நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3
நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்
வஹீ எனும் இறைச் செய்தியின் துவக்கம்

(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

அல்குர்ஆன் 96 : 1-5

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.
தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்து வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘ஓதுவீராக!’ என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னைவிட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று கூறினார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்று கூறினேன். உடனே, அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார்.
பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்’ எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறை வசனங்களை அவர் ஓதினார்.
பிறகு அந்த வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்கத் திரும்பி வந்து, கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது.
கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு,) ‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு கதீஜா (ரலி), ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கிறீர்கள். (அதனால் உங்களுக்கு ஒன்றும் தீங்கு நேராது)’ என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வரக்கா இப்னு நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். வரக்கா என்பார் அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் மகனே! உங்களுடைய சகோதரரின் புதல்வரிடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!’ என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள்.
இதைக்கேட்ட ‘வரக்கா’, ‘(நீர் கண்ட) அவர் தாம் மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்மை உம் சமூகத்தார் (உம்முடைய நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்த சமயத்தில் உயிருடன் இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை (நாட்டைவிட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று கேட்க, வரக்கா, ‘ஆம். நீர் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதத்)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரச்சாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன்’ என்று கூறினார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.

நூல்: புகாரி (4953)

இரண்டாவதாக இறங்கிய வசனங்கள்

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!

அல்குர்ஆன் 74:1-5

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் கூறினார்கள்:

நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ், ‘போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை, தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.

நூல்: புகாரி (4925, 4922, 4923)

வஹீயைப் பாதுகாப்பது அல்லாஹ்வின் பொறுப்பு

(நபியே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் 75:16 – 19

திருக்குர்ஆன் 75:16 வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே காணப்படலாயிற்று.
எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75வது அத்தியாயத்திலுள்ள) ‘இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:16, 17) வசனங்களை அருளினான்.
அதாவது, ‘உங்கள் உள்ளத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!’ என்ற (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்’ என்று கூறினான். ‘பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:19) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான்.
(இதன் பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு) வரும்போது தலையைத் தாழ்த்தி (கேட்டுக்) கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

நூல்: புகாரி (4929)

இறைவிருப்பப்படியே வானவர்கள் வருகிறார்கள்

(நபியே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல.

அல்குர்ஆன் 19:64

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதை விட அதிகமாகச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். அப்போதுதான் ‘உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல’ எனும் (19:64) இறைவசனம் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4731)

அபூஜஹ்ல் அரங்கேற்றிய அநியாயம்

அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

அல்குர்ஆன் 96:6-19

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்’’ என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடறியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைகளையும் கண்டேன்” என்று சொன்னான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்” (96:6-19) எனும் வசனங்களை அருளினான்.

நூல்: முஸ்லிம் (5390)

அபூலஹபின் மீது அல்லாஹ்வின் சாபம்

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

அல்குர்ஆன் 111:1-5

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (26:214) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்தனர்.
நபி (ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (மறுமையைக் குறித்து) கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அபூ லஹப், ‘நாளெல்லாம் நீர் நாசமாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினீர்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4770)

நபி இருக்கும் போது வேதனை வராது

(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 8:33 , 34

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழிந்து விடு! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்’ எனும் (08:33,34) வசனங்கள் அருளப்பெற்றன.

நூல்: புகாரி (4648)

ஹுதைபிய்யா உடன்படிக்கை

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (ஏக இறைவனை) மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 60:10

மர்வான் பின் ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது:

சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிய போது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றாயிருந்தது.
இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல் (ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி.
முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை.
அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்’ (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.

நூல்: புகாரி (2711, 2712)

அல்ஃபத்ஹ் (48வது) அத்தியாயம் அருளப்படுதல்

(நபியே!) உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.

