரு செய்தியை பலதடவை பயன்படுத்துவதும் ஒன்று. v அனுபவமுள்ள பிற பேச்சாளர்களின் வீடியோக்களை பாருங்கள். அனுபவமுள்ள பேச்சாளர்களின் பேச்சை தொடர்ந்து 3 மாதம் கவனித்தாலே, இங்கு சொல்லப்பட்டவற்றில் 80 சதவீதத்தை எளிதாக செயல்படுத்தமுடியும். பிறரை காப்பி அடிக்கக்கூடாது என்று தத்துவம் பேசவேண்டிய அவசியமில்லை.  காப்பியடிப்பதை தவறென்றும் நினைக்கவேண்டியதில்லை. நல்ல விஷயங்களில் நன்மக்களை பின்பற்றவேண்டும் என்பதே திருமறையின் கட்டளை. (9:100) புதிதாக பேசஆரம்பிக்கும் தாயிகள், அனுபவமுள்ள பேச்சாளர்களின் ஒரே வீடியோவை பலமுறை பாருங்கள். லேசான மாற்றத்துடன், அதே பயானை நீங்களும் செய்து பாருங்கள். இது நல்ல பயிற்சியைத் தரும். ஆறு மாதங்கள் கடந்தபின்பு, வழக்கத்தை மாற்றிக்கொள்ளங்கள். அதற்கு பிறகு, ஈயடிச்சான் காப்பி போல, வார்த்தை மாறாமல், ஸ்டைல் மாறாமல் பேசினால், உங்கள் பேச்சு எடுபடாது. என்பதை நினைவில் வைக்கவும். கருத்தையும், ஸ்டைலையும் உள்வாங்கிக்கொண்டு, உங்களது இயல்பான, அல்லது உங்களின் ஸ்டைலான பேச்சில் வெளிப்படுத்துங்கள். இதுவே பின்பற்றுவதில் சரியான முறை. முக்கியமாக, அனுபவம் உள்ள பிறபேச்சாளர்களின் “கருத்துக்களை, தத்துவங்களை“ உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை மனப்பாடம் செய்து, கண்டிப்பாக உங்கள் பயானில் பயன்படுத்துங்கள்., Ì  ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள தனிப்பட்ட செயல்கள், பேச்சுக்களை மேனரிஸம் (Mannarism) என்பார்கள். (பேச்சுக்கலையில் இதற்கு signature என்றும் சொல்லப்படும்). பிற பேச்சாளர்களின் கருத்துக்களையும், யுக்திகளையும் காப்பி அடிக்கலாம். ஆனால் அவர்களது மேனரிஸங்களை காப்பி அடிக்காதீர்கள். மேனரிஸங்களை காப்பி அடித்தால், நீங்கள் யாருடைய பயானை பார்த்துவிட்டு பேசுகிறீர்கள் என்று மிக எளிதாக கண்டுபிடித்துவிடமுடியும். பிறருடைய மேனரிஸங்களோடு, உங்களின் சொந்த கருத்தை சொன்னாலும், ”இதெல்லாம் அவுரு சொன்னாதா இருக்கும்” என்று உங்கள் உரையை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள். Ì இடையிடையே கிடைக்கும் சட்டங்கள், துணுக்குகள் - அதிக அனுபவம் உள்ள பேச்சாளர்களின் உரையை கேட்க சிலர் ஆர்வம் காட்டுவதற்கு பலகாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, அவர்களின் உரையில் போகிறபோக்கில் பல சட்டத் துணுக்குகள் கிடைக்கும். உதாரணமாக, கண்டெடுத்த பொருளை ஒருவருடம் அறிவிப்பு செய்யவேண்டும், புதையல் கிடைத்தால் 20 சதவீதம் ஜகாத் தரவேண்டும். நபியவர்கள் குறிப்பிட்ட ஒருநேரத்தில் மட்டும் நின்றுகொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்கள். என்பது போன்ற சிறுசிறு சட்டங்களை இடையிடையே சொல்வார்கள். இதை பல மக்கள் விரும்புவார்கள். Ì கவனம் - முக்கியமாக மாற்றப்பட்ட சட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் பழைய சட்டத்தை சொல்லி, பயானை கேட்பவர், இது மாற்றப்பட்டது என உங்களுக்கு, சொல்லிக் கொடுப்பது, ஆரோக்கியமான பயானுக்கு உகந்ததல்ல. நீங்கள் ஒன்றும் அறியாதவர் என்ற எண்ணம், உங்களது எந்த பேச்சையும் கவனிக்கத் தூண்டாது. இதுவரை மக்களை கவரும் வகையில் பேசுவதையும், பேசக்கூடாத முறைகளையும் விரிவாக பார்த்தோம். அடுத்த பகுதியில், கேள்விக்கு பதில் சொல்லும் போது, கவனிக்கவேண்டிய ஒருசில விஷயங்களை மட்டும் காண்போம். கேள்விக்கு பதிலளிக்கும் போது கவனிக்கவேண்டியவை முதலில், நீங்கள் நிகழ்த்திய உரையில் எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குரிய பதில்களை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். எடுத்துவந்த தலைப்பின் கீழுள்ள சட்டங்களே சரியாக தெரியாமல் இருப்பது சரியல்ல. எனவே எதைப் பேசினீர்களோ அதுபற்றி சட்டதிட்டங்களை அறிந்துவைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, பதிலளிக்கும் போது, கீழ்காணும் ஒழுங்குமுறைகளை கவனத்தில் கொள்ளுங்கள். v மார்க்க அறிவு அவசியம். பயான் செய்வதற்கு அனைத்து சட்டங்களும் தெரிந்த ஆலிமாக இருப்பது கட்டாயமில்லை என்று இந்த நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் கேள்விபதில் நிகழ்ச்சிக்கு இது பொருந்தாது. முன்னரே முடிவுசெய்த தலைப்பிற்கு, வெறும் ஜந்தாறு செய்திகளை மட்டும் தெரிந்துகொண்டு பயான் செய்துவிட முடியும். ஆனால், புதிதுபுதிதாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, மார்க்கத்தீர்ப்பு வழங்கவேண்டுமானால், குர்ஆனையும், ஹதீஸையும், அதிலிருந்து சட்டம் எடுக்கும் விதிமுறைகளையும் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். எனினும், தாயத்து கட்டலாமா? பேய், பிசாசு உண்டா? முன்பின் சுன்னத்துகள் என்ன? என்பது போன்ற, ஏற்கனவே பலஅறிஞர்களால் ஆராய்ந்து பதிலளிக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆதாரங்களோடு கூடிய கையில் இருக்கும் ரெடிமேட் பதிலை, மக்களுக்கு தெரிவிப்பது குற்றமல்ல. எனவே, பதிலை எடுத்துச்சொல்கிறவர்களும், பதில் சொல்கிறவர்களும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிலவிஷயங்களை மட்டும் இங்கு காண்போம். v ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடாது. ஏற்கனவே, ”இதுவெல்லாம் தப்பு என்று ஒருவரியில் சாதிக்கப்பார்க்காதீர்கள்” என்ற தலைப்பில் எந்த கருத்தை நிறுவுவதற்கும், ஓரிரு வரிகள் போதாது. என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது, கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும், ”இதெல்லாம் ஹதீஸில் இல்லை எனவே நாம் செய்யக்கூடாது” என்று பதிலை ஒரிரு வரிகளில் சொல்லிவிட்டு போகாமல், விளக்கமாக சொல்லவேண்டும். உதாரணமாக) ”பல்லி தலையில் விழுந்தால் கெட்ட சகுனமா?” என்று கேட்டால், F முதலில், பல்லி பற்றிய மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்ட வேண்டும். F பிறகு சகுனம் இஸ்லாத்தில் இல்லை என்று விளக்கவேண்டும். F பிறகு, பல்லி தலையில் விழுவதை பற்றி நபி(ஸல்) கெட்டதாக                                  கூறவில்லை என விளக்கவேண்டும். இப்படி எந்த கேள்விக்கும் விளக்கமாக, ஆதாரங்களை மேற்கோள்காட்டி விளக்கவேண்டும். ஒற்றை வரியில் தவறென்று சொல்வது பயனளிக்காது. அதே சமயம்,  ”தெரியாம கேட்டுட்டேன். விட்டுடுங்க” என்று மக்கள் பயந்து ஓடும் அளவிற்கும், பதிலை நீட்டிவிடவும் கூடாது. நடுநிலையை கையாளுங்கள். பயானில் கூட சில மக்கள் தூங்குவார்கள், கேள்விபதிலில் பெரும்பாலும் தூங்கமாட்டார்கள். கேள்வி பதிலில் மக்கள் தூங்க ஆரம்பித்தால், (அது மிகப்பெரும் சாதனை தான்!) நீங்கள் மிகஅதிக நேரம் எடுத்து பதில் சொல்கிறீர்கள் என்று பொருள். அதுபோன்ற நேரங்களில் பதிலை சுருக்கிக் கொள்ளுங்கள். ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனை அதிகமாக்கிக்கொள்ளுங்கள். v பதிலை சுருக்கமாக சொல்விட்டு பிறகு விளக்குவது சிறந்தது. முடியும் நேரங்களில், கேள்விக்குறிய பதில்களை விளக்குவதற்கு முன், இது கூடும், கூடாது என்பதை ஒருவரியில் சொல்லிவிட்டு பிறகு விளக்கிச் சொல்வது நல்லது. உதாரணமாக) இணைவைப்பு நடக்கும் பள்ளியில் தொழலாமா? என்று ஒருவர் கேட்டால், முதலில் தொழக்கூடாது என்று ஒருவரியில் சொல்லிவிட்டு பிறகு அதற்குறிய ஆதாரங்களை சொல்லி விளக்குவது சிறந்தது. நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த ஒருவரி அவசியமானது. அரைமணி நேரம் பதில் சொல்லிமுடித்த பிறகும் ”என்ன சொன்னாரு? கூடும் என்கிறாரா? கூடாது என்கிறாரா?” என்று கேட்கும் மக்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எனவே, கேள்விக்குறிய பதிலை ”….கூடும் ...கூடாது” என்று ஒருவரியில் சொல்லிவிட்டு, பிறகு ஆதாரங்களை விளக்கும் போது, அந்த பதிலின் அடிப்படையில் ஆதாரங்களை புரிந்துகொள்வார்கள். இதில் விதிவிலக்கான நேரங்களும் உண்டு. Ì  மிகப்பெரிய பேச்சாளர்களெல்லாம் பேசஆரம்பிக்கும் போது, ”எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு மறுமைவாழ்க்கை” என்று முதலில் ஒருவரியில் தலைப்பை சொல்லிவிட்டு, பிறகு பேசுவது மேற்குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான். தலைப்பை சொல்லிவிட்டு பிறகு பேசும்போது, சொல்லும் செய்திகளை மக்கள் அந்த தலைப்பின் அடிப்படையில் புரிந்துகொள்வார்கள். v மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள். பலநேரங்களில் பிஜேவின் பதில்களில், ”ஒரு அடிப்படையை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்” என்று சொல்லி பதிலை ஆரம்பிப்பார். இயன்ற அளவு, கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுபோன்று பதில் கண்டுபிடிக்கும் அடிப்படையை சொல்லிக் கொடுங்கள்.

எனவே ஒவ்வொரு தடவையும் மீனை பிடித்து கையில் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள். சட்டத்தின் அடிப்படையை கற்றுக்கொடுத்த நன்மையும் உங்களுக்கு கிடைக்கும். v ஆர்வமூட்டுவதாக நினைத்துக்கொண்டு, ஃபரளாக்கிவிடாதீர்கள். வழியுறுத்தப்பட்ட சுன்னத்தை பர்ளு போன்று காட்டும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது கூடாது. வித்ரு தொழுகையை பற்றி சொன்னாலும் சரி, பஜ்ருடைய முன் சுன்னத்தை பற்றி சொன்னாலும் சரி, முக்கியத்துவம் வாய்ந்த வேறு செயல்களை பற்றி சொன்னாலும் சரி, கடமையானது என்பது வேறு, சுன்னத்தானது என்பது வேறு. ஒரு அமலின் சிறப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்திற்காக, ”அதை ஒருபோதும் விடக்கூடாது” என்று சொல்லி பர்ளை போன்று காட்டிவிடாதீர்கள். உங்கள் பேச்சை கேட்கும் மக்கள், ”ஒருபோதும் விடக்கூடாது” என்றால் விடஅனுமதி இல்லை(எனவே ஃபர்ள்) என்று தான் புரிந்துகொள்வார்கள். இறைவன் சிலவற்றை சுன்னத்தாக, நஃபிலாக ஆக்கியிருப்பது, கண்டிப்பாக செய்யவேண்டும் என்றில்லாமல் சலுகை தரும் வகையில் தான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,  'ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால், அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்' (புகாரி 7288), எனவே இஸ்லாத்தில், உள்ளதை உள்ளபடி சொன்னால் போதுமானது. வழியுறுத்தப்பட்ட சுன்னத்தை ஃபர்ளை போன்றும், சிறந்ததை, கட்டாயமானதை போன்றும் காட்டத் தேவையில்லை. v நகைச்சுவை என்று நினைத்து மட்டம் தட்டிவிடக்கூடாது. எப்போதும் சீரியஸாக பேசிக்கொண்டிருக்காமல், கேஸுவலாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதும், கேள்விகளுக்கு பதிலளிப்பதும் விரும்பத்தக்கது தான். அதேநேரம் ஜோக் அடிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பேசுவது சிலநேரம் மக்களை இழிவுபடுத்துவது போல் ஆகிவிடுகிறது. உதாரணமாக, ஒருபெண்மணி கேட்கிறார், ”ஆடையில்லாமல் குளிக்கலாமா?”, இதற்கு, ”அதுல என்ன உங்களுக்கு சிரமம்?” என்பதுபோல் எதாவது கேட்டால் சுற்றி உள்ளவர்கள் சிரிக்கலாம். கேள்விகேட்டவருக்கு மிகுந்த சங்கடமாக இருக்கும். யோசிக்காமல் நகைச்சுவையாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு வாயில் வருவதையெல்லாம் பேசிவிடக்கூடாது. அதுபோன்று ஒருவர் கேட்கிறார், ”என் மனைவி பொய் பேசுகிறாள். புறம் பேசுகிறாள். பர்தா அணிவதில்லை. எப்படி திருத்துவது?” என்று. இதற்கு, ”அப்ப ஒன்னா நம்பர் ஷைத்தான்னு சொல்லுங்க!” என்று சொன்னால், அரங்கமே சிரிப்பலையால் நிரம்பும். ஆனால் கேள்விகேட்டவரோ, அவரது மனைவியோ மிகுந்த வேதனைப்படுவார்கள். நம்மையும் இதுபோன்று எதாவது சொல்லுவாரோ என்ற எண்ணத்தில், இதுபோன்று கேள்வி கேட்கவிரும்பும் பிறரும், கேள்வி கேட்கமாட்டார்கள். கவனம். இது சரியான செயல் அல்ல. v கிண்டல்கள் பதிலாகாது. தப்லீக் ஜமாத் சரியா? தொப்பி அவசியமா? தப்ரூக்(சீரணி) புனிதமானதா? என்பது போன்ற எதாவது கேள்வியை கேட்கும் போது, சிலபேச்சாளர்கள் அதற்குரிய சரியான பதிலை சொல்லாமல், வெறும் கிண்டலோடு முடித்துக்கொள்கின்றனர். தரமற்ற பேச்சாளரின் அடையாளங்களில் இதுவும் ஒன்று. அறியாமை காலத்து செயல்களை நினைத்து சிரிப்பதற்கு அனுமதி உண்டு. ஜாபிர்பின் சமுரா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ”நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும் முன் எழுந்திருக்கமாட்டார்கள், அப்போது, மக்கள் அறியாமை காலத்து செயல்களை கூறி சிரித்துக்கொண்டிருப்பார்கள், அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்” (முஸ்லிம் 4641). எனவே கிறுக்குத்தனமான செயல்களை காணும் போது சிரிப்பு வரத்தான் செய்யும். சிரித்துக்கொள்ளுங்கள். தடையில்லை. எனினும், அந்த சிரிப்பிற்கு பின்னால், அந்த செயல் எதனால் தவறு என்பதை ஹதீஸ் ஆதாரங்களோடு விளக்கவேண்டும். சிரிப்பது ஆதாரமாகாது. v எந்த கேள்வியையும் இன்முகத்தோடு வரவேற்பது. சிலர் கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு, தனது கருத்தை சொல்வார்கள், சிலர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள். அப்போதும் சரி மற்ற நேரங்களிலும் சரி முடிந்தஅளவு எந்த கேள்வியையும் ”அர்த்தமே இல்லை” என்று அலட்சியப்படுத்தக்கூடாது. ”புத்திசாலித்தனமான கேள்வியை மட்டும் தான் கேட்கவேண்டும்” என்று நினைத்து மக்கள் கேள்வி கேட்க தயங்குவார்கள். எந்த கேள்வியையும் இன்முகத்தோடு வரவேற்பது, அனுபவமுள்ள பேச்சாளர்களின் வழிமுறையாக இருக்கிறது. ”சரியா கேட்டீங்க. தேவையான கேள்வியை கேட்டிருக்கீங்க” என்று கேள்வியை வரவேற்பதால், மற்ற மக்களும் தயக்கமின்றி கேள்விகேட்பார்கள். ஒரே ஒரு நேரத்தில் மட்டும் கேள்வி கேட்டவரை கண்டிக்கவேண்டியிருக்கும். அதாவது, முஸ்லிமாக இருந்துகொண்டு, இறைவனின் கட்டளைகளையோ, நபியின் செயல்களையோ குறைசொல்லும் வகையில் கேள்விகேட்பது. உதாரணமாக, ”பெண்களுக்கு சமஉரிமை தராமல் இருப்பதற்கு காரணம் உள்ளதா?” என்று கேட்டால் பிரச்சனை இல்லை. மாறாக, ”பெண்களுக்கு சமஉரிமை தராமல் அல்லாஹ் ஏன் இழிவுபடுத்துறான்?” என்று ஒரு முஸ்லிம் கேட்டால், இந்த கேள்விக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும். முஸ்லிமல்லாதவர் இப்படி கேட்டால் ஒன்றும் செய்யமுடியாது, அவர் ஈமான் கொள்ளவில்லை. அவருக்கு அல்லாஹ் என்றால் யார் என்றே தெரியாது. தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் இப்படி கேட்டால், ”அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நியாயமான பதில் இருப்பது ஒருபக்கம். பதில் தெரியாவிட்டாலும் இறைவனின் கட்டளையை முழுமனதோடு ஏற்பதுதான் ஒரு முஸ்லிமின் கடமை” என்று கடுமையாகவே சொல்லுங்கள். எதைவேண்டுமானலும் கேட்கலாம் என்பதை தவறாக புரிந்துகொண்டதுதான் இதற்கு காரணம். இந்த போக்கை கடுகளவும் அனுமதிக்காதீர்கள். v சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள் சிலநேரங்களில் மக்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்ற எண்ணத்தில் வருவார்கள். அதுபோன்ற நேரங்களில், சற்று நிதானமாக கேள்வி கேட்டவருடைய சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள். ஒருவர் கேட்கிறார், ”நான் வேலைக்கு போற இடத்தில தொழ முடியவில்லை. என்ன செய்வது?” இதற்கு, ”தொழமுடியாத வேலையை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைய்யுங்கள்” என்று பதில் சொல்வது சரியா? தொழமுடியாவிட்டால் கண்டிப்பாக வேலையை விடவேண்டும் தான், ஆனால் அதை சொல்வதற்கு முன்னால், ”மதிய உணவு நேரத்தில், லுஹர், அஸரை சேர்ந்து எங்காவது ஒரு ஓரத்தில் நின்று தொழுதுவிடுங்கள், மஃரிப், இஷாவை வீட்டில் வந்து தொழுதுகொள்ளுங்கள். வேறு நல்லவேலையை தேடிக்கொண்டிருங்கள்.” என்று சொல்லுங்களேன். வேலையை விட்டுவிடுங்கள் என்ற ஒருவரியில் சொல்லிவிட்டுச் செல்பவர்கள், தங்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை இருந்தால், எடுத்த எடுப்பிலேயே வேலையை விட்டுவிடுவார்களா? அல்லது வேறு அனுமதிக்கப்பட்ட வழியை முயற்சிப்பார்களா? எனவே கேள்வி கேட்டவருடைய சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள். v கேள்விக்கு சீட்டு பெறுவது பாதுகாப்பான முறை. இளம் பிரச்சாரகர்கள் உடனுக்குடன் நேருக்குநேர் பதில் சொல்லாமல், கேள்வி கேட்பவர்களிடம் சீட்டில் எழுதித்தாருங்கள் என்று எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். பதட்டம் இல்லாமல் பதில் சொல்லமுடியும். பத்துஇருபது சீட்டுகள் வரும் போது, அதிலிருந்து முதலில் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும், இருக்கும் நேரத்தில் பதிலை சொல்லி முடித்துக் கொள்ளமுடியும். ஒருவேளை நேருக்குநேர் பதில் சொல்லும் நிர்பந்தம் ஏற்பட்டு,  பதில் தெரியாத கேள்வியை சந்தித்தால், எதையாவது உளறிகொட்டி மாட்டிக்கொண்டு முழிப்பதைவிட, நாளை சொல்கிறேன் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. v பேச்சாளர் சந்திக்கும் பிரச்சனைகள். புதிதாக எந்த வேலையை செய்ய ஆரம்பித்தாலும் அதில் சிரமங்கள் வருவது இயற்கை. பிரச்சாரம் இதற்கு விதிவிலக்கல்ல. அல்லாஹ்வுக்காக, சொந்த வேலைகளை விட்டுவிட்டு, நேரத்தை ஒதுக்கி பயானுக்கு குறிப்பெடுத்து, பேசவரும்போது, இதெல்லாம் பயானா? சொதப்பீடிங்க. என்று யாராவது கூறினால், மிகப்பெரும் இடி விழுந்தது போல் இருக்கும். இதுபோன்ற பேச்சாளர் சந்திக்கும் ஒருசில பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் காண்போம். v ஏற்கனவே கேட்டவர் இருப்பதை பெரிதுபடுத்தாதீர்கள். நீங்கள் ஒரு இடத்தில் பேசிய பேச்சை, மீண்டும் வேறு இடத்தில் பேசுகிறீர்கள், என்றால், பெரும்பாலும், அதே கோணத்தில் தான் அந்த செய்தியை பேசுவீர்கள். ஏற்கனவே உங்களின் இந்த பேச்சை கேட்டவர், மீண்டும் இப்போது, இந்த பயானிலும் அமர்ந்திருப்பார். இதுபோன்ற நேரங்களில், ”ஒரே மேட்டரை மக்அப் பன்னிட்டு, எல்லா இடத்திலேயும் அதையே தான் பேசுறாரு” என்று நினைப்பார்களோ, என்ற உறுத்தல் ஏற்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கொஞ்சம் கூட அசரவே செய்யாதீர்கள். ”ஆமாம். அதையே தான் பேசுறேன். அது அந்த மக்களுக்கு. இது இந்த மக்களுக்கு” என்று தைரியமாக பேசுங்கள். நீங்கள் பேசிய ஹதீஸ்கள் அனைத்தும் தெரிந்தவர் ஒருவரோ, இருவரோ பத்துபேரோ கூட இருக்கலாம். ”இங்கு இருக்கும் தெரியாத மக்களுக்குக்காகத்தான் பேசுகிறேன்” என்று நிதானமாக பேசுங்கள். ஏற்கனவே உங்களது அதே பயானை கேட்டவர் இருப்பதை பொருட்படுத்தாதீர்கள். அதே நேரத்தில், பொதுவாகவே எந்த பயானையும் மீண்டும் பேசும்போது, வேறுகோணத்தில் பேசுவது உங்களது திறமையை வளர்க்கும். அதுமட்டுமின்றி, பேசிக்கொண்டு இருக்கும் போது, வேறுவேறு புது செய்திகள், சம்பவங்கள் நினைவிற்கு வரும். அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேறுகோணம், புதுபுது உதாரணங்கள், தற்போதைய நாட்டுநடப்புகள் என எந்த பழைய பயானுக்கும் புது வடிவம் தரமுடியும். v மக்கள் பேசிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? பேச ஆரம்பிக்கும் போது மைக், ஸ்பீக்கர் சரியில்லாமல் போகும். புரொஜெக்டரை சரியாக செட் செய்திருக்கமாட்டார்கள், ஏற்பாடு செய்த நிர்வாகிகளே பயானை கவனிக்கமாட்டார்கள். இது போன்று எந்த பிரச்சனை வேண்டுமானாலும் வரலாம். இவற்றையெல்லாம், மென்மையான முறையில் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். குறிப்பாக, பேச்சாளருக்கு எரிச்சல் ஏற்படுத்தும் விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று, அவர் உரை நிகழ்த்தும் போது, மற்றவர்கள் பேசிக்கொண்டிருப்பது. சில நேரங்களில், கோபம் மிகைத்து, நான் பேசட்டுமா? நீங்கள் பேசுகிறீர்களா? என்று கேட்பவர்களும் உண்டு. நிதானத்தை கைகொள்ளுங்கள். கோபப்பட்டு ஏதேனும் பேசிவிட்டால், மக்கள் வெறுப்போடு உங்கள் பேச்சை கேட்கும் நிலை ஏற்படும். நமக்கும் அடுத்தடுத்து ஆர்வத்தோடு பேசத்தோன்றாது. எனவே மக்கள் கவனிக்கும் வகையில் நம் பேச்சு இல்லை என்பதை விளங்கி, திடீரென ஒரு உணர்வுப்பூர்வமான செய்தியை, காரசாரமாக பேசி கவனத்தை உங்கள் பக்கம் திருப்புங்கள். அல்லது எதுவும் பேசாமல், ஒருசில நொடிகள், பேசிக்கொண்டிருக்கும் மக்களை ஒரு நிதானப்பார்வை பார்த்தாலும், கூச்சல் பேச்சு குறைந்துவிடும். பேசிக்கொண்டிருக்கும் மக்களையும், தூங்கி வழியும் மக்களையும் சரிசெய்வதற்கு, சில பேச்சாளர்கள், அவ்வப்போது நகைச்சுவையை பயன்படுத்துவதையும், நினைவில் வைத்து தேவைப்பட்டால் பயன்படுத்துங்கள். v அனைவரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமற்றது. நாம் பேசும் எல்லா விஷயங்களும், எல்லாருக்கும் பிடித்திருப்பதில்லை. சில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. இதற்காக நாம் அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை. உதாரணமாக) தேவையான காலகட்டத்தில், ”இயேசு இறைவனுடைய மகன் இல்லை” என்பதை தலைப்பாக எடுத்து பேசும் போது, அதை விரும்பாத மக்கள் சில பேர் இருக்கத்தான் செய்வார்கள். ”கிருஸ்தவர்கள் எப்படியோ போறாங்க. அதெல்லாம் நமக்கெதுக்குங்க. ரஸுலுல்லாஹ்வை பத்தி சொல்லுங்க. சஹாபாக்களை பத்தி மட்டும் பேசுங்க” என்று பேசும் மக்கள் நிச்சயமாக ஒருசிலராவது  இருப்பார்கள். நல்ல கணவனைக் கொண்ட பெண், கணவனின் சிரமங்களைப் பற்றி பேசியதை, ”அருமை!” என்பார், கணவனிடம் அடிவாங்கிவிட்டு பயானுக்கு வந்த பெண் அதே செய்தியை ”வேஸ்ட்” என்பார். எனவே இதுவெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் சூழ்நிலை மற்றும் மனநிலைப் பொறுத்தது. இது போன்ற விமர்சனம் உங்கள் காதுக்கு வரலாம். வராமலும் போகலாம். எப்படி இருந்தாலும், பேசும் செய்தி, காலத்திற்கு தகுந்த செய்தியாக, சரியான கருத்துடைய செய்தியாக இருந்தால், ஒருசிலர் விரும்பாததை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி இரண்டு பேர் எல்லா இடத்திலேயும் இருக்கத்தான் செய்வார்கள் என்று விட்டுவிடுங்கள். இரண்டு காதுகள் இருப்பது, சிலநேரங்களில், ஒன்றில் வாங்கி மற்றொன்றில் விடுவதற்குத்தான், என்று நினைத்து விட்டுவிடுங்கள். புதியவர்களின் சந்தேகமும், சில ஆலோசனைகளும். v எனக்கு அரபி வசனங்கள், ஹதீஸ்கள் அதிகமாக தெரியவில்லையே! உங்களுக்கு மட்டுமல்ல, மதரஸாவில் படிக்காமல் தனது சுயமுயற்சியால் கல்வி அறிவை வளர்த்துக்கொண்டு பிரச்சாரம் செய்யும் பலருக்கும் உள்ள பிரச்சனை இது. சிலர் விதிவிலக்காக அதிகமான வசனங்களையும், ஹதீஸ்களையும் தெரிந்து வைத்திருக்கலாம். இவர்களன்றி மற்றவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால், தலைப்பிற்கு தேவையான ஆயத்துக்களையும், ஹதீஸ்களையும் மனனம் செய்ய முடியாவிட்டால், 50 பொதுவான குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை மட்டும் மனனம் செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, ”(குல்லுக்கும் ராயின்) உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்…” என்ற ஹதீஸ் நாம் பேசும் பயான்களில் கிட்டத்தட்ட 90 சதவீத உரைகளுக்கு தேவையான ஹதீஸ். இந்த ஒரு ஹதீஸை அரபியில் மனப்பாடம் செய்தால், பத்தில், ஒன்பது பயான்களுக்கு பயன்படும். அதுபோல, ”(லகத்கானலக்கும்) இந்த நபியிடத்தில் அழகான முன்மாதிரி இருக்கிறது (33.21)” என்ற குர்ஆன் வசனத்தை கிட்டத்தட்ட எல்லா உரைகளுக்குமே பயன்படுத்த முடியும். இதுபோன்ற பொதுவான ஹதீஸ்களையும், வசனங்களையும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். வெறும் 50 அரபு செய்திகளைக் கொண்டே, நம் அனைத்து உரைகளிலும் அரபியில் பேசுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். Ì மேற்குறிப்பிட்ட அறிவுரை, நீண்டகால தரமான பேச்சுக்கு பயன்படாது. புதியவர்களும், மதரஸாவில் படிக்காதவர்களும் தங்களது உரைகளை மெருகூட்டுவதற்கு சில காலத்திற்கு இந்த வழிமுறையை கையாளலாம். அதன் பிறகு, தலைப்பிற்கு உகந்த ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையும் நேரத்தை ஒதுக்கி மனனம் செய்து, பயன்படுத்துவது தான் சரியானது. இதில் வேறு கருத்திற்கு இடமே இல்லை. v தனக்கென்று ஒரு பானி - ஸ்டைல் தேவையா? புதிதாக பேச ஆரம்பிக்கும் சிலருக்கு, தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்குவதா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும். தானாக உருவாவதை, திட்டமிட்டு உருவாக்காதீர்கள். இது 95 சதவீதம் தோல்வியில் தான் முடியும். தனக்கென்று ஒரு ஸ்டைல் வேண்டுமென்று, அதற்குத் தகுந்தார்போல், பேசஆரம்பித்தால், ஸ்டைலை உருவாக்குவதில் தான் அதிக கவனம் இருக்கும். உதாரணமாக) ஆக்ரோஷமான ஸ்டைலை பழக்கப்படுத்த முயற்சி செய்யும் ஒருவர், சிந்தனையை தூண்டும் கேள்வியை கேட்பதற்கு கூட, காது கிழிய வெறிபிடித்து, கத்தி தான் கேட்பார். இவ்வாறு செய்வது சிந்திக்கத்தூண்டாது, எனினும் ஆதரவாளர்களை மட்டும், கரவோசை எழுப்பச்செய்யும். நகைச்சுவையாக பேசி ஸ்டைலை உருவாக்க நினைக்கும் ஒருவர், அடிக்கடி நகைச்சுவையாக பேசுவதில் தான் அதிக கவனம் செலுத்துவார். பாட்டுப்பாடி மக்களை கவரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர், எதற்கெடுத்தாலும் ஒரு பாட்டை பாட ஆரம்பித்துவிடுவார். எனவே இதற்கு அடிமையாகி, ஸ்டைலை உருவாக்கும் முயற்சியில் இறங்கவேண்டாம். சில வருடங்களுக்கு முன்னால் ”சிறப்பு பேச்சாளர்(?)” ஒருவரின் உரையை கேட்டேன். உருக்கமாக பேசுவதாக என்று நினைத்துக்கொண்டு, அவர் ஒவ்வொரு வரியையும் அழுதுகொண்டே சொன்னார். கேட்பதற்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. எனவே உருக்கம், ஆக்ரோஷம், நகைச்சுவை, பாட்டு என குறிப்பிட்ட ஒரு சுவைக்குள் உங்கள் உரையை அடக்கிவிடாமல், அனைத்தையும் கலந்து பேச கற்றுக்கொள்ளுங்கள். Ì இதையும் தாண்டி, தனி பாணியில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது எனில், குறைந்தது நான்கைந்து வருடங்கள் பேசி அனுபவம் பெற்ற பிறகு, சிந்தித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அப்போதும் கூட, இது தேவையற்றது என்பது தான் எனது முடிவு. இயல்பாக பேசுங்கள். அதன் மூலம் உருவாகும் ஸ்டைல் உருவாகிவிட்டு போகட்டும். அதுதான் உங்களுக்கு ஏற்ற பாணியாக, பொருத்தமாக இருக்கும். v இலக்கிய நடையில் (எதுகை மோனையாக) பேசலாமா? கட்டுரை வடிவில் இருக்கும் மேடைப்பேச்சிலும் கூட, எளிய நடை, இனிய நடை, கிராமிய நடை, இலக்கிய நகை, செய்யுள் நடை என பல்வேறு நடைகள் உள்ளன. உதாரணமாக, எழுத்தாளர் வரதராஜன் எளிய நடைக்கும், கலைஞர் இனிய மற்றும் இலக்கிய நடைக்கும் பெயர் போனவர்கள். மன்னர்கள் காலத்தில் இலக்கிய நடையில் கவிதை பாடும் புலவர்களுக்கு அமைச்சர்களுக்கு நிகரான மதிப்பு இருந்தது. கவிஞர்களுக்கு கருத்து பதிலடி தருவதாக இருந்தால், அதே போன்ற இலக்கிய கவிதையில் தான் பதிலடி தருவார்கள். சாதாரண பேச்சில் பதில் தந்தால், மட்டமாக கருதுவார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போதும், சான்றோர்கள் சபையில் இலக்கிய நயத்துடன் பேசுபவருக்கு தனி மதிப்பு உண்டு, என்பதை யாராலும் மறுக்க முடியாது.   சரி, இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். நமது உரைகளிலும் இதுபோன்று இலக்கிய நயத்துடன் பேசலாமா? என்றால், கூடவே கூடாது, என்பது தான் பதில். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் எனக்கு நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார்'' (திர்மிதி 1941) என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இலக்கியம் வெளிப்பட பேச முயற்சிக்கக் கூடாது. பாடல்கள் பாட அனுமதித்த நபி(ஸல்) அவர்கள், பேசும்போது இலக்கியம் வெளிப்பட பேச அனுமதி மறுப்பது, முரண்பாடு போல் தோன்றலாம். அல்லாஹ்வின் தூதரின் வார்த்தையின் எந்த முரண்பாடும் இருக்காது. இருக்கவும் முடியாது. பாடல்கள் ஏற்கனவே சிந்தித்து எழுதிவைத்து பின்னர் படிப்பவை. தவறான கருத்து இருந்தால் அதை நாம் பாடப்போவதில்லை. ஆனால் பேசும் போது, இலக்கியம் வெளிப்பட பேச முயன்றால், பேசும் அந்த தருணத்தில் தான் தவறுகள் ஏற்படும். சரிசெய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனெனில், இலக்கியம் வெளிப்பட அடுக்குமொழியில் பேச முயற்சிக்கும் போது, எதுகை மோனை சரியாக அமையவேண்டும் என்பதற்காக, வாயில் வருவதையெல்லாம் உளற வேண்டியிருக்கும். கருத்தில் கவனம் செலுத்த முடியாது. எனவே தான், நபி(ஸல்) அவர்கள், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவனை தனக்கு வெறுப்பானவர் என்றும் மறுமை நாளில் தன்னை விட்டு தூரமானவர் என்றும் கண்டிக்கிறார்கள். எனவே, எதுகை மோனையாக பேச முயற்சிக்காதீர்கள். Ì பழமொழியும் எதுகை மோனை அடங்கிய இலக்கியப் பேச்சுதானே! பழமொழியும் ஒருவகையான இலக்கியப் பேச்சாக இருந்தாலும், ஏற்கனவே மனனம் செய்யப்பட்ட ஒரேஒரு வரியைத்தான் பேசுகிறோம். அதை சிரமப்பட்டு யோசித்து பேசுவதில்லை. எனவே பழமொழிக்கு அனுமதி உண்டு, அதுபோல ஏற்கனவே மனப்பாடம் செய்த ஒரிரு இலக்கிய வரிகளுக்கும் அனுமதி உண்டு. v புதியவர்களுக்கான மேலும் சில அறிவுரைகள் பிரச்சாரம் என்பது ஒரு கலை. புதிதாக பிரச்சாரம் செய்பவர்கள் அனுபவத்தின் மூலமாகவே ஒவ்வொரு தவறையும் சரிசெய்யவேண்டியிருக்கும். அதனால் தான் பத்துவருட அனுபவம் உள்ளவர்களின் பேச்சிற்கும், புதியவர்களின் பேச்சிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இந்த பகுதியில் அனுபவமுள்ளவர்களின் சில அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை கவனித்து செயல்படுத்துங்கள்.

இப்னு பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் 'உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதைச் செய்ய விடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களின் சூழ்நிலைகளை கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறு தான் நபியவர்கள், நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்' என்று கூறினார்கள். (புகாரி 70) எனவே, மக்கள் சலிப்படையாத வண்ணம் பயான் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வது அவசியம்.

ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவேண்டும், இன்று இரண்டாயிரம் பேர், ஜந்தாயிரம் பேர் கேட்கும் அளவிற்கு பெரிய பேச்சாளர்களாக இருக்கும்  அனைவருமே ஆரம்பத்தில் வெறும் இரண்டு மூன்று நபர்களுக்கு பிரச்சாரம் செய்தவர்கள் தான். அதுவும் அந்த மூன்று பேருக்கு பிரச்சாரம் செய்வதற்காக பலநூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து செல்வார்கள். அதற்காக தங்களது பொருளாதாரத்தை செலவு செய்திருக்கிறார்கள். தவ்ஹீதை சொன்னதற்காக பலஇடங்களில் அடிஉதை கூட வாங்கியிருக்கிறார்கள். இன்று நமக்கு அவ்வளவு சிரமம் இல்லை. எனவே, எடுத்த எடுப்பிலேயே ஜநூறு பேருக்கு பிரச்சாரம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுவது சரியல்ல. சிறுகசிறுகத்தான் ஆடியன்ஸ் பெருகுவார்கள். உடல்ரீதியாக கவனிக்கவேண்டியவை. v சுறுசுறுப்பு உற்சாகம். பயான் நிகழ்த்தும்போது உற்சாகமாக இருந்தால், குறைவான குறிப்புகள் இருந்தாலும், நிறைவாகவும் தெளிவாகவும் பேசமுடியும். எனவே, பயான் நிகழ்த்தும் போது, ஃபிரஷ்ஷாக உற்சாகமாக இருக்க, முடிந்தவரை முயற்சியுங்கள். வெளியூருக்கு போகும்போது, முடிந்தால் ஓய்வு எடுப்பதற்கு தகுந்தவாறு 2 மணி நேரம் முன்னதாகவே செல்லுங்கள். உரை நிகழ்த்துவதற்கு முன்னர், குளிர்ந்த நீரை குடிக்கலாம். உளு செய்து கொள்ளலாம். எப்போதும் ஒரு எலக்ட்ரால் பவுடரை பையில் வைத்துக் கொண்டு சோர்வாக உள்ள போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். பழச்சாறு, குறிப்பாக எலுமிச்சை மற்றும் கரும்புச்சாறு உடனடி ஆற்றலுக்கு உதவும். எந்த வகையிலாவது, பயான் நிழ்த்தும் போது மக்கள் உங்களைப் பார்த்து உற்சாகம் அடையும் வகையில் தெம்பாக, ஃபிரஷ்ஷாக இருப்பது மிகவும் அவசியம். பயானுக்கு இடையில் தேவைப்பட்டால் குடிப்பதற்கு, மேடைக்கு அருகில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல, ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப அழகான சுத்தமான ஆடை அணியுங்கள். உங்களுக்கு வசதியிருந்தால் நல்ல தோற்றமுடைய (Rich ஆன) ஆடையை அணியுங்கள். “அல்லாஹ் ஒருவருக்கு அருட்கொடைகளை வழங்கியிருந்தால் அதை அவர் வெளிப்படுத்தட்டும்” என நபியவர்கள் கூறினார்கள். (பைஹகீ). இதில் மற்றொரு நன்மையும் இருக்கிறது, நீங்கள் விரும்பும் அழகான ஆடை அணிந்துகொண்டு நறுமணம் பூசிக்கொண்டு மேடையில் நின்று பாருங்கள். மிகவும் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதை கண்கூடாக பார்ப்பீர்கள்! Ì சிறுதூக்கம் புத்துணர்வு தரும் பயானுக்கு அரைமணிநேரம் முன்னதாக ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். பத்ருப்போரில், 300 பேர் கொண்ட சிறுபடை, 1000 பேர் கொண்ட பெரும் படையை வெற்றிகொண்டதற்கு, சஹாபாக்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய சிறுதூக்கமும் ஒரு காரணம் என்று திருக்குரான் சொல்கிறது. ”(பத்ர் போர்களத்தில், போருக்கு முன்) அவன் உங்களுக்கு சிறு தூக்கத்தை ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள். அது அவனிடமிருந்து வந்த மனஅமைதியாக இருந்தது” (அல்குர்ஆன் 8:11). எனவே பயானுக்கு முன்னர் சிறுதூக்கம் போடுவது மிகவும் நல்லது. பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று டூபாக்கூர் தத்துவம் பேசக்கூடாது. உங்களுக்குத் தெரியுமா? நாசாவின் அறிவுரையின் பேரில் அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களுக்கு பணியின் இடையே ஒருதடவை சிறுதூக்கம் தூங்க அனுமதிக்கப்படுகிறது. இது அவர்களின் செயல்திறனை 34 சதவீதமும், விழிப்புணர்வை 54 சதவீதமும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. (பிபிசி. வாஷிங்டன் 28-April-2011) v உடல்மொழி – பாடி லாங்குவேஜ் வார்த்தை தெளிவாக இருப்பதோடு, பாடிலாங்குவேஜிலும் கண்டிப்பாக கவனம் செலுத்தவேண்டும். அதாவது, சொல்லும் செய்திகளுக்கு தகுந்தார்போல, கைகளை உயர்த்திப் பேசவேண்டும். தலையை ஆட்டிப் பேசவேண்டும். சரியான பாடி லாங்குவேஜோடு பேசினால், சொல்லும் செய்திகள் உள்ளத்தில் நன்றாக பதியும். புதிதாக பேசுபவர்கள், தவறாக பேசிவிடுவோமோ என்ற பயத்தினாலும், அடுத்தடுத்த குறிப்புகளின் மீது உள்ள கவனத்தினாலும் கைகளை அசைப்பதில் கவனம் செலுத்துவதில்லை. கைகளை, தலையை ஆட்டாமல் அசைக்காமல் மரம்போல நின்று பேசினால், ஆவேசமான கருத்துக்கள் இருந்தாலும், உங்கள் பேச்சு மந்தமாக காட்சியளிக்கும். அதேநேரம் அதிகப்படியாக கையை, தலையை ஆட்டிப் பேசினாலும், நடிப்பது போல இருக்கும். சகிக்காது. எனவே நடுத்தரமானதை கடைபிடியுங்கள். முயற்சி செய்தும் முகபாவனைகள் வராதவர்கள், ஆவேசமான பயானை சப்தமில்லாமல்(Mute செய்து) பேசுபவரின் முகபாவனைகளை கவனித்து அதுபோன்றே செய்து பாருங்கள். இது நன்றாக பயனிக்கும். உங்களுக்குத் தெரியுமா? : பிறவியிருந்தே கண்தெரியாத குருடர்கள் கூட, பிற குருடர்களிடத்தில் பேசும்போது, தேவையான முகபாவனைகளுடன், கைகளை அசைத்து தான் பேசுகிறார்களாம். பாடிலாங்குவேஜுடன் பேசும் போது தான், அவர்களின் பேச்சு கவனிக்கத்தக்க வகையில் உள்ளது என்று ஜவர்ஸன் மற்றும் கோல்டின்மேடோ நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (அவர்களின் ”Why People Gesture When they Speak”  என்ற நூலில் இருந்து) Ì எல்லோரையும் பார்த்து பேசுங்கள். மக்களின் முகத்தையும், கண்களையும்பார்த்துப் பேசுவது, இருவருக்குமிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. உரை நிகழ்த்துபவர் என்னை கவனித்துப் பேசுகிறார், என்ற உணர்வின் காரணமாக, அதிக ஈடுபாட்டுடன் மக்கள் உரையை கவனிப்பார்கள். எனவே முடிந்தஅளவு மக்களின் முகத்தை கவனித்துப் பேசுங்கள். பேசும் போது, ஒரு பக்கம் மட்டுமே பார்த்து பேசக்கூடாது.  நிதானமாக, அவையின் இருபக்கத்திலும் தலையை திருப்பி திருப்பி பேசுங்கள். தலையை திருப்பும் போது, வெறும் தலையை மட்டும் திருப்பாமல், உடலையும் சேர்த்து திரும்பி பேசுவது தான் இயல்பாக இருக்கும். இரண்டு கைகளையும், மேசையின் போடியத்தின் மீது வைத்துக்கொண்டு, உடலை நேராக மரம் போல ஆக்கிக்கொண்டு, வெறும் தலையை மட்டும் கடமைக்கு அங்கும் இங்கும் ஆட்டினால், செயற்கையாகத் தோன்றும். எனவே முடிந்தஅளவு உடலையும் சேர்த்து இருபுறமும் திரும்பி, கைகளை அசைத்து, தலையை ஆட்டி, உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்திப் பேசுங்கள். பேண்ட் பாக்கெட்டிற்குள் இரு கைகளையும் வைத்துக்கொண்டு பேசுவது, ஈடுபாடு இல்லாமல் பேசுவது போன்று காட்சியளிக்கும். Ì பல உலகளாவிய பேச்சாளர்கள், போடியத்தைக்கொண்டு தனது உடலை மறைப்பதை விரும்புவதில்லை. பாடிலாங்குவேஜ் முழுமையாக வெளிப்படுவதற்காக, தனது முழு உடலும் தெரியும் வண்ணம், மேடையில் நின்று உரை நிகழ்த்துகிறார்கள். வெறும் ஸ்டான்டிங் மைக் மட்டுமே அவர்களது முன்னால் இருக்கும். எனவே, நமது உடலின் அசைவுகளை மக்கள் பார்க்கும் வண்ணம், மிகக்குறுகிய போடியத்தை பயன்படுத்துவதும் நல்லதுதான். அதுபோல, நமக்கு முன்னால் நேரில் அமர்ந்திருக்கும் மக்கள் நமது உரையை கேட்கும்போது, நமது உடலின் அசைவுகளை கண்ணில் பார்த்தவண்ணம், உரையை கேட்பதால், நாம் பேசுவது எளிதில் அவர்களுக்கு புரியும். ஆனால், வேறு அறைகளிலோ, மாடியிலோ அமர்ந்திருக்கும் மக்களுக்கு நமது உடலின் அசைவுகள்  தெரியாமல் ஆடியோ மட்டுமே கேட்கிற காரணத்தினால், சொல்லும் செய்திகளை கிரகிப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே, பள்ளிவாசல் போன்ற இடங்களில் பெண்கள் பகுதிக்காக, ஒரு மினி சிசிடிவி கேமராவும், AV கேபிளும், தொலைக்காட்சி பெட்டியையும் நிரந்தரமாக அமைத்துக்கொள்ளுங்கள். v ஆடியோ சரியில்லாவிட்டால், பேசுவதில் பயனில்லை. பேசும் இடத்தில் ஆடியோ சிஸ்டம் சரியில்லாவிட்டால், உங்கள் எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும். எவ்வளவு சிறந்த கருத்துக்களை பேசினாலும், அதனால் பிரயோஜனமில்லை. ஆடியோ சரியில்லாத காரணத்தினால், கத்திகத்தி பேசினால் இயல்பாகவும், புத்துணர்ச்சியோடும் பேசமுடியாது. அதாவது, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, ஏற்றி, இறக்கிப்பேசுவது, டெவலப் செய்து பேசுவது, லோக்கல் பாஷையில் பேசுவது போன்றவைகள் தான் பேச்சுக்கு சுவை கூட்டும் செயல்கள். ஆடியோ சரியில்லாமல் கத்திகத்தி பேசினால் மேற்குறிப்பிட்ட எதையும் செய்யஇயலாது. ஆடியோ சிஸ்டம் தான் பிரச்சனை என்பது பொதுமக்களுக்கு தெரியாது, ”இவுரு பேச்சு சரியில்லை” என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுவார்கள். எனவே பேசும் இடத்தில், மைக், ஸ்பீக்கர், ஆடியோ சிஸ்டம் சரியாக இல்லாவிட்டால் அதன் முக்கியத்துவத்தை நிர்வாகிகளிடம், நட்பு ரீதியில் விளக்கி புரியவையுங்கள். ஆள்பாதி ஆடைபாதி என்று சொல்வது போல, பேச்சு பாதி, ஆடியோ பாதி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இது முக்கியமானது. எனவே, ஜும்மா போன்ற முக்கியமான நேரங்களில் வாடகைக்காவது எடுத்துக்கொள்ளுங்கள், என்று நிர்வாகிகளுக்கு யோசனை தெரிவியுங்கள். இதுதவிர, உங்கள் உயரத்திற்கு தகுந்தார்போல, மைக்கை சரிசெய்துகொண்டு, பேச்சு தெளிவாக இருக்கிறதா என உறுதிசெய்துகொண்டு பிறகு பேசஆரம்பியுங்கள். இதற்கு அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகும். இதை கவனிக்காமல் பயான் செய்தால், ஒரு மணிநேரம் பயான் செய்தும் முழுமையான பலன் கிடைக்காது. பேசும் மேடைக்கு மேலே மின்விசிறி இருந்தால், சில நேரம், பேச்சு தெளிவாக இருக்காது. கவனத்தில் வைய்யுங்கள். மைக்கிற்கு நேராக நின்றுகொண்டு, தும்மாதீர்கள். அதுபோல, மைக்கை விட்டு விலகிப் பேசாதீர்கள். உங்கள் அருகில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து உங்களுக்கு எதிரொலி கிடைத்துவிடும். ஆனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு, உங்கள் பேச்சு விட்டுவிட்டு கேட்கும். எனவே ஆடியோவில் அதிக கவனம் செலுத்துங்கள். அதுபோல, மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் பொதுமக்கள் கண்ணில் வெளிச்சம் படும்படி இருக்கக்கூடாது. மக்களுக்கு எரிச்சலாக இருக்கும். பொதுக்கூட்டங்களில், மெகா ஸ்பீக்கர்கள் இன்று பெரும்பாலும் மக்களின் அருகிலேயே வைக்கப்படுகின்றன. குறைந்த பட்ஜெட் பொதுக்கூட்டங்களில் இதைத்தான் செய்யமுடியும். முடியுமானால், மெகாஸ்பீக்கர்களை மக்களின் தலைக்குமேலே சிலஅடி உயரத்தில் சப்தம் சமமாக பரவும் வகையில் அமைக்கப்படவேண்டும். v ஆடியன்ஸை தெரிந்துகொள்ளுங்கள். நாம் பேசப்போகும் மக்கள் எப்படிப்பட்டவர்கள், என்ன கருத்து தேவையுடையவர்கள், எந்த பகுதியில் வாழ்பவர்கள், எந்த கொள்கையினால் இத்தனை காலம் வழிநடத்தப்பட்டவர்கள் என தெரிந்து அதற்கு தகுந்தார்போல பேசினால், நம் பேச்சு கேட்பவர்களுக்கு பயனுள்ள பேச்சாக இருக்கும். உதாரணமாக)

நபி(ஸல்) அவர்கள் தன்னிடத்தில் உபதேசம் கேட்டு வருபவர்களின் தன்மைக்கேற்ப அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். ¢ பலவருடம் குர்ஆன் ஹதீஸ் கொள்கையிலே ஊறிய மக்களிடத்தில், பெரும்பாலான நேரம், அடிப்படையான செய்திகளையும், ஷிர்க், தர்கா, அவ்லியா, கத்தம், பாத்தியா போன்றவற்றையும் சொல்லவேண்டியிருக்காது. மாற்றப்பட்ட சட்டங்கள், அமல்களின் சிறப்பு, அதில் கவனம், இஸ்லாமிய ஒழுங்குகள், இஸ்லாத்தை மெய்ப்பிக்கும் அறிவியல் செய்திகள், முஸ்லிம் இஸ்லாஹ், நான்முஸ்லிம் தாவா என மற்ற அனைத்தையும் பேசலாம். புதியபுதிய தலைப்புகளை பேசுவதை இவர்கள் எதிர்பார்ப்பார்கள். ¢ அடிப்படைகளே தெரியாத கிராமவாசிகளிடம் போய், பிக்ஹு சட்டங்களை விளக்கிக் கொண்டிருக்கக்கூடாது. வீடே இல்லாத நாடோடி மக்களிடத்தில் போய், வாரிசுரிமை சட்டங்களை பேசிக்கொண்டிருக்கக் கூடாது. பாமர மக்களிடத்தில், இஸ்லாத்தின் அடிப்படையை முதலில் புரியவைக்க வேண்டும். தர்கா, அவ்லியா, ஜோதிடம், பேய் பிசாசு, சூனியம் போன்றவற்றின் உண்மை நிலையை விளக்கவேண்டும். இஸ்லாம் பற்றி தெரிந்திருந்தாலும், அதில் ஆர்வமில்லாமலும், ஒழுக்கமில்லாமலும் வாழும் மக்களிடத்தில் இஸ்லாம் மற்றும் மறுமைவாழ்க்கை பற்றிய ஆர்வத்தை முதலில் ஊட்டவேண்டும். அதன் மதிப்பை புரியவைக்கவேண்டும். புதியபுதிய தலைப்புகள் இவர்களுக்கு தேவைப்படாது. ¢ இஸ்லாத்தின் மீது அதிக ஆர்வமும் உண்டு, தன்னால் முடிந்தவரை அதை பின்பற்றும் மக்களாகவும் இருப்பார்கள், ஆனால் மத்ஹபில் மூழ்கிக்கிடப்பார்கள். தப்லீக்கை மெய்ச்சிக்கொண்டு, அதன் விஷக்கருத்துக்களை இஸ்லாம் என்று எண்ணிக்கொண்டு மக்களிடம் பரப்பிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கும் புதியபுதிய தலைப்புகள் தேவையில்லை. மத்ஹப், தப்லீக்கின் உண்மை முகத்தை வெளிக்காட்டி, இஸ்லாத்தின் தூய வடிவத்தை புரியவைக்கவேண்டும். கொள்கை ரீதியாக மக்களை பிரித்து விளங்கியது போல, வயது ரீதியாகவும் ஆடியன்ஸ் வித்தியாசப்படுகிறார்கள். பெண்கள் பயானில் பேசும் அதே செய்தியை, மாணவர்களிடத்தில் பேசமுடியாது. மாணவர்களிடத்தில் பேசவேண்டிய செய்தியை வயதானவர்களிடத்தில் பேசமுடியாது. உதாரணமாக, ¢ வயதானவர்களை பொறுத்த வரையில், அவர்கள், எதுகை மோனைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பிக்ஹு சட்டங்களை விளக்குவதையும், புள்ளிவிபரங்கள் சொல்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆதாரங்களுக்கும் அதிகமுக்கியத்துவம் தருவதில்லை. (ஆதாரங்களை விரும்பும் பண்பு முதியவர்களுக்கு குறைவாக இருப்பதால் தான், குர்ஆன்-ஹதீஸ் கொள்கைக்கு இளைஞர்கள் வரும் அளவிற்கு முதியவர்கள் வருவதில்லை) வயதானவர்கள், நடைமுறை கருத்துக்களை எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள், மக்களின் அறியாமை போன்றவற்றை பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். உதாரணமாக, ”பெற்றோர்கள்,  தான் உண்ணாமல், தூங்காமல் பிள்ளையை வளர்கிறார்கள். பிள்ளைகள், பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு நண்பர்களை மதிக்கிறார்கள்” என்பது போன்ற உறவுமுறை, குடும்ப, சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதை அதிகம் விரும்புவார்கள். ¢ நடுத்தரவயது மற்றும் குடும்ப பெண்களை பொறுத்தவரையில், கப்ரு வாழ்க்கை, மறுமையின் நிகழ்வுகள், குற்றங்களுக்குறிய தண்டனைகள், பற்றி பேசுவதை அதிகம் விரும்புவார்கள். மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகாமல், சற்று விரிவாக, பயமுறுத்தும் விதமாக, உலக உதாரணங்களோடு பிண்ணிப்பிணைந்த வகையில் சொல்லவேண்டும். அதேபோல, நபிமார்கள், சஹாபாக்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள், குறைவான அளவில் அறிவியல் செய்திகள், இதுவரை அறியாமல் இருந்த சட்டங்கள், குடும்ப உறவுகள், அவர்களின் உரிமைகள், கடமைகளை பற்றி பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கலீஃபாக்களின் வரலாறு, நாட்டின் வரலாறுகள், அரசியல் செய்திகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள். பிக்ஹு சட்டங்களை நுணுக்கமாக அனுகி விளக்குவதையும் விரும்பமாட்டார்கள். பெண்களில் 80 சதவீதம் பேருக்கு மத்ஹபு என்றால் என்வென்றே தெரியாது. எனவே அதைப்பற்றி பேசி குழப்பவேண்டிய அவசியம் இல்லை. தொழுகை, சொர்க்க, நரகம், குடும்ப வாழ்க்கையை பற்றிய அறிவுரைகளை எத்தனை தடவை சொன்னாலும் சலிக்காமல் கேட்பார்கள். ¢ சிறுவர்களை பொறுத்த வரையில், இவர்களிடம் பேசும் முறையே வித்தியாசமானது. பெரியவர்களிடத்தில் பேசுவது போன்று ”மனிதகுலம் சந்திக்கும் மொழி, இன, பொருளாதார பிரச்சனைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வே இணையில்லா தீர்வு” என்பது போன்று சீரியஸாக பேசமுடியாது. அவர்களின் உலகமாக இருக்கும், பள்ளிக்கூடம், நண்பர்கள், பெற்றோர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுயைாக பேசி இஸ்லாத்தின் அடிப்படைகளை புரியவைக்கவேண்டும். சிறுவர்களிடத்தில் அதிக அளவு கதைகளை (வரலாறுகளை) பயன்படுத்துங்கள். அதன் மூலம் போதனை செய்வது இவர்களுக்கு அதிக பயனிக்கும். சொர்க்க, நரகத்தைப் பற்றி பேசுவதை விரும்பி கேட்பார்கள். ஒருபக்க உரையாக இல்லாமல், அவர்களிடம் எதையாவது கேட்டுகேட்டு, அதிக ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனுடன் போதனை செய்வது நல்லது. ¢ இளவயது மக்களை பொறுத்த வரையில், அவர்கள் சவால்விடும் பேச்சுக்கள், புதுமொழிகள், நகைச்சுவை, புதுமையான செய்திகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவார்கள். மேலும், தான் எதிர்க்கும் கொள்கைகளை பற்றி விமர்சனம் செய்வதை, இஸ்லாத்தை உண்மைப்படுத்தும், நவீன அறிவியல் உண்மைகளை பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த கருத்தையும் அறிவியல் ரீதியாக அணுகவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கடவுள் இல்லை என்று சொல்வதை, பகுத்தறிவு என்றும், ஸ்டைல் என்றும் கருதும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அறிவியல் ரீதியாக இஸ்லாத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகளை சொல்லிவிட்டு, பிறகு மறுமையை பற்றிய அச்சத்தை ஊட்டவேண்டும். நபி(ஸல்) கூறிய முன்னறிவிப்புகளையும், அதில் நிறைவேறியவற்றையும் பேசவேண்டும். அவர்களிடம் உள்ள (பகுத்தறிவாதிகளின்) அறியாமையையும், விதண்டாவாதத்திற்கான பதில்களையும் சொல்லவேண்டும். குறிப்பாக இளைய சமுதாயம் சிக்கித்தவிக்கும் தீமைகளிலிருந்து விடுபடுவதற்குரிய வழிமுறைகளையும் சொல்லித்தரவேண்டும். இதன் மூலம் ஆற்றல்மிகு இளைஞர் படையை இஸ்லாத்திற்காக தயார் செய்யமுடியும். கவனம் : ”இப்படி, இப்படியெல்லாம் நூதன வழிகளில் தீமை நடக்கிறது. நீங்கள் அப்படி செய்யாதீர்கள்” என்பது போன்ற அறிவுரைகளை செய்யும் போது, கவனமாக இருங்கள். தீமை செய்வதற்குரிய வழிமுறைகளை நாமே கற்றுக்கொடுத்து விடக்கூடாது. உதாரணமாக, ”ஜவுளிக்கடையில் துணியை திருடுவதற்கு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இன்றைக்கு கஞ்சா கிடைப்பதெல்லாம் மிகவும் எளிதாகிவிட்டது, அதுக்கு ஒரு மேசேஸ் அனுப்பினால் போதும் வீட்டிற்கே புத்தகவடிவில் பார்சல் வந்துவிடும். நாம் இதுபோன்று செய்துவிடக்கூடாது(?)” என்பது போன்று பேசிவிட்டு சென்றால், மனிதன் நன்றாக இருக்கும் போது பிரச்சனை இல்லை. தீய எண்ணங்கள் தலைதூக்கும் நேரத்தில், உங்களின் பேச்சு அவருக்கு ஒரு யோசனையை ஏற்படுத்தலாம். எனவே தீமைகளை சுட்டிக்காட்டும் போது, அதிக வார்த்தை கவனத்தோடு பேசுங்கள். ¢ மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளிகளின் சபைகள். உலகரீதியாக அறிவாளிகளாக கருதப்படும் இதுபோன்ற மக்களிடத்தில் பேசும் போது, வழவழா பேச்சை விரும்பமாட்டார்கள், எனவே லோக்கல் பாஷையை குறைத்துக்கொள்ளுங்கள். இவர்களிடத்தில் குடும்ப ரீதியான சிக்கல்களுக்கு இஸ்லாம் தரும் தீர்வை சொல்வதாக இருந்தாலும், நறுக்கென்று பாயிண்ட் பாயிண்டாக பேசவேண்டும் என்று விரும்புவார்கள். பிரச்சனைகளுக்கு நமது மார்க்கநிலைப்பாடு மட்டுமல்லாமல் உலகரீதியாகவும் ஆதாரங்கள் முன்வைக்கப்படுவதை விரும்புவார்கள். செய்தித்தாள்கள், இணையதளம், நீதிமன்ற தீர்ப்புகள், முன்சென்ற வரலாறுகள், ஆய்வறிக்கைகள் போன்றவைகளை எதிர்பார்ப்பார்கள். அதனால் தான், இஸ்லாம் இனியமார்க்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அறிஞர்கள் பதில் சொல்லும் போது, வெறும் கருத்துக்களை மட்டும் சொல்வதில்லை. இதுபோன்ற ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதை பார்க்கலாம். இந்த ஆதாரங்கள், சாதாரண பெண்கள் பயானிலோ, முதியவர்கள் பயானிலோ தேவைப்படாது. வயதானவர்களிடத்தில், நீங்கள் அடுக்கடுக்காக ஆதாரங்களை சொன்னாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். ”என்னத்த. எதையெதையோ பேசுறாரு. எப்படி வாழனும். கப்ருல என்ன நடக்கும். மறுமையில எப்படி இருப்போம்-னு சொல்லமாட்டேங்குறாரு” என சலிப்போடு, பேசுவார்கள். எனவே சபையறிந்து பேசுங்கள். பயான் உங்களுக்கு அல்ல. கேட்கும் மக்களுக்கு என புரிந்துகொள்ளுங்கள். v ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள மனோரீதியான வேறுபாடுகளை தெரிந்துகொண்டால் அதற்கு தகுந்தார்போல நாம் பேசும் செய்திகளை அமைத்துக் கொள்ளமுடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிந்தனையிலும், மூளையிலும் அதன் அளவிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆண்கள் தேடுபவர்களாகவும், பெண்கள் திரட்டுபவர்களாகவும் இருக்கின்றனர் என்று டாக்டர் எட்வர்ட் காஃபி (அமெரிக்காவின் வேனே மருத்துவ பல்கலைகழக நரம்பியல் பேராசிரியர்) கூறுகிறார். இதுதவிர, பேச்சு, மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆண்களை விடபெண்கள் அதிக அறிவுடையவர்கள், பேசிக்கொண்டே இருப்பதற்கு சலிப்படையாதவர்கள். பெண்கள் மூளையின் ஆழமான லிம்பிக்(DeepLimibicBrain) அமைப்பு காரணமாக, அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், பிறர் மீது அக்கறை காட்டுபவர்கள். (Body language) உடல்மொழியை ஆண்களை விட நன்றாக புரிந்துகொள்கின்றனர். ஆண்கள் ஒரு காரியத்தை காரணத்தோடு, (Logical thinking) தர்க்க ரீதியில் அனுகுகின்றனர். எனவே சொல்லும் செய்திகளுக்குரிய ஆதாரத்தை எதிர்பார்ப்பார்கள். பெண்கள் எதனையும் உணர்வுப்பூர்வமாக அனுகுகின்றனர். ஆதாரங்களை அதிகமாக எதிர்பார்ப்பதில்லை. இது பொதுவான இயற்கை குணம். வளர்ப்பு முறை, வாழ்க்கை முறையினால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.  (Source: article of Amber Hensley, MasterofHealthcare) v ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன்.. ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனுடன் ஒரு பாயன் இருந்தால் கண்டிப்பாக அது நல்லது தான். நாம் செய்யும் பயான் ஒருபக்க கருத்தாக இல்லாமல், மக்களோடு உரையாடி மக்களின் கவனத்தை நம்பக்கம் திருப்பி, நம் கருத்தை தெரிவிப்பதே ஆடியன்ஸ் இன்ட்ராக்ஸன் எனப்படும். நபி(ஸல்) அவர்களின், பெரும்பாலான உபதேசங்களில் ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனை பார்க்கமுடியும். ”திவாலாகிப்போவனை தெரியுமா?”, ”மனிதர்களுக்கு அல்லாஹ் செய்யவேண்டிய கடமை என்ன தெரியுமா?” என்பதுபோல எதாவது கேட்டுகேட்டு உபதேசம் செய்வார்கள். நம்முடைய பயான்களிலும், இந்த முறையை செயல்படுத்தலாம். ஜும்மா அல்லாத உரைகளில், ஒரு தலைப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அது தொடர்பான எதாவது கேள்வியை, முன்னால் அமர்ந்திருக்கும் மக்களிடம் கேட்டு, பின்னர் தொடர்ந்து பேசுவது. உதாரணமாக) பித்அத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, ”இந்த பகுதியில பூரியான் பாத்தியா இருக்கா?”, ”கத்னா செய்தவங்கள கழுதையில கூட்டிகிட்டு போற பழக்கம் இருக்கா?” என்பது போன்று எதாவது கேட்டு மக்களை பதில் சொல்லவைத்து, பிறகு தொடர்ந்து பேசுவது. இவ்வாறு செய்வதன் மூலம், பயான் கேட்கும் மக்களை, அந்த பயானில் ஈடுபடுத்த முடியும். அதுபோல, நரகத்தின் கடுமையை பற்றி பேசும் போது, ”இதில் ஒருவராக நாம் ஆகிவிடக்கூடாது என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்றோ, சுவனத்தின் இன்பங்களை பற்றி பேசும் போது, ”அந்த உயர்ந்த சொர்க்கத்துல இங்கு உள்ள அனைவரும் நுழையனும்” என்பது போன்றோ, முன்னால் அமர்ந்திருக்கும் மக்களை தொடர்புபடுத்தி பேசுவதும் மக்களை அந்த உரையோடு ஒன்றிணையச்செய்யும். இவைவெல்லாம் ரசிக்கத்தகுந்த பேச்சுக்கள். நினைவில் வையுங்கள். Ì இம்சையை கொடுக்காதீர்கள். ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன் என்பது அளவோடு இருக்கவேண்டும். கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கக்கூடாது. அதுபோல, ”இப்ப எல்லாரும் குர்ஆனை எடுங்க. நான் சொல்ற இந்த வசனம் குர்ஆன்-ல இருக்கானு பாருங்க” என்று இம்சை தரக்கூடாது. ”காலைல பஜ்ர் தொழுகிறவங்கல்லொம் கைதூக்குங்க. தினமும் குர்ஆன் ஓதுறவங்கெல்லாம் தலையை ஆட்டுங்க. எல்லாரும் நேரா உக்காருங்க. சுவத்துல சாயாதிங்க” என்பது போல இம்சை தரும் செயல்பாடுகளை ஒருபோதும் செய்யாதீர்கள். Ì மக்கள் தான் மாடுகள் அல்ல. சமீபத்தில் ஒரு உரையை கேட்டேன். உரை நிகழ்த்துபவர் ”என்ன புரியுதா? இல்ல. தலையை மட்டும் ஆட்டிகிட்டு இருக்கிங்களா?” என்று இடையிடையே கேட்டுக்கொண்டே இருக்கிறார். புதியவர்கள் இவ்வாறு செய்வதில்லை. பெரும்பாலும் மெத்தப்படித்த ஒருசிலர் தான் இதுபோன்று நடக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, மக்களிடத்தில் பேசும் போது, அவர்களுக்குறிய கண்ணியத்தை கொடுத்துத்தான் பேசவேண்டும். Ì மக்களை கைதூக்கச் சொல்லலாமா? கைதூக்கச் சொல்வதை பொறுத்தவரையில், பாடம் நடத்துவது போன்ற சபைகளிலும், நிர்வாகிகள் மட்டும் அமர்ந்திருக்கும் சபைகளிலும், தர்பியா போன்ற இடங்களிலும் இவ்வாறு செய்யலாம். அவர்கள் ஒரிரு தடவை கைதூக்குவதை சிரமமாக கருதமாட்டார்கள். முதியவர்கள் உட்பட பலரும் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் சபைகளில் கைதூக்கச்சொல்வதை முடிந்தஅளவு குறைத்துக் கொள்ளுங்கள். அதை சிரமமாக கருதுவார்கள். எப்போதாவது ஒருதடவை, மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், ”சொர்க்கத்துல நபியின் அருகில் இருக்க விரும்புவது யாரு?” என்பது போன்று எல்லோரும் கைதூக்கும் விதத்தில் கைதூக்கச் சொன்னால் கூட பிரச்சனையில்லை. மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் விதத்தில் கைதூக்கச்சொல்வது பொதுமக்கள் சபையில் ஒருபோதும் கூடாது. v மக்களின் முகக்குறிகளை கவனித்து உரை நிகழ்த்துங்கள் மக்களின் முகக்குறிகளை கவனித்து உரை நிகழ்த்த வேண்டியது, ஒரு பிரச்சாளரின் மிகமுக்கிய கடமை. நாம் சொல்லும் செய்தி கவனிக்கும்படி உள்ளதா? சொதப்பலாக உள்ளதா? என்பதை மக்களின் முகத்தை வைத்தே ஓரளவு கணிக்கமுடியும். ஒரிருவர் தூங்குவதைப் பற்றியோ, நம் முகத்தை கவனிக்காமல் தரையை பார்த்துக்கொண்டிருப்பதைப் பற்றியோ பெரிதாக கலைப்படவேண்டாம். ஆனால், 80 சதவீத மக்கள் அப்படி இருந்தால், எதாவது சுவையான சம்பவத்தை சொல்லி மக்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும், முடியாவிட்டால், நம் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்வதுதான் சரி. ஒருசில பேச்சாளர்கள், தூங்கிவழியும் மக்களைப் பார்த்து டென்ஷனாகி எதாவது பேசிவிடுகிறார்கள். இது தவறு. தூங்குபவரைப் பார்க்காதீர்கள், யார் நம்மை உற்று கவனிக்கிறார்களோ, தலையை ஆட்டுகிறார்களோ, அங்கீகார சிரிப்பு சிரிக்கிறார்களோ அவர்களை மட்டும் பாருங்கள். அது தான் உங்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தும். Ì சமீபத்தில் ஒரு பெண்கள் பயானுக்கு சென்றிருந்தேன். ஒருமணி நேர உரை அது. மக்களைப் பார்த்தால், காடுகளுக்கு சென்று மரம் வெட்டிவிட்டு வந்தவர்களைப் போல சோர்வாக அமர்ந்திருந்தார்கள். மக்களின் கவனத்தை ஈர்க்க நகைச்சுவைகளை சொல்லிப்பார்த்தேன். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. நான் மிகப்பெரும் யுக்தியாக பயன்படுத்தும், உணர்வுப்பூர்வமான செய்திகளையும் பயன்படுத்தினேன். எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஒரு மணி நேர உரையை, 25 நிமிடத்தில் முடித்துக்கொண்டு, ”இது கேள்விபதில் நேரம். சந்தேகங்களை கேளுங்கள்” என்று சொன்னதுதான் தாமதம், கேள்விகள் வரிசையாக வந்தன. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு நகைச்சுவை தொனியில் ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனுடன் பதில்களை சொன்னதும், மக்கள் படுஉற்சாகமாகி விட்டார்கள். பயானில் சொல்லாமல் விட்ட செய்திகளை, கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் சொல்லி முடித்து, திருப்தியோடு திரும்பினேன். நினைவிருக்கட்டும். கேள்வி பதில் நிகழ்ச்சி மக்களை உற்சாகப்படுத்தக் கூடியது. தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். Ì உற்சாகப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் கேள்வி கேட்பது:  மக்களின் அருகில் அமர்ந்தும் பேசும் நேரங்களில், சில பேச்சாளர்கள், எதாவது ஒரிரு கேள்விகளை கேட்டு மக்களை உற்சாகப்படுத்திவிட்டு, பிறகு பேச்சை ஆரம்பிப்பார்கள். இதுவும் மக்களை விழிப்படையச் செய்யும் நல்லமுறையாகும். கடமைக்கு வந்து, மைக்கை பிடித்து ரோபோ போல ஒருமணி பேசிவிட்டுச் செல்வதைவிட, இதுபோன்ற புறச்செயல்களின் மூலம் மக்கள் விரும்பும் வகையில் மார்க்கத்தை சொல்வது தான் சிறந்தது. v நேரம் தாண்டாதீர்கள். 8 மணிக்கு பேசி முடிக்கவேண்டும் என்றால், ஒருபோதும் அதற்கு மேல் பேசாதீர்கள், 15 நிமிடம் முன்னதாகவே பேசிமுடித்துவிடவும் செய்யாதீர்கள். 5 நிமிடம், அதிகபட்சம் 10 நிமிடம் முன்னதாக முடிப்பது பிரச்சனையல்ல. ஜும்மா உரை 45 நிமிடங்கள் என்றால், மழை வரும் என்ற நிலை இருந்தாலோ, கடுமையான வெயில் நேரத்தில் மக்கள் அவதிப்படுவது தெரிந்தாலோ, 5 அல்லது 10 நிமிடம் முன்னதாக முடிப்பது தவறல்ல. இதுபோன்ற இன்னல்கள் உள்ள நேரத்தில் கண்டிப்பாக ஒருநிமிடம் கூட அதிகப்படுத்தாதீர்கள். மார்க்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடக் செய்யக்கூடாது. பனூ சலமா கூட்டத்தாருக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்தி மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திய முஆத்(ரலி) அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் ”முஆதே நீர் குழப்பவாதியா?” என்று மூன்று முறை கோபமாக கேட்டார்கள். (புகாரி 6106). எனவே ஒருபோதும் நிர்ணயித்த நேரம் தாண்டாதீர்கள். குறிப்பாக மேடைப்பேச்சில், பிறபேச்சாளர்களின் நேரத்தை திருடிப் பேசுவது ஏற்கமுடியாத செயல். ”ப்ளீஸ். இன்னும் அஞ்சு நிமிசத்துல முடிச்சுடுறேன்” என்று அடம்பிடிப்பது நாகரீகமல்ல. இன்னும் ஜந்து நிமிடம் இருந்தால் தான் செய்திகளை சரியாக இணைத்து முடிக்கமுடியும் என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. கொடுக்கப்பட்ட நேரத்தில் அதை செய்யவேண்டியது ஒரு பேச்சாளரின் பொறுப்பு. Ì பேசுவதற்கு செய்திகள் இல்லையென்றால் என்ன செய்வது? நேரம் தாண்டுவது ஒருபுறம் இருக்க, கொண்டுவந்த குறிப்புகளையெல்லாம் கடகடவென சீக்கிரமே சொல்லி முடித்துவிட்டு, மீதி நேரத்தில் எதைப்பேசுவது என்று தெரியாமல் முழிப்பதும் பலநேரங்களில் நடக்கும் ஒரு பிரச்சனை. அவ்வாறு கடகடவென பேசாமலிருக்க இருக்க என்னசெய்யவேண்டும் என்பதை ”புதியவர்களுக்கான சில அறிவுரைகள்” என்ற தலைப்பில் பார்த்தோம். ஒருவேளை நிர்ணயித்த நேரத்திற்கு வெகுமுன்னதாகவே குறிப்புகள் முடிந்துவிட்டால், அதை சமாளிக்கவும் ஒரு வழி இருக்கிறது. அது தான் ஃபில்அப். (Fill up – நிரப்புதல்). அதாவது மீதி நேரத்திற்கு, பொதுவான அறிவுரைகளை பேசி நிரப்புங்கள். வேறு வழியில்லை. அதே சமயம், நீங்கள் ஓட்டுகிறீர்கள் என்று மக்கள் வெறுப்படையும் வகையில் பேசிவிடாதீர்கள். அப்படி பேசுவதற்கு பதில், நீங்கள் முன்னதாகவே முடித்துவிடலாம். இதுவரை பேசிய செய்திகளுக்காவது மதிப்பிருக்கும். எனவே ஃபில்அப் செய்வதற்கு கீழ்காணும் அறிவுரைகளை மனதில் வைய்யுங்கள். தர்மம், அமல்களில் கவனம், இறையச்சம், சஹாபிகள் வரலாறு, நாட்டு நடப்புகள் போன்ற இருபது, முப்பது செய்திகளை நினைவில் வைத்து, அவற்றை பயன்படுத்துங்கள். அவற்றை பயன்படுத்தும் போது, முன்னர் பேசிய தலைப்போடு தொடர்புபடுத்தி, தொடர்புபடுத்தி பேசுங்கள். இதுதவிர, நாட்டு நடப்பை பற்றி பேசினாலே பத்து நிமிடம் தாராளமாக கடந்துவிடும். நினைவில் வைய்யுங்கள். அந்த மூன்று நபர்கள், நான்கு நபர்கள், என்ற ரீதியில் அமைந்த பொதுவான ஹதீஸ்களை நினைவில் வைத்து, இது போன்ற நேரத்தில் பயன்படுத்தினால், அரைமணி நேரம் என்ன, 2 மணி நேரத்திற்கு கூட பேசலாம். ஏனென்றால் மூன்று நபர் ஹதீஸில் வரும் மூன்று நபர்களையும் விவரிக்க அதிக நேரம் தேவைப்படும். Ì  ஃபில்அப் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டால் எப்படி பேசவேண்டும் என்பதைத்தான் முன்னர் குறிப்பிட்டோம். எனினும் ஃபில்அப் செய்யும் நிலைஏற்படாத வகையில் பேசுவது தான் சரியானது. தலைப்பிற்கு பொருத்தமான ஹதீஸ்கள், சம்பவங்கள், கருத்துக்களை அதிகப்படியாகவே வைத்துக் கொள்ளவேண்டும். ஒருசில மறந்தாலும், நினைவில் உள்ள மீதியை வைத்து குறிப்பிட்ட நேரம் வரை பேசமுடியும். என்பது அனுபமுள்ளவர்களின் அறிவுரை. பொதுவாகவே, வெறும் நாலு செய்திகளை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு அந்த நான்கை மட்டும் பயன்படுத்தி, குறிப்புகள் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தோடு நிகழ்த்தும் உரையை விட, அதிகமாக அறிந்து வைத்துக்கொண்டு தேவையானதை மட்டும் பேசும் போது, பேச்சு தன்னம்பிக்கை நிறைந்ததாகவும் தடங்களின்றியும், சுவையாகவும் இருக்கும். v விரும்பியதை செயல்படுத்தலாம் பிரச்சாரகர்களுக்கு தங்கள் கடமையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு உள்ளது போல, புதுப்புது திட்டங்களை நிறைவேற்றும் திறனும் அவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் மக்களிடத்தில் நம்மால் கொண்டு செல்லமுடியும். இறைவன் நாடினால் அதை செயல்படுத்தவும் முடியும். உதாரணமாக, ஒரு ஊரில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம் செயல்படுத்த வேண்டுமெனில், ஒரு பிரச்சாரகர் நினைத்தால், எவ்வித சிரமமுமின்றி இதனை தான் செய்யும் பிரச்சாரத்தின் மூலமே வழியுறுத்தி செயல்படுத்த முடியும். இரத்ததான முகம் நடத்தவேண்டுமானாலும் சரி, பள்ளிக்கு நிதி திரட்ட வேண்டுமானாலும் சரி, சிறுவர் மதரஸா ஆரம்பிக்கவேண்டுமானாலும் சரி, பெண்களை பள்ளிக்கு வரவைப்பதாக இருந்தாலும் சரி இப்படி எந்த புராஜெக்ட்டையும் ஒரு பிரச்சாரகர் நினைத்தால், தனது பேச்சின் மூலம் அதன் நன்மைகளை வழியுறுத்தி, இறைவன் நாடினால் அதை செயல்படுத்தமுடியும். இந்த வாரம் ஜும்மாவில் அதனை வழியுறுத்தி பேசிவிட்டு வந்தால், அடுத்த வாரமே அந்த திட்டத்தை துவக்கிவிட்டு, அதனை ஆரம்பித்து வைக்க உங்களை அழைப்பார்கள். இப்படி எத்தனையோ இடங்களில் நடந்துள்ளதை அனைவரும் அறிவோம். எனவே உங்களது நாவன்மையை பயன்படுத்தி இதுபோன்ற நன்மைகளையும் அவ்வப்போது செய்யுங்கள். உங்கள் வாழ்கையின் நோக்கம் என்ன? : ”மறுமையின் சேமிப்பிற்காக, எனது மரணத்திற்கு முன்னதாகவே எதையாவது சாதிக்கவேண்டும்!”, என்பதை ஒரு லட்சியமாகவே ஆக்குங்கள். உதாரணமாக, ”ஹதீஸ் கிதாபுகளையோ, தப்ஸீர்களையோ தமிழில் மொழி பெயர்த்தல், ஹதீஸ்களை தரம்பிரித்தல், பத்தாயிரம் பேருக்கு குர்ஆனை கொடுத்தல், இஸ்லாமிய சட்டதிட்டங்களை தொகுத்தல், சாஃப்ட்வேராக மாற்றி மக்களுக்கு தருதல், இஸ்லாம் பற்றிய புத்தகங்களை எழுதுதல், ஒரே ஒரு பள்ளியையாவது உருவாக்குதல், பைத்துல்மாலை உருவாக்குதல் என இன்ஷா அல்லாஹ் எதையாவது செய்துவிட்டுத்தான் மரணிப்பேன்,” என்று உறுதிஎடுங்கள். இதை சாதிப்பது பிரச்சாரகருக்கு எளிதானது. v அல்ஹம்துலில்லாஹ் பேசிமுடித்த பல நேரங்களில், ”இன்று உருப்படியான செய்திகளை சொல்லியிருக்கிறோம். திருப்தியாக இருக்கிறது” என்று நமக்கே தெரியும். அதுபோன்ற நேரங்களிலும் சரி, ”சூப்பரா சொல்லிபுட்டிங்க” என்று பிறர் பாராட்டும் போதும் சரி, ஒருபோதும் மமதைக்கு இடம் தந்துவிடாதீர்கள். நாம் பிரச்சாரம் செய்வது, இதுபோன்ற பாராட்டுகளுக்காக அல்ல. இந்த அற்பமான செல்லாகாசுக்கு ஆசைப்பட்டு, விலைமதிப்பற்ற இறைவனின் சுவனத்தை இழந்துவிடக்கூடாது. மறுமைநாளில் ஒரு ஆலிம் கொண்டுவரப்பட்டு, இவ்வுலகில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு என்ன கைமாறு செய்தீர்கள் என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ”இறைவா! உனக்காக குர்ஆனை ஓதினேன். நானும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுத்தேன்” என்பார். அதற்கு இறைவன், ”நீ பொய் சொல்கிறாய். “நீ ஒரு அறிஞர், அழகாக குர்ஆனை ஓதுபவர்“ என்று மக்கள் சொல்வதற்காகவே செயல்பட்டாய். அது பூமியிலேயே சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறி, அல்லாஹ் அவரை நரகில் முகம்குப்புற தள்ளுவான். (முஸ்லிம் 3865) எனவே கவனமாக இருங்கள். பிறர் பாராட்டும் போது, அந்த புகழுக்கு உரியவன், இறைவன் தான் என்பதை, பிரகடனப்படுத்தும் விதமாக, அல்ஹம்துலில்லாஹ் என்று உளப்பூர்வமாக கூறுங்கள். அதுபோல, நாடறிந்த பிரச்சாரகரை நேசிக்கும் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பார்கள். நாமும், அதுபோன்றவரும் அருகருகே அமர்ந்திருக்கும் போது, அவருக்கு மட்டும் மக்கள் அதிக கண்ணியம் தருவது நம் உள்ளத்தில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தலாம். பலவருடங்கள் மக்களோடு பழகியவர் என்பதால் மக்கள் அதிகமாக அவரை நேசிக்கிறார்கள் அவ்வளவுதான். மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் ஒருவர் சிறந்தவர் ஆகிவிடமுடியாது. இறையச்சம் அதிகம் உள்ளவரே இறைவனிடத்தில் சிறந்தவர் என்ற ஹதீஸை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால், உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். எனவே, ரப்பி அஊதுபிக மின் ஹமஸாதிஷ் ஷயாத்தீன். (23:97) அல்லது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (புகாரி 3303) என்ற துஆவைக் கொண்டு ஷைத்தானை விரட்டிஅடியுங்கள். இந்த இடத்தில், நிர்வாகிகளும் ஒரு விஷயத்தை மனதில் நிறுத்துவது அவசியம். பிரச்சாரகரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவரை பாராட்டுவது தவறல்ல, ஆனால் பாராட்டு புகழ்ச்சியாக மாறிவிடக்கூடாது. ”பின்னி எடுத்துட்டிங்க. ஒரு மணிநேரம் போனதே தெரியல. இனி உங்கள விட்டா வேற தாயி கிடையாது” என்று எல்லைமீறி பேசும்போது, பலஹீனமான உள்ளத்தில் சிலநேரம் பெருமை ஏற்பட்டுவிடலாம். எனவே, பாராட்ட வேண்டுமானால், ”நல்ல பயனுள்ள கருத்தை சொன்னீங்க. இந்த ஹதீஸ் இதுவரை கேள்விப்படல. புதுப்புது செய்திகளை சொன்னீங்க” என்று அளவோடு நிறுத்திக்கொள்ளுங்கள். Ì பேச்சாளர்கள் பயானைக்குறித்து மக்களிடமோ, நண்பர்களிடமோ கருத்துக் கேட்க விரும்பினால், ”சூப்பரா இருந்துச்சா? நச்சுனு இருந்துச்சா?” என்று எதையாவது கேட்காமல், கீழ்காணும் வகையில் உருப்படியான கேள்விகளை கேளுங்கள்.

  1. சொன்னது புரிந்ததா?                          - Easy to understand?
  2. பயனுள்ளதாக இருந்ததா?                     - Was it useful?
  3. போதுமான தகவல்கள் இருந்ததா?            - Complete with enough details?
  4. கவரும் வகையில் இருந்ததா?                - Was it attractive?

மேற்கண்ட கேள்விகள், உலகின் முன்னணி இணையதளங்கள் தங்களது ஆக்கங்கள் குறித்தும், பிரபல எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களைக் குறித்தும் கருத்துகேட்கும்போது, கேட்கும் கேள்விகள். மேற்குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்குரிய பதிலில் இருந்தே, மக்களிடம் கேட்டு சரிசெய்ய வேண்டிய விஷயங்களை, சரிசெய்துகொள்ளமுடியும். Ì ஒழுக்க விஷயங்கள்: மக்கள் அருவறுக்கும் செயல்களை செய்துகொண்டு ஒருவர் பிரச்சாரகராக இருக்கக்கூடாது. மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே ”இதையெல்லாம் சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று பிரச்சாரகரைப் பார்த்து கேட்பதை விட இழிநிலை வேறெதுவுமில்லை. மற்ற மக்களைப்போல பிரச்சாரகரும் தவறு செய்யக்கூடியவர் தான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது, சாதாரணமாக எடுப்பவர்கள், பிரச்சாரகர்கள் செய்யும் போது, அப்படி எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவருடைய ஒட்டுமொத்த பிரச்சாரமும் நம்பகமற்றதாகிவிடும். அதைவிட முக்கியமாக, அவர் சார்ந்திருக்கும் ஜமாஅத்திற்கும் அவரால் கெட்டபெயர் உருவாகும். எனவே கவனமாக இருங்கள். v இன்னாலில்லாஹ். நாம், சரியாக தயாராகாமல் போய், அதனால் சரியாக பேசாவிட்டால் அது கண்டிப்பாக நம்முடைய தவறு. அதற்காக கவலைப்பட்டே ஆகவேண்டும். வரும் காலங்களில், திருத்திக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில், மேற்குறிப்பிட்ட எல்லா யுக்திகளையும் நினைவில் வைத்து, ஏராளமான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, பேசும் சில நேரங்களில், நம் உரை சரியாக அமையாமல் போய்விடும். அதற்கு பதட்டமோ, அந்த நேரத்தில் உள்ள மனநிலையோ, தலைவலியோ, தூக்கமின்மையோ, வேறு காரணமோ இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ”சே..இப்டி ஆயிடுச்சே” என்று புலம்பிக்கொண்டே இருக்காமல், பாரத்தை இறைவனிடத்தில் ஒப்படைத்துவிடுங்கள்.  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். Ì சங்கடம் ஏற்படும் போது ஒருவர், ”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா” என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். அறிவிப்பவர் : உம்மு-ஸலமா (முஸ்லிம் 1525) இதன் பொருள் : ”நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். இறைவா! எனக்கு ஏற்பட்ட துன்பத்தில் சிறந்ததை பகரமாக தருவாயாக!” - என்ற துஆவை இழப்பு ஏற்பட்ட எல்லா நேரத்திலும் ஓதிக்கொள்ளுங்கள். பயானுக்கு தயாராகுதல் இந்த நூலின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம். இப்போது உங்களை ஒரு பயான் செய்ய அழைத்திருக்கிறார்கள். ஒரு சிறந்த உரைக்கு தேவையான திட்டமிடுதல், குறிப்புகளை எடுத்தல் மற்றும் பயிற்சி எடுத்தல் பற்றி பார்ப்போம். பயானை ஜந்து பகுதிகளாக பிரிக்கலாம்.

Motive      Data collection     Plan      Practice      Delivery

  1. விசாரிப்பு
  2. குறிப்புகளை சேகரித்தல்
  3. திட்டமிடுதல்
  4. மனப்பாடம் செய்து, பயிற்சி எடுத்தல்
  5. பாடிலாங்குவேஜ், ஏற்றஇறங்கங்களுடன் வெளிப்படுத்துதல்
  1. விசாரிப்பு

பேசுவதற்கு பயான் தலைப்பை நிர்வாகிகள் உங்களிடத்தில் தெரிவிக்கும்போது, கீழ்காணும் விஷயங்களை கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்.

  1. இந்த தலைப்பின் கீழ் என்னென்ன செய்திகளை பேசவேண்டும்?
  2. அந்த இடத்தில் உள்ள மக்கள் எந்த கொள்கையில் உள்ளவர்கள்?
  3. எதைப்பற்றி, யாரைப்பற்றி பேசக்கூடாது?
  4. எவ்வளவு நேரம்? கேள்வி பதில் உள்ளதா?
  5. அரங்கமா? மேடையா? மைக் உள்ளதா?

மேற்கண்ட கேள்விகளில் முதல் கேள்வி, தலைப்பின் கீழ் என்னென்ன பேசவேண்டும்? என்பது. அதாவது, மூடநம்பிக்கை என்ற தலைப்பின் கீழ், நூற்றுக்கணக்காக மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசமுடியும். எனவே, அந்த பகுதி மக்களிடத்தில் என்ன மூடநம்பிக்கை இருக்கிறதோ அதைப்பற்றி பேசி, அதன் உண்மை நிலையை விளக்குவதற்கு இந்த விசாரிப்பு மிகவும் அவசியம். இதனை செய்யாவிட்டால், நீங்கள் பேசியது சுவாரஸ்யமாக இருந்தாலும், அந்த பகுதி மக்களுக்கு பயன்படும் செய்திகளாக இருக்காது. இதில் மற்றுமொரு நன்மையும் இருக்கிறது, மக்களுக்கு எது தேவையோ, எந்த பிரச்சனையை தினமும் சந்திக்கிறார்களோ அதைப்பற்றி பேசும்போது தான், அதிக கவனம் செலுத்தி கேட்பார்கள். எனவே, “தொழுகை, நோன்பு” போன்ற விதிவிலக்கான ஒருசில தலைப்புகளைத் தவிர மற்ற எதற்கும் சுருக்கமாகவாவது விசாரித்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, மக்கள் எந்த கொள்கையில் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல பேசுவது. இதைப் பற்றி, ”ஆடியன்ஸை தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் முன்னரே விளக்கியுள்ளோம். மூன்றாவதாக, யாரைப்பற்றி பேசக்கூடாது என்பது. இது மிகவும் முக்கியமானது. ஒரு பகுதியில் ஏதாவது பிரச்சனை நடந்துகொண்டிருக்கும். காவல்துறை அது சம்பந்தமாக பேசவேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். தேவையில்லாமல் அதைப் பேசி, பிரச்சனையை அதிகமாக்கிவிடக்கூடாது. அடுத்ததாக, எவ்வளவு நேரம் பேசவேண்டும், கேள்விபதில் உள்ளதா? என்பது. பேசவேண்டிய செய்திகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கு இவை இரண்டும் முக்கியமானவை. இறுதியானது, பேசும் இடம், மக்கள் கூட்டம் மற்றும் மைக் பற்றியது. தற்போது பெரும்பாலான இடங்களில் மைக் இருக்கிறது. ஒரு வேளை இல்லாதிருந்தால், ஆக்ரோஷமான பேச்சை வெளிப்படுத்துவது சிரமமாக இருக்கும். பேசும் ஸ்டைலை தீர்மானிப்பதற்கு இவை தேவையானது. இதுதவிர, ”இந்த ஊரில் பேய் பீதி இருக்கிறது, ஜோதிடத்தை நம்புகிறார்கள். மந்திரவாதி இருக்கிறார். அதைப்பற்றி பேசுங்கள்” என்பது போல எதாவது சொல்வார்கள். இதுபோன்று, தலைப்பைத் தாண்டி பேசவேண்டியது ஏதேனும் இருந்தால், எப்படியாவது ஒரு தொடர்பை உருவாக்கி நுழைத்துப் பேசிவிடவேண்டும். இறுதிநேரத்தில் இதுபோன்று சொன்னால், கோர்வை இல்லாமல் போகலாம். எனினும் இது விதிவிலக்கு. மக்களுக்காகத்தான் செய்திகளேயன்றி, நாம் குறிப்பெடுத்த செய்திகளுக்காக மக்கள் அல்ல. தலைப்பு தரப்படாத ஜும்மாவிலும், ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக நடத்தப்படும் பெண்கள் பயானிலும், கடந்த மூன்று வாரங்கள் என்ன தலைப்பில் பேசப்பட்டது என்பதை தெரிந்து அந்த தலைப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். v செய்திகளை சேகரித்தல் - குறிப்புகளை எடுப்பதற்கு சில வழிமுறைகள்.

  1. குர்ஆன், ஹதீஸ், தப்ஸீர், ஆதராப்பூர்வமான நூல்களில், தேவையான தலைப்பின் கீழ் உள்ள செய்திகளை முதலில் குறித்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு, இதே தலைப்பில் பிற அறிஞர்கள் பேசிய வீடியோக்களை ஓடவிட்டு, ஓரிரு குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். மிகமிக முக்கியமாக, அவர்களின் தத்துவங்களை குறித்துக்கொள்ளுங்கள். தத்துவங்கள் என்றால் என்ன என்று முன்னரே விளக்கப்பட்டுள்ளது.
  3. பிறகு, இணையதளத்தில் அந்த தலைப்பை டைப்செய்து, வரும் கட்டுரைகளில் ஆதாரப்பூர்வமானதா என சரிபார்த்து, அதிலிருந்தும் குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். (இணையதளத்தில் தேடும் முறை இந்த நூலின் இறுதியில் உள்ளது)
  4. பிறகு, நம் கருத்துக்கு மாற்றுக்கருத்துடையவர்களின் கருத்துக்களையும், அவர்களின் வாதங்களையும் குறித்துக்கொண்டு, அதற்கு தேவையான மறுப்புகளையும் குறித்துக்கொள்ளுங்கள்.
  5. பிறகு, அந்த தலைப்பை ஒட்டிய கேள்விபதில் பகுதியை பார்வையிட்டு. அதில் தேவையானதை குறித்துக்கொள்ளுங்கள்.
  6. பிறகு, இன்றைய, நேற்றைய நாட்டுநடப்புகளை, செய்திகளை பார்வையிடுங்கள். தலைப்பிற்கு சம்பந்தமான செய்திகளை சேகரித்துக்கொள்ளுங்கள்.
  7. பிறகு, இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான செய்திகள் ஒரிரண்டை தேடி எடுத்து குறித்துக்கொள்ளுங்கள்.
  8. பிறகு, உருப்படியான ஆச்சர்யமான, அறிவியல்பூர்வமான வேறு தகவல்கள் ஒரிரண்டு எடுத்துக்கொண்டு, அமருங்கள்.

இஸ்லாமிய சாஃப்ட்வேர்கள் நிறுவப்பட்ட கனினியை வைத்துக்கொள்ளுங்கள். தகவல்களை சேகரிக்கும் பணி மிகவும் எளிதாக இருக்கும். பிரார்த்தனை என்ற தலைப்பிற்காக சேகரிக்கப்பட்ட குறிப்புகளைப் பாருங்கள்.

  w குறிப்புகளை கோர்வையாக்குதல் மற்றும் திட்டமிடுதல் கைநிறைய குறிப்புகள் இருக்கிறது என்று திட்டமிடுதலில் அலட்சியமாக இருக்கக் கூடாது. எந்த செய்தியை எதற்கு பின்னால் சொல்லவேண்டும் என்று கோர்வையாக்கிக் கொள்ளுங்கள். செய்திகளில் கோர்வை இருந்தால், செய்யும் பயானை புரிந்துகொள்வதற்கு குறைந்த மூளைத்திறனே போதுமானது. சரியான வகையில் திட்டமிட்டு குறிப்புகளை சேகரித்து கோர்வையாக்கி, பயிற்சி எடுப்பதற்கு குறைந்தது ஒரு நாளாவது தேவைப்படும். எனவே, பயான் தலைப்பை குறைந்தபட்சம், ஒருநாள் முன்னதாகவே பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு வருடத்திற்கு குறைவாக அனுபவம் உள்ளவர்களை கடைசி நாளில் பயானுக்கு அழைப்பதை நிர்வாகிகள் தவிர்க்கவேண்டும். குறிப்புகளை எடுப்பதற்கும், பயிற்சி எடுப்பதற்கும் தேவையான நேரத்தை கொடுக்காமல், அவர்களது பேச்சு சரியில்லை என்று சொல்வது நியாயமல்ல. பேசும் உரைகளை, இயன்றஅளவு உரைகளை மூன்றாகவோ, நான்காகவோ பிரித்துக் கொண்டால் பேசுவதற்கு எளிதாக இருக்கும். மிகப்பிரபலமான பேச்சாளர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். குறிப்புகளை மூன்றாக நான்காக பிரிப்பதற்கு உள்ள ஒரு எளிய வழி, நீங்கள் பேச எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எதிராக நான்கு கேள்விகளை கேளுங்கள். உதாரணமாக, பிரார்த்தனை என்ன தலைப்பின் மீதான கேள்விகளை பாருங்கள்.

  1. பிரார்த்தனையின் நோக்கம் என்ன?
  2. பிரார்த்தனை எப்படி செய்யவேண்டும்?
  3. பிரார்த்தனை எப்படி செய்யக்கூடாது?
  4. எந்த பிரார்த்தனை ஏற்கப்படும், எது ஏற்கப்படாது?

இது போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு, அதற்குரிய பதில்களை ஒவ்வொரு உபதலைப்பாக பிரிப்பது பிரபலமான பலரும் பின்பற்றும் முறை. இந்த அடிப்படையில் சேகரிப்பட்ட குறிப்புகளை பிரித்ததையும், கோர்வையாக்கப் பட்டதையும் பாருங்கள்.

முன்னரே குறிப்பிட்ட படி குறிப்புகளை கோர்வையாக்கிய பின்னர், எங்கே நகைச்சுவையை நுழைப்பது, எந்த இடத்தில் ஓரிரு உலக சம்பவங்களை நுழைப்பது என்று தீர்மானித்து குறித்துக்கொள்ளுங்கள். இதன் முக்கியத்துவம் முன்னரே சொல்லப்பட்டுள்ளது. Ì அனைத்து கோணங்களையும் அலசுதல்: எந்த தலைப்பை பேசினாலும், அதன் சட்டதிட்டங்ளை சொல்லிவிட்டு அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளையும், முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்தவேண்டும். இதில் கவனம் செலுத்தினால் உங்கள் உரை, தலைப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய உரையாக இருக்கும். தரமான பேச்சாளர் இதில் கவனம் செலுத்துவார். Ì தலைப்பிற்கு அப்பாற்பட்டதை நீக்குதல் (Filtration Process) : குறிப்புகளை சேகரித்த பின்னர், கோர்வையாக்கும் நேரத்தில் எந்தெந்த செய்திகள் தலைப்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று பார்த்து அவற்றை நீக்குங்கள். உங்கள் உரை தெளிவாக இருக்கவேண்டுமெனில் இதை செய்வது அவசியம். Ì கியூ காட்ஸ் (Cue Cards) என்பது என்ன? : கியூகாட்ஸ் என்பது கிட்டத்தட்ட விசிட்கார்டு (விலாச அட்டை) போன்று இருக்கும். ஒரு உரையில் நான்கு உபதலைப்புகள் உள்ளதெனில் நான்கு அட்டைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அட்டையிலும் ஒரு உபதலைப்பின் கீழ் உள்ள செய்திகளின் தலைப்பை மட்டும் பெரிய எழுத்துக்களில் எழுதி, அட்டைகளை வரிசையாக வைத்துக்கொண்டு, அவற்றை பார்த்து உரை நிகழ்த்தலாம். இது பெரும்பெரும் நிறுவனங்களின் இயக்குநர்கள் தங்களது புதுதொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகப்படுத்தி விளக்கும் போது பயன்படுத்தும் முறை. x மனப்பாடம் செய்தல் மற்றும் பயிற்சி எடுத்தல் மனப்பாடம் மற்றும் பயிற்சி எடுத்தல், இரண்டு பிரிவுகளை உடையது.

  1. Explain every note         - ஒவ்வொரு குறிப்பையும் விளக்கி பயிற்சி எடுப்பது.
  2. Memorize Order of notes    – குறிப்புகளின் வரிசையை மனப்பாடம் செய்வது.

முதலில், எழுதிய ஒவ்வொரு குறிப்பையும் (every note) தனித்தனியாகப் பார்த்து, இதனை எப்படி மக்களிடம் விளக்கிப் பேசுவீர்களோ அதே போல, தனிமையில் பேசுங்கள். மறக்காமல் அதே தொனியில், அதே ஏற்றஇறக்கத்தோடு பேசிப்பாருங்கள். இவ்வாறு ஓரிரு தடவை பேசிப்பார்த்தால் போதுமானது. புதியவர்கள் நான்கைந்து தடவை பேசிப்பார்க்கலாம். இரண்டாவதாக, எழுதியுள்ள குறிப்பின் வரிசையை (Order of notes), மனப்பாடம் செய்து, இதற்கு பிறகு இது, இதற்கு பிறகு இது என்று உங்களுக்கு நீங்களே ஒப்புவித்து பாருங்கள். பேப்பரை பார்க்காமல் இரண்டு, மூன்று தடவை சொல்லிப் பார்க்கவும். புதியவர்கள் பத்து தடவையாவது சொல்லிப்பார்க்கவும். இதனையே பயிற்சி என்கிறோம். புதியவர்கள் செய்யும் மிகப்பெரும் தவறு, பயிற்சிக்கு நேரம் ஒதுக்காமல், இறுதிநேரம் வரை குறிப்புகளை சேகரித்துக்கொண்டே இருப்பது தான். இது கூடாது. மனப்பாடம் செய்து பயிற்சி எடுக்காவிட்டால், பயானில் குறிப்புகளை பார்த்துப்பார்த்து தான் பேசமுடியும். குறிப்புகளை பார்த்துப் பேசும் உரையை விட, மனப்பாடம் செய்து, பயிற்சி எடுத்து பேசும் உரை தெளிவாகவும், தடங்களின்றியும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கும். எனவே, மனப்பாடம் மற்றும் பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்துங்கள். பயிற்சி எடுக்கும் நேரத்தில், எந்த செய்தியை ஆக்ரோஷமாகவும், எந்த செய்தியை மென்மையாகவும் சொல்லவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்து அதற்கு தகுந்தார்போல முகபாவனையோடு பேசிபார்க்கவேண்டும். குறிப்புகளை பார்க்காமல் சொல்ல முடிந்தால், முடிந்தது வேலை. மிக அருமையான ஒரு பயானுக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள். y டெலிவரி – வெளிப்படுத்துதல் ஒரு பயானை பல உபதலைப்புகளாக பிரித்திருக்கிறீர்கள் எனில், ஒவ்வொரு உபதலைப்பு முடிந்தபிறகும் இதுவரை சொல்லிய உபதலைப்புகளின் பெயரை மட்டும் ஓரிரு வரிகளில் நினைவுபடுத்துங்கள். அதாவது மேற்கண்ட உரையில் இரண்டு உபதலைப்பை முடித்தபிறகு, ”அப்ப முதல்ல பிரார்த்தனை ஒரு கட்டாயக்கடமை என்பதை பார்த்தோம். இரண்டாவதாக, பிராத்தனை செய்யும் முறையை பார்த்தோம். அடுத்தது பிரார்த்தனையில் செய்யக்கூடாத செயல்கள்…” என்று உரையை தனித்தனியாக பிரித்து காட்டவேண்டும். Ì உரையை ஆரம்பிக்கும் போது கூறவேண்டியவை: நபியவர்கள் உரையை ஆரம்பிக்கும் போது, “”அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டரில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள்.   முஸ்லிம் (1573) குறிப்புகளும் உள்ளன. மனப்பாடமும் ஆகிவிட்டது, இனி பயிற்சி எடுத்தது போல, மக்களிடத்தில் செய்தியை வெளிப்படுத்துவது தான், எஞ்சியிருக்கும் ஒரே வேலை. மறந்துவிடவேண்டாம்! சரியான ஏற்ற இறக்கங்களுடன், தேவையான பாடிலாங்குவேஜுடன் உற்சாகமாக உரை நிகழ்த்துங்கள். உங்கள் உரையின் மூலம் பத்து பேராவது தொழ ஆரம்பிக்கவேண்டும் என்ற பேராவலோடு, அதற்கேற்ப பேசவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு கிளம்பிச் செல்லுங்கள். அல்லாஹ்வுடைய திருப்தி ஒன்றையே இறுதி நோக்கமாகக் கொண்டு, உங்களின் கருத்துக்களால் நன்மையை ஏவி, தீமையை தடுக்க புறப்படுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும். முரண்பட்ட மற்றும் பலவீனமான செய்திகள், அதன் விளக்கங்களுடன்.

மக்களிடம் புழக்கத்தில் உள்ள பலவீனமான ஹதீஸ்கள்.