அல்குர்ஆன் 48:1-5

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உம்ரா வழிபாட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால்) ஹுதைபியா எனுமிடத்திலேயே பலிப்பிராணியை அறுத்துவிட்டு, அங்கிருந்து (மதீனா நோக்கி) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர்களைக் கவலையும் சோகமும் தழுவியிருந்தன.
இந்நிலையில்தான் (அவர்களுக்கு), “(நபியே!) உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்” என்று தொடங்கி, “இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது” என்பதுவரை (48:1-5) இறைவசனங்கள் அருளப்பெற்றன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஓர் இறைவசனம் அருளப்பெற்றுள்ளது. அது இவ்வுலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் உவப்பானதாகும்“ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3660)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

‘நிச்சயமாக, தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்’ எனும் (48:01) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்’ என்று கூறினேன்.
(அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், ‘(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள். எங்களுக்கு என்ன?’ என்று (இந்த வெற்றியின் பயன் குறித்துக்) கேட்டனர். அப்போது, ‘நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்’ என்னும் (திருக்குர்ஆன் 48:05) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி (4172)

மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 48:24

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் திடீர் தாக்குதல் தொடுப்பதற்காக “தன்ஈம்” மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்” (48:24) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (3696)

கிப்லா மாற்றம்

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
(நபியே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:143, 144

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144 வசனத்தை அருளினான்.)
உடனே, அவர்கள் அஸர் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்து கொண்டிருந்தனர். அவர், ‘அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்’ என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.
கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது ‘அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’ எனும் (2:143) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி (4486)

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:115

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே “நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்’’ எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.

நூல்: முஸ்லிம் (1251)

இறைத்தூதரை இறைவன் கைவிடமாட்டான்

முற்பகல் மீது சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

அல்குர்ஆன் 93:1-3

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.

நூல்: புகாரி (4950)

இறைத்தூதர் முன்னிலையில் குரல்களை உயர்த்தக்கூடாது

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 49:1

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) ‘கஅகாஉ இப்னு மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!’ என்று (யோசனை) கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), ‘உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று’ என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன.
இது தொடர்பாகவே ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’ எனும் (திருக்குர்ஆன் 49:1 வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று.

நூல்: புகாரி (4847)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

அல்குர்ஆன் 49:2

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாயுஉ குலத்தவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ இப்னு மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.
அப்போது அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) அவர்களிடம், ‘எனக்க மாறு செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘தங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று’ என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!’ எனும் (49:2) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி (4845)

இறைத்தூதரிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டல்

நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.

அல்குர்ஆன் 5:101

அனஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும்’ எனும் இந்த (5:101) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி 4621

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் ‘என் ஒட்டகம் எங்கே?’ என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த (5:101) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 4622

கேள்வியும் பதிலும்

(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:85

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரிச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரிச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) ‘இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்’ என்றார். மற்றவர், ‘உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?’ என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் ‘நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக்கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)’ என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) ‘அவரிடம் கேளுங்கள்’ என்றனர்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹைப்) பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என அறிந்துகொண்டேன். எனவே, நான் என்னுடைய இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ எனும் (17:85) இறைவசனத்தைக் கூறினார்கள்.

நூல்: புகாரி (4721)

அன்னையார் மீது அவதூறு

அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.
இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு’’ என்று கூறியிருக்கக் கூடாதா?
இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.
இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.
உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.
இதைக் கேள்விப்பட்டபோது “இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு’’ என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)

அல்குர்ஆன் 24:11-20

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா அவர்களிடம்) ‘நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு’ என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை விட (சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று). நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்’ (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ‘அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே…’ என்று (தொடங்கும் 24:11முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.

நூல்: புகாரி (4690)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு’ எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்’ என்பவனைக் குறிக்கிறது.

நூல்: புகாரி (4749 , 4750)

இறை மன்னிப்பே சிறந்தது

“உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 24:22

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:

அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே.. என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அல்லாஹ் அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் என்பவர் (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ் இந்த (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னார்கள்.

நூல்: புகாரி (4750)

வளர்ப்பு மகன் குறித்த சட்டம்

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்’’ என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்டபோது (விவாகரத்துச் செய்தபோது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33 :37

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘(நபியே!) அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர்’ எனும் இந்த (33:27) வசனம் (நபியவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் நபியவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4787)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், “ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.

ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை (மணந்து கொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம். எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, “ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னை மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பி வைத்துள்ளார்கள்” என்றேன். அதற்கு அவர், “நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார். அப்போது (நபியவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது.

நூல்: முஸ்லிம் (2798)

குறிப்பு: ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்தவர். அவருக்கு நபியவர்கள் தமது அத்தை மகள் ஸைனபை மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற சூழ்நிலையில் அவரை ஸைத் விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துக் கொடுக்கிறான்.

ஒருவர் தனது மனைவியை விவாகரத்துச் செய்தால் இஸ்லாமிய சட்டப்படி அப்பெண்ணை, அந்தக் கணவனின் தந்தை மணக்க முடியாது.

அன்றைய காலத்தில் மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கும் உண்டு என்று நம்பி வந்தனர். இந்த அடிப்படையில் வளர்ப்பு மகன் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின், வளர்ப்புத் தந்தை அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என்று அரபுகள் கருதி வந்தனர்.

இந்த நம்பிக்கையை உடைத்து, வளர்ப்பு மகன் ஒருபோதும் உண்மையான மகனைப் போன்றவர் அல்ல, அவரது மனைவி வளர்ப்புத் தந்தையின் மருமகளும் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தவே இத்திருமணத்தை அல்லாஹ்வே நடத்தி வைத்தான் என்பதை மேற்கண்ட வசனமும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

நபியின் மனைவியருக்கான ஹிஜாப் சட்டம்

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:53

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை “ஹிஜாப்” (திரையிட்டு இருக்கும்படி) கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!’’ என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் “ஹிஜாப்” தொடர்பான வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4790, 4483)

(நபியவர்கள் ஸைனப் அவர்களை மணமுடித்த போது அளித்த விருந்திற்குப் பின் எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பிவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்துவிட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்து வந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். சிறிது நேரம்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். “நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும்’’ என்பதே அந்த வனமாகும்.
“இந்த வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியர் “ஹிஜாப்” (திரை) இட்டு மறைக்கப்பட்டது தொடர்பாகவும் மக்களிலேயே நன்கறிந்தவன் நானே ஆவேன்’’ என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (2803)

மனைவியருடன் கருத்து வேறுபாடு

உங்களை அவர் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான நம்பிக்கை கொண்ட, கட்டுப்பட்டு நடக்கிற, திருந்திக் கொள்கிற, வணக்கம் புரிகிற, நோன்பு நோற்கிற விதவைகளையும், கன்னியரையும் மனைவியராக அவரது இறைவன் மாற்றித்தரக் கூடும்.

அல்குர்ஆன் 66:5

உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு “ஸாஉ” அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.
என் கண்கள் கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!” என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்தி தான்)” என்றேன்.
அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் தங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்’’ என்று சொன்னேன்.
நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் – நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன் – நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது “உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்’’ (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், “அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்” (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன.

நூல்: முஸ்லிம் 2947

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாகவிலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4916)

உலக வாழ்வா? மறுமை வாழ்வா?

இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்’’ என்று நபியே உமது மனைவியரிடம் கூறுவீராக!
நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 33:28,29

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களில் நல்லவர்களுக்காக மகத்தான கூலியை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் இந்த (33:28,29) வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் (2946)

ஜின் (72வது) அத்தியாயம் அருளப்படுதல்

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு) விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன.
அப்போது தலைவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், ‘வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்களின் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன’ என்று பதிலளித்தனர். ‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே, உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்’ என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
‘திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது ‘உக்காழ்’ சந்ததையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ‘ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர்.
அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) ‘வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்’ என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, ‘எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்’ என்று கூறினர்.
மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, ‘ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது’’ எனக் கூறுவீராக!…’ என்று தொடங்கும் இந்த (72வது) அத்தியாயத்தை அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹீ’யின் மூலம் தான் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

நூல்: புகாரி (4921)

பாரசீகர்கள் குறித்த இறை வசனம்

அவர்களில் மற்றவர்களுக்காகவும் (அவரை அனுப்பினான்) அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 62:3

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4897)

மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 5:3

உமர் (ரலி), ‘இவ்வசனம் (5:3) எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்’ என தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி (45)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *